Last Updated : 15 Nov, 2019 10:48 AM

 

Published : 15 Nov 2019 10:48 AM
Last Updated : 15 Nov 2019 10:48 AM

தடை முடிந்தது;மீண்டும் வருகிறார் பிரித்வி ஷா: முஷ்டாக் அலி தொடரில் வாய்ப்பு

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்து தடைவிதிக்கப்பட்டு இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா, தடை முடிந்து முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாட உள்ளார்.

பிரித்வி ஷாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை வரும் 17-ம் தேதியோடு முடிவதால், முஷ்டாக் அலி டி20தொடரில் பங்கேற்கும் மும்பை அணியில் பிரித்வி ஷா இடம் பெற்றுள்ளார்

பிசிசிஐ சார்பில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தடைசெய்யப்பட்ட மருந்தை பிரித்வி ஷா எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு முன் தேதியிட்டு 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை ஜூலை மாதம் விதிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் வரும் 17-ம் தேதியோடு முடிகிறது.

பிசிசிஐ விதித்திருந்த தடையால், உள்நாட்டில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷாவால் பங்கேற்க முடியாமல் போனது.

இதற்கிடையே தற்போது முஷ்டாக் அலி டி20 தொடர் நடந்துவருகிறது. இதில் மும்பை அணி சூப்பர் லீக் ஆட்டங்களுக்கான அணியை அறிவித்துள்ளது. இதில் 20வயதான பிரித்வி ஷா அணியில் இடம் பெற்றுள்ளார்.

வரும் 17-ம் தேதி அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியில் பிரித்வி ஷா விளையாட உள்ளார். இந்த போட்டி மும்பை வான்ஹடே மைதானத்தில் நடைபெற உள்ளது.முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணி தான் விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரித்வி ஷா கடந்த 9-ம் தேதிதான் 20-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில், " இன்று எனக்கு 20-வது பிறந்தநாள். பரித்வி ஷா 2.0 நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார். எனக்கு ஆதரவு அளித்த, வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. விரைவில் களத்துக்குத் திரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்

மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ஆதித்யா தாரே, ஜெ பிஸ்டா, சித்தேஸ் லாட், ஷிவம் துபே, சுபம் ரஞ்சனே, சுஜித் நாயக், ஷாம்ஸ் முலானி, மட்கர், சர்துல் தாக்கூர், தவால் குல்கர்னி, துஷார் தேஷ்பாண்டே, ஏக்நாத் கேர்கர் ஆகியோர் உள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x