Last Updated : 16 Nov, 2019 02:43 PM

 

Published : 16 Nov 2019 02:43 PM
Last Updated : 16 Nov 2019 02:43 PM

மறக்க முடியுமா இந்த நாளை: லிட்டில் மாஸ்டர் சச்சின் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றது இன்றுதான்

கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த தருணம் : கோப்புப்படம்

"காலம் வேகமாகக் கடந்துவிட்டது. ஆனால், நினைவுகளை என்னிடம் நீங்கள் விட்டு சென்றுள்ளீர்கள் அந்த நினைவுகள் எப்போதும் என்னிடம் இருக்கும். அதிலும் எப்போதும் களத்துக்குள் நான் வந்தவுடன் சச்சின், சச்சின் என்று நீங்கள் உச்சரிக்கும் வார்த்தை என் கடைசி சுவாசம் இருக்கும் வரை கேட்கும் "

2013-ம் ஆண்டு, நவம்பர் 16-ம் தேதி சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது பேசிய வார்த்தைகள்தான் இவை.....

'கிரிக்கெட்டின் கடவுள்', 'லிட்டில் மாஸ்டர்', 'மாஸ்டர் பிளாஸ்டர்' என ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுவர் சச்சின் டெண்டுல்கர். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்ற நாள் இன்றுதான்.

சச்சினின் ஓய்வு இந்தியக் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டுக்கும் இழப்புதான். சச்சின் கிரிக்கெட் விளையாடும் அழகைப் பார்த்து, ஆத்மார்த்தமாக எடுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட வந்த சர்வதேச வீரர்கள் ஏராளம்.

சச்சினும் ஒருமுறையாவது விளையாடிவிடமாட்டோமா என்று ஏங்கி அவருடன் விளையாடிய உள்ளூர், வெளிநாட்டு வீரர்கள் கணக்கில் அடங்காது.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், சச்சினை அழைத்துப் பாராட்டி, தன்னைப் போன்ற ஸ்டைலில் விளையாடும் வீரரை என் வாழ்நாளில் பார்க்கிறேன் என்று பெருமையோடு புகழாரம் சூட்டினார். அதன் பிறகே ஆஸ்திரேலிய குடும்பங்களில் சச்சினும் ஒரு பிள்ளை போன்றவராகப் பாவிக்கப்பட்டார்.

ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் சச்சின் டெண்டுல்கர் படைக்காத சாதனைகளே இல்லை. 25 ஆண்டுகள், இந்திய அணிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் சச்சின் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

தொலைக்காட்சி முன் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்த ரசிகர்கள் சச்சின் ஆட்டமிழந்துவிட்டால், டி.வி.யை ஆஃப் செய்துவிட்டு வெளியே சென்ற நிகழ்வுகள் ஏராளம். சச்சினுக்காவே கிரிக்கெட் பார்த்தவர்கள், கிரிக்கெட் பழகியவர்கள், விளையாடியவர்கள் என் ரசிகர்களையும் வீரர்களையும் குறிப்பிடலாம்.

இந்திய அணி என்றால் சச்சின்தான் என்ற நிலை ஒருகட்டத்தில்தான் இருந்தது. சச்சின் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால், தார்மீக ரீதியாக, மனோரீதியாக மற்ற வீரர்களுக்கு நம்பிக்கை குறைந்த விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்த ஆட்டங்களும், இந்திய அணிதோல்வி அடைந்த போட்டிகளும் இருந்தன.

அதேசமயம் சச்சின் களத்தில் இருக்கும்வரை என்ன நடக்குமோ, எப்போது சிக்ஸர், பவுண்டரி பறக்குமோ என்ற கலக்கத்துடனே எதிரணி பந்துவீச்சாளர்கள் பந்துவீச வேண்டிய தருணங்களும் இருந்தன.

சச்சின் களமிறங்கி அவரின் பேட்டிங் ஸ்டைல், ஷாட்களின் தேர்வைப் பார்த்து ரசிப்பதே அழகு. குறிப்பாக அவரின் 'கவர் டிரைவ்', 'ஃபார்வேர்ட் ஷாட்', 'ஸ்ட்ரைட் டிரைவ்' ஷாட்களை இன்னும் பார்த்து ரசிக்கலாம். இந்தியக் கிரிக்கெட்டின் பெயரை உலக அளவில் பெருமையுடன் உச்சரிக்கச் செய்தவர்களில் சச்சினும் ஒருவர்.

