Last Updated : 14 Nov, 2019 05:27 PM

 

Published : 14 Nov 2019 05:27 PM
Last Updated : 14 Nov 2019 05:27 PM

டி20 யில் சிறப்பாக விளையாடினால் அது டெஸ்ட்டுக்கான அளவுகோல் அல்ல;பும்ரா விதிவிலக்கு: சச்சின் காட்டம்

சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்

டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டால் அவர்களை டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யலாம் என்ற அளவுகோல் வைக்க முடியாது. இதில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே விதிவிலக்கு என்று சச்சின் டெண்டுல்கர் விளாசியுள்ளார்

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி நாளையுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-தேதி சச்சின்டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் போட்டி அளவுகோலா என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் ஒருவீரர் சிறப்பாக விளையாடிவிட்டால் அவரை ஒருநாள் போட்டிக்கும், டெஸ்ட் போட்டிக்கும் தேர்வு செய்வதை ஏற்க முடியாது. இதில் சில வீரர்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவைப் போன்ற வீரர்கள் இருக்கலாம்.

நான் நினைக்கிறேன் சிலர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டால் அவர் இந்திய டி20 அணிக்குத் தகுதியானவர் என நினைக்கிறார்கள். இது சரியானதுதான். ஆனால், சிலர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டு, அந்த திறமையின் அடிப்படையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் தேர்வு செய்வது கேள்விக்குறியானது.

இதுபோன்ற தேர்வுமுறையை நான் ஆதரிக்கமாட்டேன். ஒருசிலருக்கு மட்டுமே அற்புதமான ஆற்றல் இருக்கும். அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற வகையில் சராசரி வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால், அதை டி20 போட்டிக்கு மட்டுமே அளவுகோலாக எடுக்க வேண்டும்

கடந்த 1998-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட்தொடருக்காக நான் மிகக்கடினமாகத் தயாரானேன். அந்த டெஸ்ட் தொடர் எனக்கும் வார்னேவுக்கும் இடையிலான போட்டியாகப் பார்க்கப்பட்டது. அந்த தொடரில் ஷேன் வார்ன் நிச்சயம் என்னை ரவுண்ட் த விக்கெடில் குறிவைப்பார் என்று எதிர்பார்த்தேன். அதனால் நான் மும்பை பந்துவீச்சாளர்களான சாய்ராஜ் பகதுலே, நிலேஷ் குல்கர்னி ஆகியோரை வலைப்பயிற்சியில் பந்துவீசக் கூறி பயிற்சி எடுத்து தயாராகினேன்.

நான் எப்போதும் ஒப்பிட்டு பேசுவதில் விருப்பமற்றவன். ஆனால், நீங்கள் என்னிடம் கேட்டால், பெர்த் நகரில் அடித்த சதம் என்னைப் பாதித்தது. எந்த ஆடுகளத்திலும் இறங்கி அடிக்கும் துணிச்சலை அளித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய வருகையை நான் சத்தம்போட்டு அறிவிக்க அந்த சதம் எனக்கு உதவியது, அறிவிக்கவும் விரும்பினேன்.
கடந்த 1991- ஆண்டு பெர்த்தில் நான் அடித்த சதத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. என் வாழ்வில் மறக்க முடியாது.

சென்னையில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதுகு வலியோடு நான் அடித்த சதம், 2004-ம் ஆண்டில் சிட்னியில் அடித்த இரட்டை சதம், 2011-ம் ஆண்டு கேப்டவுனில் டேல் ஸ்டெயினுக்கு பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடியது அழகும், சவாலும் நிறைந்தது அந்த நினைவுகள் மறக்க முடியாதது.

நான் ஒருவீரர்தான் பல தலைமுறை வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன். கபில் தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த், திலிப் வெங்சர்க்கார், முகமது அசாருதீன் ஆகியோருடன் விளையாடி இருக்கிறேன்.

என்னுடைய தலைமுறையில் கங்குலி, ராகுல் திராவிட், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், சேவாக், நெஹ்ரா ஆகியோருடன் விளையாடினேன்.

அதன்பின் ரெய்னா, விராட்கோலி, ரோஹித் சர்மா, ரஹானேஆகியோருடன் நான் விளையாடி இருக்கிறேன். இவர்கள் அனைவரையும் நான் இழக்கிறேன். இவர்களின் புன்னகை, தீவிரம், கொண்டாட்டம், கிண்டல், நகைச்சுவை, விளையாட்டு அனைத்தையும் இழக்கிறேன். எங்களுடைய ஓய்வு அறை எனக்கு ஒரு கோயில்

இவ்வாறு சச்சின் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x