32, 91 ரன்னில் கோட்டைவிட்ட வங்கம்: 8 டெஸ்டில் 3-வது சதம் விளாசினார் மயங்க் அகர்வால்;புதிய மைல்கல்

சதம் அடித்த மகிழ்ச்சியில் மயங்க் அகர்வால் : படம் உதவி ட்விட்டர்
சதம் அடித்த மகிழ்ச்சியில் மயங்க் அகர்வால் : படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

இந்தூரில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சதம் விளாசினார்.

32 ரன்களிலும், 91 ரன்களிலும் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்த வாய்ப்பை வங்கதேச வீரர்கள் கோட்டைவிட்டதற்கு தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

அகர்வாலுக்கு துணையாக பேட் செய்த துணைக் கேப்டன் ரஹானே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி 68 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்துள்ளது.

வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணியைக் காட்டிலும் 80 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இருக்கிறது

தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். கடந்த ஆண்டுதான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அகர்வால் அடிக்கும் 3-வது சர்வதேச சதமாகும்.

மயங்க் அகர்வால் 32 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஸ்லிப்பில் அடித்த கேட்ச்சை இம்ரூல் கைஸ் கோட்டை விட்டார். அதன்பின் உணவு இடைவேளைக்குப்பின் மீண்டும் அகர்வால் விளையாட வந்தார், 91 ரன்களை அகர்வால் சேர்த்திருந்தபோது, கால்காப்பில் வாங்கினார், ஆனால் டிஆர்எஸ் ரிவியு மூலம் அகர்வால் தப்பித்து சதம் அடித்துள்ளார்.

உணவு இடைவேளைக்குப்பின் வந்து 91 ரன்களில் நிதானமாக ஆடத் தொடங்கிய அகர்வால், ஹூசைன் பந்துவீச்சில் பிளிக் ஷாட் மூலம் 2 ரன்கள் சேர்த்தபோது சர்வதேச அரங்கில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். இதில் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதுவரை 8 டெஸ்ட் போட்டிகள் 12 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அகர்வால் 715 ரன்களும், சராசரியாக 60 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் 6 அரைசதங்கள்அடங்கும்.

மேலும் தொடக்க வீரராக களமிறங்கிய சில இன்னிங்ஸ்களில் 3-வது சதம் அடித்த 4-வது இந்திய வீரர் எனும் மைல்கல்லை அகர்வால் பெற்றார். இதற்கு முன் ரோஹித் சர்மா 4 இன்னிங்ஸ்களிலும், கவாஸ்கர் 7 இன்னிங்ஸ்களிலும் 3 சதம் அடித்திருந்தனர்.
அதேபோல கே.எல்.ராகுல் 9 இன்னிங்ஸ்களிலும், அகர்வால், மெர்சன்ட் 12 இன்னிங்ஸ்களிலும் 3-வது சதம் அடித்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in