உலக நாடுகளின் அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் பந்துவீச அச்சப்பட்ட ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோல, சச்சின் விளையாடும் ஷாட்களை பார்த்து ரசித்து கைதட்டாத பந்துவீச்சாளர்களும் இல்லை.

சச்சினை களத்தில் வெறுப்பேற்றினால், ஸ்லெட்ஜிங் செய்தால், என்னாகும் என்பதைச் சிலபந்துவீச்சாளர்கள் விளைவுகள் தெரியாமல் செய்து வாங்கிக்கட்டிக் கொண்டதும் உண்டு.

குறிப்பாக ஜிம்பாப்வே வீரர் ஹென்ரி ஓலங்கா, பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் உள்ளிட்ட பலர், ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ, ஷேன் வார்ன் என ஏராளமானோரைச் சொல்ல முடியும்.

ஆனால் சச்சின் விளையாட்டைப் பார்த்து இவர்களே காலப்போக்கில் அவரின் புகழ்பாடியது தனிக்கதை.

இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற தருணம் ரசிகர்களை மவுனம் கட்டிப்போட்டது.

களத்தில் நா தழுதழுத்த குரலில் ரசிகர்களிடம் சச்சின் பேசியபோது, அரங்கில் மட்டுமல்ல தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும் அழுத சம்பவங்களும் நடந்தன.

கடந்த 2012ம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் ஏற்கனவே சச்சின் ஓய்வு பெற்றுவிட்டதால், சச்சின் இந்த ஒட்டுமொத்த பிரியாவிடை தருணம் ரசிகர்களை உலுக்கியது.

தன்னுடைய பிறந்த மண்ணான மும்பையில் நடந்த மேற்கிந்தியத்தீவுகளுடான டெஸ்ட் தொடருடன் சச்சின் விடைபெற்றார். 2 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 182 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 108 ஓவர்களில் 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

புஜாரா 113 ரன்களும், ரோஹித் சர்மா 111 ரன்களும் சேர்த்தனர். சச்சின் டெண்டுல்கர் நடுவரிசையில் களமிறங்கி 74 ரன்களில் வெளியேறினார். நரேன் பந்துவீச்சில் சாமி கேட்ச் பிடிக்க சச்சின் ஆட்டமிழந்தார். ஆனால் சச்சினை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தமைக்க சாமி கண்ணீர்விட்டு அழுதார்.

வழக்கமாக எதிரணி வீரர் யாரேனும் ஆட்டமிழந்தால் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் மே.இ.தீவுகள் வீரர்கள் சச்சின் ஆட்டமிழந்தவுடன் அமைதி காத்தனர். எந்தவிதமான கொண்டாட்டமும் செய்யவில்லை. சச்சினை அழைத்து பெவிலியன் வரை விட்டு நரேன் திரும்பி வந்தார்.

சச்சின் சதம் அடிப்பார் என்று அரங்கில் இருந்த ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சின் பெவிலியனுக்கு நிரந்திரமாக திரும்பியபோது, ரசிகர்கள் எழுந்து நின்று அரங்கு அதிரும்வரை கரகோஷம் எழுப்பியது மறக்க முடியாத தருணம்.

அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 126 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட்டில் நினைவு கூறக்கூடிய வீரர்களில் சச்சி்ன் முதன்மையானவர் என்பதில் சந்தேகமில்லை. ஐசிசி ஹால் ஆஃப் பேமில் 6-வது இந்திய வீரராக சச்சின் இடம் பெற்றார்.

தனது 16-வது வயதில் கிரிக்கெட் களத்துக்குள் அடியெடுத்து வைத்த சச்சின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடினார். அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து சச்சின் 34 ஆயிரத்து 357 ரன்கள் சேர்த்துள்ளார்.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 51 சதங்கள், 68 அரைசதங்கள் உள்பட 15 ஆயிரத்து 291 ரன்கள் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டியில் 463 போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 49 சதங்கள், 96 அரைசதங்கள் அடங்கும். சச்சினின் இன்னொரு அரிய பெருமை என்னவெனில் எந்த ஒரு பவுலர் பந்திலும் அவர் உடம்பில் அடிவாங்கியதில்லை. you cannot hit sachin என்று ஒருமுறை வாசிம் அக்ரம் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்கள் மனதில் சச்சினுக்காக போடப்பட்ட இருக்கை அவர் ஓய்வுக்குப்பின் இன்னும் காலியாகவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x