Published : 14 Nov 2019 12:21 PM
Last Updated : 14 Nov 2019 12:21 PM
இந்தூரில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
மதிய உணவு இடைவேளையின்போது வங்கதேசம் அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தது.
கேப்டன் மோமினுள் ஹக் 22 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்திக்கொண்ட இசாந்த் சர்மா, ஷமி, உமேஷ் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர். மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இந்தூரில் இந்தியா- வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோமினுள் ஹக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஷாத்மான் இஸ்லாம், இம்ருல் கைஸ் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆடுகளம் முதல் நாளில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.
தொடக்கத்தில் இருந்தே உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் வகையில் பந்து வீசினார்கள். இதனால், பந்துகளைச் சமாளித்து விளையாட இஸ்லாம், இம்ருல் இருவரும் சிரமப்பட்டனர்.
உமேஷ் வீசிய 6-வது ஓவரில் இம்ருல் கைஸ் ( 6 ரன்கள்) மூன்றாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 ரன்களில் வங்கதேசம் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது.
அடுத்த 7-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். பவுன்ஸராக வந்த பந்தை இஸ்லாம் தவிர்க்க முயன்றாலும் பேட்டில் பட்டு அது விக்கெட் கீப்பர் சாஹாவிடம் தஞ்சமடைந்தது. 6 ரன்னில் இஸ்லாம் வெளியேறினார். 12 ரன்னுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது வங்கதேசம் அணி.
அடுத்து முகமது மிதுன் களமிறங்கி மோமினுள் ஹக்குடன் சேர்ந்தார். இருவரும் சிறிதுநேரம் மட்டுமே களத்தில் இருந்தனர். இவர்களைப் பிரிக்க ஷமி அழைக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது. இதற்கிடையே கேப்டன் மோமினுள் ஹக் அவ்வப்போது சில பவுண்டரிகள் அடித்தார்.
ஷமி வீசிய 18-வது ஓவரில் மிதுன் சரியாக கால்காப்பில் வாங்கினார். இதற்கு எந்தவிதத்திலும் அப்பீலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், 12 ரன்னில் ஆட்டமிழந்தார். 31 ரன்னில் 3-வது விக்கெட்டை இழந்தது வங்கதேசம்.
அடுத்து வந்த முஷ்பிசுர் ரஹ்மான், மோகினுள் ஹக்குடன் நிதானமாக பேட் செய்து வருகிறார்.