Published : 15 Nov 2019 03:28 PM
Last Updated : 15 Nov 2019 03:28 PM

விராட் கோலிக்கு களநடுவர் நேரடியாக எல்.பி. அவுட் தீர்ப்பளிக்காதது ஏன்?- புது ட்ரெண்ட்?

ஒருகாலத்தில் அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு நடுவர்களே கிரிக்கெட் போட்டிகளில் நடுவர் பணிக்கு நியமிக்கப்பட்ட போது, சில நடுவர்கள், அனைவரும் அல்ல, சில நடுவர்கள் தங்கள் நாட்டு அணியின் கேப்டனுக்குச் சாதகமாக நடந்து கொண்டதைப் பார்க்க முடிந்துள்ளது. ஏனெனில் தன்னையே கேப்டன் அடுத்தடுத்த போட்டிகள் தொடர்களில் நடுவராக நியமிக்க கோர வேண்டும் என்ற ஒரு சுயநலம் இருக்கும். அப்போது அது வெளியே தெரியாது.

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு ஜால்ரா போடும் நடுவர்கள், ஆஸ்திரேலியாவில் கேப்டன்கள் கிரெக் சாப்பல், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குச் சில நடுவர்கள் ஜால்ரா தட்டுவதைப் பார்த்திருக்கிறோம்.

இலங்கையில் அர்ஜுணா ரணதுங்காவுக்கு அவுட்டை நாட் நாட் அவுட் என்று தொடர்ச்சியாக தீர்ப்பளித்தப் போது பாம்பின கால் பாம்பறியும் என்பது போல் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் இலங்கை நடுவரிடம் களத்தில் மிக நேரடியாக ‘அடுத்து வரும் போட்டியிலும் நீங்களே நடுவராக இருக்க நான் உறுதியளிக்கிறேன் ரணதுங்காவுக்கு அவுட் தர முடியுமா முடியாதா?’ என்று கேட்டது ரெக்கார்டில் உள்ளது.

கிரேக் சாப்பலுக்கு அவுட்டே தரமாட்டார்கள் அவர் இரட்டைச் சதம் அடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். இதனை அந்த புகழ்பெற்ற 1981 தொடரின் போது சுனில் கவாஸ்கர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். சாப்பலுக்கு அவுட் கொடுக்க முடியுமா, முடியாதா என்று கேட்டுள்ளார்.

ஆனால் அதன் பிறகு நடுநிலை நடுவர்கள் காலம் வந்ததால் கிரிக்கெட்டின் நடுவர் தவறுகள் பாரபட்சம் என்ற ஒரு பார்வையிலிருந்து விடுபட்டாலும் தவறுகளிலிருந்து விடுபடவில்லை. அடுத்ததாக தொழில்நுட்பக் காலக்கட்டம், இது பழைய சொந்த நாட்டு நடுவர்கள் இருந்தக் காலக்கட்டத்தை விடவும் மோசமாக உள்ளது. ஆஷஸ் தொடரில் சுமார் 20-25 நோபால்களை களநடுவர்கள் கவனியாமல் தவற விட்டுள்ளனர்.

தற்போது சமீப காலங்களாக இந்தியாவில் விளையாடும் போது கேப்டன் விராட் கோலிக்கு எல்.பி. அளிக்கக் கூடாது என்ற ஒரு போக்குத் தென்படுகிறது. இது கடந்த மே.இ.தீவுகள், இலங்கைத் தொடர்களில் ஆங்காங்கே உதிரியாக இருந்து வந்தது, சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து பட்டவர்த்தனமாகத் தெரிகிறது, விராட் கோலி கால்காப்பில் ஸ்டம்புக்கு நேராக வாங்கினாலும் எதிரணியினர் ரிவியூ கேட்டுத்தான் அவுட் வாங்க வேண்டியுள்ளது, அல்லது அது அம்பய்ர்ஸ் கால் ஆகிவிடுகிறது.

