Published : 14 Nov 2019 09:48 AM
Last Updated : 14 Nov 2019 09:48 AM

இந்தூரில் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: தாக்குப் பிடிக்குமா வங்கதேச அணி?

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது.

இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. இதன் முதல் டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது.

2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிங்க் பந்தில் பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது. மின்னொளியில் நடைபெற உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்தியாவும், வங்கதேச அணியும் இதற்கு முன்னர் பகலிரவு டெஸ்டில் பங்கேற்றதில்லை.

மேலும் இந்தியாவில் நடத்தப்படும் முதல் பிங்க் பந்து டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்களிடம் இப்போதே ஆவல் தொற்றிக் கொண்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தற்போதைக்கு இந்திய அணி விளையாட திட்டமிட்டுள்ள ஒரு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி இது மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர வீரர்களான தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இல்லாமல் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டை வங்கதேச அணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதுவும் வலுவான இந்திய அணிக்கு எதிராக. ஏனெனில் முன்னணி வீரர்கள் பலர் விளையாடிய கட்டத்தில் கூட வங்கதேச அணி டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் சாதித்தது இல்லை.

குறுகிய வடிவிலான போட்டிகளில் கடைசி வரை சவால் அளிக்கும் வங்கதேச அணி டெஸ்ட் போட்டிகளில் தாக்குப்பிடிப்பதில்லை. முதல் இன்னிங்ஸில் அந்த அணி ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் 2-வது இன்னிங்ஸில் கொத்து கொத்தாக விக்கெட்டை தாரை வார்த்து தோல்வியின் பிடியில் சிக்குவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

கடைசியாக தனது சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வங்கதேச அணி இழந்திருந்தது. ஐசிசி-யின் 2 வருட தடை காரணமாக ஷகிப் அல் ஹசன் விளையாட முடியாததால் 28 வயதான நடுவரிசை பேட்ஸ்மேனான மொமினுல் ஹக் தலைமையில் இந்திய டெஸ்ட் தொடரை அணுகுகிறது வங்கதேச அணி.

36 டெஸ்டில் விளையாடி உள்ள மொமினுல் ஹக் 41.47 சராசரியுடன் 2,613 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 8 சதங்கள், 13 அரை சதங்கள் அடங்கும். அனுபவம் வாய்ந்த முஸ்பிகுர் ரகிம், மஹ்மதுல்லா ரியாத் ஆகியோர் அணியில் இருந்தாலும் இவர்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் வெளிப்படுத்தும் திறனை நீண்ட வடிவிலான போட்டிகளில் இதுவரை பெரிதாக வெளிப்படுத்தியது இல்லை.

இதனால் வங்கதேச அணியின் பேட்டிங் வரிசையானது 800-க்கும் மேற்பட்ட விக்கெட்களை வேட்டையாடி உள்ள இந்திய பந்து வீச்சு குழுவை சமாளிப்பது கடும் சிரமமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியை பந்தாடியிருந்தது. விராட் கோலி (26 சதங்கள்), அஜிங்க்ய ரஹானே (11), சேதேஷ்வர் புஜாரா (18) ஆகியோர் கூட்டாக 55 சதங்களை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளாசியுள்ளனர். இவர்களுடன் சமீபகாலமாக ரன் வேட்டையாடி வரும் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், ரோஹித்சர்மா ஆகியோரையும் வங்கதேச பந்து வீச்சாளர்களான முஸ்டாபிஸூர் ரஹ்மான், தைஜூல் இஸ்லாம், மெஹிதி ஹசன் உள்ளிட்டோர் சமாளிப்பது கடும் சவாலாக இருக்கும்.

ஹோல்கர் ஆடுகளம் வழக்கமாக பேட்டிங் சொர்க்க புரியாகவே இருந்து வந்துள்ளது. எனினும் பவுன்ஸர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகிய 3 வேகப் பந்து வீச்சாளர்களுடனும் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ஹனுமா விகாரி ரித்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ்.

வங்கதேசம்: மொமினுல் ஹக் (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், முஸ்பிகுர் ரகிம், மஹ்மதுல்லா ரியாத், மொகமது மிதுன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், முஸ்டா பிஸூர் ரஹ்மான், நயீம் ஹசன், சைஃப் ஹசன், ஷத்மான் இஸ்லாம், தைஜூல் இஸ்லாம், அபு ஜாவேத், எபாடாட் ஹொசைன், அல் அமின் ஹொசைன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x