Published : 20 Aug 2015 06:40 PM
Last Updated : 20 Aug 2015 06:40 PM

ராகுல் சதம், கோலி, ரோஹித் சர்மா அபாரம்: இந்தியா 319/6

கொழும்புவில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தன் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசியில் ரோஹித் சர்மா 79 ரன்களுக்கு அஞ்சேலோ மேத்யூஸிடம் எல்.பி.ஆனார். ஓரிரண்டு அவுட் ஸ்விங்கர்களை வீசிய பிறகே ஒரு பந்தை உள்ளே கொண்டு வரும் ஒரு சாதாரண உத்தியைக் கணிக்க முடியாமல் எல்.பி.ஆகி வெளியேறினார் ரோஹித். ஆனால் கடைசியில் இவர் சிலபல ஷாட்களை ஆடினார். மொத்தம் 132 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா அதில் 5 பவுண்டரிகளையும் 3 அருமையான சிக்சர்களையும் அடித்து ஓரளவுக்கு அபாயகரமாக திகழ்ந்த நிலையில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் விதமாக ஒரு சிம்பிள் பொறியில் சிக்கி கடைசி ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.

விஜய், ரஹானே சோபிக்காததால் ஏற்பட்ட பின்னடைவு:

டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்ததன் காரணம் கடந்த டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்சில் 112 ரன்களுக்குக் காலியாகி தோல்வியடைந்ததால்தான் என்று தெரிந்ததே தவிர இந்தப் பிட்சைப் பார்த்து எடுத்த முடிவாகத் தெரியவில்லை.

முரளி விஜய் காயத்துக்குப் பிறகு ஆடினார். முதல் ஒரு மணி நேரத்துக்கு பிட்சில் பவுன்ஸ் இருக்கும் என்ற கணிப்புக்கேற்பவே பிட்ச் இருந்தது. தம்மிக பிரசாத்தும், சமீராவும் அருமையாக வீசினர், குறிப்பாக சமீராவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றே கூற வேண்டும், சீராக அவர் 140-142 கிமீ வேகத்தில் வீசி பேட்ஸ்மென்களை தடுமாறச் செய்தார்.

முதல் 2 பந்துகளை அவுட் ஸ்விங்கராக முரளி விஜய்க்கு வீசிய பிரசாத், 4-வது பந்தை, பந்தின் தையலில் பட்டு உள்ளே ஸ்விங் ஆகுமாறு வீச நன்றாக முன்னங்காலை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போட்டிருந்தால் அவுட் சந்தேகமாக இருந்திருக்கும், ஒரு அரைகுறை தடுப்பாட்டம் ஆட பந்து கால்காப்பை தாக்கியது நடுவர் கையை உயர்த்தினார். ரன் எடுக்கும் முன்னரே விஜய் அவுட்.

அடுத்ததாக ரோஹித் இறங்குவார் என்று பார்த்தால், அவரது இடத்தைத் தக்க வைக்கும் முயற்சியோ என்னவோ தெரியவில்லை, ரஹானே இறங்கினார். அவர் 4 ரன்கள் எடுத்த நிலையில் பிரசாத்தின் அருமையான அவுட் ஸ்விங்கருக்கு பேட்டைக் கொண்டு சென்று எட்ஜ் ஆக 3-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

12/2 என்ற நிலையில் கோலி, ராகுலுடன் இணைந்தார், ராகுலுக்கு ஒரு பந்தை ஆஞ்சேலோ மேத்யூஸ் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசி நேராக்க பந்து ராகுல் மட்டையின் விளிம்பில் பட்டு கல்லிக்கும், பாயிண்டுக்கும் இடையே சென்றது, இந்நிலையில் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடியில் இருந்தனர்.

நிமிர்த்திய ராகுல் - கோலி கூட்டணி:

இவர்கள் இருவரும் செட்டில் ஆவதற்கு முன்னதாக நிரம்பவும் பதட்டத்துடன் ஆடினர், துஷ்மந்தா சமீரா 3-ம் பவுலராக அறிமுகமானவுடன் ராகுலுக்கு பிரச்சினைகள் கொடுத்தார், ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை அவர் கட் செய்ய பந்து கல்லி திசைக்கு நேராக ஜெஹன் முபாரக்கிடம் கேட்சாகச் சென்றது அவர் நழுவ விட்டார்.

ஆனால் சமீராவை 3 பவுண்டரிகள் அடித்தனர் ராகுலும், கோலியும், அதில் நேர் டிரைவ் ராகுலின் டெக்னிக்கை அறிவுறுத்தியது, கோலி புல்ஷாட்டில் பவுண்டரி அடித்தார்.

பந்தில் பளபளப்பு மறைய மறைய ராகுலும் கோலியும் வசதியாக ஆடத் தொடங்கினர். இடையில் கோலிக்கு ஒரு வலுவான எல்.பி முறையீடு எழுப்ப பட்டது, பிரசாத் பந்து ஒன்று கோலியின் கால்காப்பை தாக்கியது. ரங்கனா ஹெராத் வந்தவுடன் கோலி மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு அருமையான சிக்சரை அடித்தார். டிரேட் மார்க் எக்ஸ்ட்ரா கவர் டிரைவ்வையும் கோலி ஆடத் தொடங்கியிருந்தார்.

உணவு இடைவேளையின் போது ராகுல் 39, கோலி 48. உணவு இடைவேளைக்குப் பிறகு பிரசாத் பந்தை ஒரு அருமையான ஆஃப் டிரைவ் அடித்து அரைசதம் கண்டார். இடையிடையே கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தில் தடவவே செய்தார். அப்படிப்பட்ட ஒரு பந்து எட்ஜ் ஆக ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது, தப்பித்தார் கோலி. கோலி அரைசதம் கண்ட பிறகு சிறிது நேரம் அவரை இலங்கை பவுலர்கள் முடக்கினர்.

இந்தக் கட்டத்துக்குப் பிறகு பிரசாத்தை ஒரு ