Published : 16 Nov 2019 05:10 PM
Last Updated : 16 Nov 2019 05:10 PM

இரண்டு இன்னிங்ஸ்களிலும் மயங்க் அகர்வால் ஸ்கோரை எட்ட முடியவில்லை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி

இந்தூர் டெஸ்ட் போட்டி இரண்டே முக்கால் நாளில் முடிந்தது, வங்கதேசம் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலைப் பெற்றது.

மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளாக மேலும் 60 புள்ளிகளைப் பெற்று 300 புள்ளிகளுடன் நெருங்கமுடியாத இடத்தில் உள்ளது.

3ம் நாளான இன்று கேப்டன் விராட் கோலி மேலும் பேட் செய்து வங்கதேசத்தின் வயிற்றெரிச்சலைக் கிளப்பாமல் மிகச்சரியாக டிக்ளேர் செய்து வங்கதேசத்தை களமிறக்கினார். வங்கதேச அணி 69.2 ஓவர்கள்தான் தாக்குப்பிடித்தது, 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முஷ்பிகுர் ரஹிம் மட்டுமே அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்ததோடு, இந்தியப் பந்து வீச்சை கொஞ்சம் தைரியமாகவும் எதிர்கொண்டார். லிட்டன் தாஸ் (35), தைஜுல் இஸ்லாம் (38), ஆகியோரும் இரட்டை இலக்கம் எட்ட மீதி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் காலியாகினர்.

இந்திய அணியில் 2வது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் மொகமட் ஷமி 16 ஓவர் 7 மெய்டன் 31 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் இசாந்த் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 114 ஓவர்களை ஆடியது, ஆனால் வங்கதேசம் மொத்தமே 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 127 ஓவர்கள்தான் ஆடினர். மயங்க் அகர்வால் தனது 243 ரன்களுக்காக அவர் மட்டுமே 55 ஒவர்களை ஆடியுள்ளார். அணிகளுக்கு இடையே உள்ள அதலபாதாளம் இதிலிருந்து தெரிகிறது. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இரு அணிகளுக்கும் இடையே உள்ளது.

ஆட்ட நாயகனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 2019-ல் 15.82 ரன்கள் சராசரி வைத்துள்ளனர். அதாவது 15.82 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று வீழ்த்தியுள்ளனர். அதாவது உலகிலேயே சிறந்த சராசரியாகும் இது.

343 ரன்கள் முன்னிலை போதுமானது என்று டிக்ளேர் செய்த விராட் கோலி அதன் பிறகு ஷமி, யாதவ், இஷாந்த் படையை நம்பி களவியூகம் அமைத்தார், வங்கதேச பேட்ஸ்மென்களும் , ’நாங்க இல்ல?’ ‘நாங்களே அவுட் ஆக மாட்டோம்?’ என்று கோலிக்கு அதட்டலாக சமாதானம் சொல்வது போல் இருந்தது அவர்கள் பேட்டிங். இஷாந்த் சர்மா ஓவர் த விக்கெட்டில் வீசிய போது வலது காலை பிட்சில் ஊன்றி கொதகொதவென்று செய்கிறார் என்று எச்சரிக்கப்பட்டார், அதனால் அவர் ரவுண்ட் த விக்கெட்டுக்கு வந்தார், இஷாந்த் சர்மா ஒரு பந்தை திடீரென பிட்ச் செய்து அதன் கோணத்தில் உள்ளே செலுத்த சற்றும் எதிர்பாராத ஷத்மன் இஸ்லாம் பவுல்டு ஆனார்.

முன்னதாக இம்ருல் கயேஸ் 6 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தை ட்ரைவ் ஆட முயன்று பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டு பவுல்டு ஆகி வெளியேறினார். கேப்டன் மோமினுல் ஹக் 7 ரன்களில் ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கினார், நிறைய நகர்ந்து வந்து ஆட முயன்றதால் கால்காப்பில் பட்ட போது எல்.பி.ஆகி வெளியேறினார். மொகமது மிதுன் ஷமியின் பவுன்சரை ஹூக் ஆட முயன்று மிட்விக்கெட்டில் கொடியேற்றி வெளியேறினார் வங்கதேசம் 44/4 .

வங்கதேச அணியில் சொல்லிக்கொள்ளும்படி ஆடியது முஷ்பிகுர் ரஹிம், இவருக்கும் ரோஹித் சர்மா 4 ரன்களில் கேட்சை விட்டார், ஆனால் முஷ்பிகுர் பிரமாதமான உறுதியுடன் தைரியமாக ஆடினார். கட் ஷாட்கள், மிட்விக்கெட் பிளிக்குகள், அஸ்வினை அலட்சியமாக ரிவர்ஸ் ஸ்வீப் என்று அசத்தி 7 பவுண்டரிகளுடன் 64 ரன்களில் அஸ்வின் பந்தை தூக்கி அடிக்க முயன்று புஜாராவின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார்.

வங்கதேசத்தின் மற்ற வீரர்கள் தேறவில்லை, தைஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ் முறையே 38 மற்றும் 35 ரன்களை எடுத்தனர் வங்கதேசம் 213 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

அடுத்த டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் 22ம் தேதி பகலிரவு போட்டியாக பிங்க் நிறப்பந்தில் ஆடப்படவுள்ளது, ஆட்டம் மதியம் 1 மணிக்குத் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x