நாம் தென் ஆப்பிரிக்கா தொடரின் போதே கேட்டோம், ஏன் கோலிக்கு அவுட் கொடுத்து கோலி ரிவியூ செய்ய வேண்டியதுதானே? என்று. எதிரணியினரே எப்போதும் ரிவியூ செய்துதான் அவருக்கு அவுட் கேட்க முடியும் என்பது நேர்மையான ஒரு போக்கு அல்ல. தென் ஆப்பிரிக்கா இங்கு கடைசியாக வந்து ஆடிய தொடரில் ஒரு 3,4 சந்தர்பங்களில் கால்காப்பில் கோலி வாங்கிய போதெல்லாம் களநடுவர் நாட் அவுட் என்று கூறி எதிரணியினர் ரிவியூ செய்துதான் முடிவை அறிய நேரிட்டது. மாறாக கோலிக்கு அப்படி நிகழ்வதில்லை, இதற்கு உதாரணமாக,

இன்று (வெள்ளி), இந்தூரில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்ததையும் குறிப்பிடலாம். இன்று விராட் கோலி 2 பந்துகள்தான் ஆடினார், டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அபு ஜயீத் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கூர்மையாக உள்ளே ஸ்விங் ஆக தடுப்பாட்டம் கைவிட பின் கால்காப்பைப் பந்து தாக்கியது, சாதாரணப் பார்வைக்கே அது அவுட் தான், இதில் நடுவருக்கு சந்தேகம் வர எந்த வித காரணமும் இல்லை. ஆனால் நாட் அவுட் என்று கூறுகிறார், பாவம் வங்கதேச அணியினர் ரிவியூ செய்வதா வேண்டாமா என்று குழம்பி கடைசியில் மோமினுல் ஹக் தைரியமாக வருவது வரட்டும் என்று ரிவியூ கேட்க அது பிளம்ப் எல்.பி., ஏன் களநடுவர் கொடுக்கவில்லை? ஏன் ஒவ்வொரு முறையும் விராட் கோலிக்கு எதிரணியினர் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சமீபமாக நடுவர்கள் விராட் கோலிக்கு எல்.பி. அவுட் கொடுக்க மறுத்து வருகின்றனர். இன்றும் வங்கதேசம் களநடுவர் நாட் அவுட் என்று கூறிவிட்டார். ரிவியு செய்தால் அம்பயர்ஸ் கால் என்று வரும் என்று விட்டிருந்தால் விராட் கோலி இன்னுமொரு 250 ரன்களை போட்டு வெளுத்து வாங்கியிருப்பார். ஏற்கெனவே அணிகள் பலவீனமாகி வருகின்றன, அணிகள் குறைந்து வருகின்றன, டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் இருக்க இருக்க சரிவடைந்து கொண்டே வருகிறது, பிட்ச்கள் மகாமட்டமாகப் போடப்படுகின்றன. இதற்கு நடுவே நடுவர்கள் முக்கிய வீரர்களுக்கு எல்.பி.தரமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் சிறிய அணிகள், பயணத்துக்கு வரும் அணிகள் என்னதான் செய்ய முடியும். விளையாடும் சூழ்நிலை, அதாவது பிட்ச், சீதோஷ்ணம், நம் அணியின் பலம் ஆகியவற்றை எதிர்கொள்வது வேறு, நடுவர்களையும் சேர்த்து எதிர்கொள்வது வேறு.

தென் ஆப்பிரிக்கா அணி இவ்வாறுதான் ரோஹித் சர்மா, விராட் கோலி, மயங்க் அகர்வால் ஆகியோருக்கு களநடுவர் அவுட் கொடுக்காமல் விட்டதனால் பயங்கரமாகத் திக்குமுக்காடியது.

கிரெக் சாப்பல் பெரிய பிளேயர்தான், இம்ரான் கான் பெரிய கேப்டன் தான், அர்ஜுனா ரணதுங்கா இலங்கைக்கு பெரிய கேப்டன் தான், ஸ்டீவ் வாஹ், பாண்டிங் சாதனையாளர்கள்தான், இதனை மறுக்க முடியாது, ஆனால் இப்படியொரு கறை அவர்களிடத்தில் உள்ளது. அதே போல் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த ஒரு பேட்ஸ்மென் அவரது கிரிக்கெட் கரியரின் பின்னணியிலும் இப்படிப்பட்ட கறையை ஏற்படுத்தாமல் நடுவர்கள் தங்கள் கடமையை சரியாக ஆற்ற வேண்டும் என்பதே பலரது விருப்பமாகும். தொழில்நுட்பக் காலக்கட்டத்தில் தவறுகள் நடந்தால் அது மானுடத் தவறாகப் பார்க்கப்படமாட்டாது, பாரபட்சமான தவறு என்றே பார்க்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x