Published : 16 Nov 2019 07:11 PM
Last Updated : 16 Nov 2019 07:11 PM

ரகசியத்தைச் சொல்லுங்கள்...உங்களால் மட்டும் எப்படி? - ‘பிரியாணிதான்’ இஷாந்த் கேள்விக்கு ஷமி கலகல

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர்களின் வேகப்பந்து வீச்சுக்கு உதவாத பிட்ச் இஷாந்த், உமேஷ், ஷமி வீசும் போது அப்படியே வேறு ஒருபிட்சாக மாறிவிட்டதோ என்று ஆச்சரியப்பட்டோம், இப்போது வங்கதேசத்துக்கு எதிராகவும் உடைந்து விழும் பிட்சில் வேகப்பந்து வீச்சுக் கலையை இன்னொரு தளத்துக்கு நகர்த்திய இந்த மூவர் கூட்டணி பற்றி ஆச்சரியங்கள் பேசுபொருளாகி வருகின்றன.

இந்நிலையில் இந்தூர் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் ஹர்ஷா போக்ளே, ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்காக உமேஷ் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மாவை ஜாலி அரட்டைக்கு அழைத்தார். அதன் விவரம் வருமாறு:

செகண்ட் இன்னிங்ஸ் ஷமியின் ரகசியம் என்ன?

ஷமி: ரகசியம்லாம் ஒண்ணுமில்ல. நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தியபடி இருக்கிறோம். நாம் பரஸ்பரம் ஜோக்குகளைப் பரிமாறிக் கொள்கிறோம். மற்றவர்களி வெற்றியில் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒன்றுதான் நிறைய பேசும்.

நீங்கள் சீனியர்.. இஷாந்த் கூறுங்கள்?

அவர்கள் என்னை சீனியராகவே கருதுவதில்லை. இங்கு சீனியர் ஜூனியர் எல்லாம் இல்லை, ஷமி கூறியது போல் அனைவரும் அனைவரின் வெற்றியில் குதூகலிக்கிறோம்.

100 டெஸ்ட் ஆடிவிட்டீர்கள் இஷாந்த், உங்கள் சிறந்த காலக்கட்டம் இது என்று கூறலாமா?

இஷாந்த்: இதற்குப் பதில் கூறுவது கடினம், நீண்ட காலமாக ஆடிவருகிறேன். வயது 31 ஆகிவிட்டது, சில வேளைகளில் உடல் வயதானதை உணர்கிறது. ஆனால்... ஆமாம் இப்போது நான் வித்தியாசமாக வீசுகிறேன்.

உமேஷ் நீங்கள் 140-145 கிமீ வேகம் வீசுகிறீர்களே?

உமேஷ் யாதவ்: இது என் மரபணுவில் உள்ளது, தந்தையிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டது. அதனால்தான் இங்கு உங்கள் முன்னால் இப்போது இருக்கிறேன்.

இந்தியப் பந்து வீச்சின் முகத்தையே உங்கள் குழு மாற்றி விட்டதே?

உமேஷ் யாதவ்: ஆம் முன்பெல்லாம் 2 அல்லது 3 ஓவர்கள் பிறகு ஸ்பின்னர்கள் வந்து விடுவார்கள். ஆனால் இப்போது நாங்கள் நிறைய திட்டமிடுகிறோம். முதல் 10-15 ஓவர்களில் நாங்கள் ஒவ்வொருவரும் விக்கெட் எடுத்துவிட்டால் ஸ்பின்னர்களுக்கு சுலபமாகி விடுகிறது. விக்கெட் எடுத்தால் அதிக பவுலிங் அளிக்கப்படும் இப்போதைக்கு மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறோம்.

உமேஷ் பேட்டிங் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஷமி?

ஷமி: அவரது சக்தி இந்திய மைதான பவுண்டரிகளை சிறிதாக்கி விடுகிறது. அணி அவரை எப்படி வேண்டுமானாலும் ஆடு என்று சுதந்திரம் அளித்துள்ளது. அடிக்க வேண்டியதுதான், அதைத்தான் அவர் செய்கிறார்....

இஷாந்த் சர்மா: ஷமி நீங்கள் வீசும் அதே பகுதிகளில்தான் நாங்களும் வீசுகிறோம், ஆனால் உங்கள் பந்து கால்காப்பில் பட்டால் ஸ்டம்புக்கு நேராக இருக்கிறது, எங்கள் பந்து பட்டால் ஸ்டம்பை மிஸ் செய்கிறது. எப்படி இது? ரகசியம் உடையுங்கள் ஷமி..

ஷமி: பிரியாணிதான் என்கின்றனர் மக்கள். ஆனால் அது அப்படியல்ல. அது கடவுளின் அருள், அதிர்ஷ்டம். லைன் மற்றும் லெந்தை சரியாக வீச முடிகிறது. நேராக வீசுவதில் எனக்கு வெற்றி கிட்டுகிறது, எனவே அதையே திரும்பத் திரும்பச் செய்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x