Published : 16 Nov 2019 06:44 PM
Last Updated : 16 Nov 2019 06:44 PM

நம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும்போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது: விராட் கோலி பெருமிதம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துல்லியத் தாக்குதலில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், ஷமி, உமேஷ், இஷாந்த் சர்மாவின் ஸ்விங் பந்து வீச்சு பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

பிட்சையெல்லாம் பற்றிய கவலையில்லாமல் வெறும் கையிலேயே வித்தைக் காட்டுபவர்களாக பெரிய பவுலர்களாக இவர்கள் மாறியுள்ளனர், இவர்களுடன் பும்ராவும் இணைந்தால் உண்மையில் 80களின் மே.இ.தீவுகளின் பவுலிங்கை நாம் எட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

என்ன சொல்வதென்று தெரியவில்லை, இன்னொரு துல்லியமான ஆட்டம். பேட்டிங்கில் தொழில்நேர்த்தியுள்ளது, 5 பேட்ஸ்மென்களில் ஒருவர் பொறுப்பை கையில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் அயல்நாட்டுத் தொடர் வரவிருக்கும் நிலையில் விரும்பத்தக்கதாக அமைந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் உச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு சிரம் தாழ்ந்திய வணக்கங்கள், இவர்கள் வீசும்போது எந்தப் பிட்சும் நல்ல பிட்சாகவே தெரிகிறது. ஜஸ்பிரித் (பும்ரா) இங்கு இல்லை, ஆனால் கேப்டனின் கனவு பவுலிங் கூட்டணியாகும் இது.

வலுவான பவுலர்களே எந்த ஒரு அணிக்கும் முக்கியமாகும். எண்ணிக்கைகளும் ரெக்கார்டுகளையும் பாருங்கள். அது புத்தகத்தில் இருக்கும் நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை.

இந்திய கிரிக்கெட்டின் தரத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி வரும் இளைஞர்களையும் இந்த தரநிலைக்கு தயார்படுத்துவதே நோக்கம். அடுத்த டெஸ்ட் போட்டியில் பிங்க் நிறப்பந்தில் ஆடுகிறோம், பிங்க் நிறப்பந்தில் ஆடும் முதல் இந்திய வீரர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x