Last Updated : 14 Nov, 2019 03:46 PM

 

Published : 14 Nov 2019 03:46 PM
Last Updated : 14 Nov 2019 03:46 PM

ஜடேஜாவுக்கு வேலையே வைக்கல:150 ரன்களில் சுருண்ட வங்கதேசம்;10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபம்

இந்தூரில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்னில் ஆட்டமிழந்தது.

சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா என இருவர் இருந்தும், இதில் ஜடேஜாவுக்கு வேலையே வைக்காமல் 4 பந்துவீச்சாளர்களே அனைத்து விக்கெட்டுகளையும் அள்ளினார்கள்.

முதல்நாளில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உணர்ந்த இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி அளித்தனர். உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, ஷமி, ஆகியோர் நண்பகல் உணவு இடைவேளை வரை விக்கெட்டுகளை வீழ்த்தி திணறவைத்தார்கள்.

உணவு இடைவேளைக்குப்பின், அஸ்வின், ஷமி ஜோடி சேர்ந்து வங்கதேச அணியின் வங்கத்தை வாட்டி வதைத்தனர். வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸ் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

இந்தியத் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் பீல்டிங் இன்று மோசமாகத்தான் இருந்தது. ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானே 2 கேட்சுகளை தவறவி்ட்டால், 22 யார்ட்ஸ் வட்டத்தில் இரு கேட்சுகள் என மொத்த 4 கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டும், அந்த வாய்ப்பை வங்கதேச வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை

ஒரு கட்டத்தில் 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி, அடுத்த 10 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிலும் 140 ரன்களில் வங்கதேசம் 6,7,8-வது விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணிக்கு எதிராக 2007-ம் ஆண்டுக்குப்பின், வங்கதேசம் அணி (118 ஆல் அவுட்) முதல் இன்னிங்ஸில் எடுத்த 2-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்தூரில் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோமினுள் ஹக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஷாத்மான் இஸ்லாம், இம்ருல் கயேஸ் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில் இருந்தே உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் வகையில் பந்து வீசினார்கள். இதனால், பந்துகளைச் சமாளித்து விளையாட இஸ்லாம், இம்ருல் இருவரும் சிரமப்பட்டனர்.

உமேஷ் வீசிய 6-வது ஓவரில் இம்ருல் கயேஸ் ( 6 ரன்கள்) மூன்றாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 ரன்களில் வங்கதேசம் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது.

அடுத்த 7-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். பவுன்ஸராக வந்த பந்தை இஸ்லாம் தவிர்க்க முயன்றாலும் பேட்டில் பட்டு அது விக்கெட் கீப்பர் சாஹாவிடம் தஞ்சமடைந்தது. 6 ரன்னில் இஸ்லாம் வெளியேறினார். 12 ரன்னுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது வங்கதேசம் அணி.

அடுத்து முகமது மிதுன் களமிறங்கி மோமினுள் ஹக்குடன் சேர்ந்தார். இருவரும் சிறிதுநேரம் மட்டுமே களத்தில் இருந்தனர். இவர்களைப் பிரிக்க ஷமி அழைக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது. இதற்கிடையே கேப்டன் மோமினுள் ஹக் அவ்வப்போது சில பவுண்டரிகள் அடித்தார்.

ஷமி வீசிய 18-வது ஓவரில் மிதுன் சரியாக கால்காப்பில் வாங்கினார். இதற்கு எந்தவிதத்திலும் அப்பீலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், 12 ரன்னில் ஆட்டமிழந்தார். 31 ரன்னில் 3-வது விக்கெட்டை இழந்தது வங்கதேசம்.
அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம், மோமினுல் ஹக்குடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஆடினார். உணவு இடைவேளைக்குப்பின் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார்.

அதற்கு பலனும் கிடைத்தது. அஸ்வின் வீசிய ஓவரில் மோமினுல் ஹக் நேர் நேர் தேமா பந்தில் 37 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர்.

இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது, அஸ்வின் உள்நாட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.இதற்கு முன் கும்ப்ளே, ஹர்பஜன் மட்டுமே அந்த பெருமையைப் பெற்றிருந்தனர்.அதன்பின் வங்கதேச பேட்டிங் ஆட்டம் கண்டது. அடுத்துவந்த மகமதுல்லா 10 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

நிலைத்து பேட் செய்துவந்த முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னில் முகமது ஷமி பந்துவீச்சில் போல்டானார். முஷ்பிகுர் ரஹிம் அஸ்வினை ஒரு நேர் சிக்ஸ், பிறகு அருமையான ஒரு லேட் கட் பவுண்டரி, பிறகு ஒரு பெடல் ஸ்கூப் ஷாட் என்று பிரமாதமான ஷாட்களை ஆடினார்.

140 ரன்னில் 6-வது வி்க்கெட்டை இழந்தது வங்கதேசம். அதன்பின் 7-வது விக்கெட்டுக்கு மெஹதி ஹசன் ஒருரன்னில் ஷமி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இசாந்த் சர்மா வீசிய பந்தில் கோலியிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து லிட்டன் தாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். 140 ரன்களில் 6,7,8-வது விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்தது.

8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தய்ஜுல் இஸ்லாம் ஒரு ரன்னில் ரன்அவுட் ஆகினார். கடைசிவிக்கெட்டுக்கு களமிறங்கிய ஹூசைன் 2 ரன்னில் உமேஷ் பந்துவீச்சில் போல்டாக வங்கதேசம் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x