

இந்தூரில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இந்தூரில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் சேர்த்திருந்து. களத்தில் ஜடேஜா 60 ரன்களிலும், உமேஷ் 25 ரன்களிலும் இருந்தனர். இன்று காலை ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் மயங்க் அகர்வால் 243 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது. இவருக்கு உறுதுணையாக புஜாரா 54 ரன்களும், ரஹானே 86 ரன்களும் சேர்த்தனர்.
வங்கதேசம் அணியைக் காட்டிலும் 343 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இருக்கிறது.
இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வங்கதேசம் இந்த முன்னிலை ரன்களை எடுத்து அதன்பின், அந்த அணி முன்னிலை சேர்த்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி தருவதாக இருக்கும். ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
ஆடுகளம் முதல் நாளில் மட்டுமே பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். மற்ற நாட்களில் காலை நேரப் பனியின் காரணமாக முதல் ஒரு மணிநேரத்துக்கு ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். வெயில் அதிகமாகும்போது ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கு பந்து நன்கு திரும்பும் என்று தெரிவிக்ககப்பட்டு இருப்பதால், அஸ்வின், ஜடேஜா இன்று பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தலாம் என்று நம்பப்படுகிறது.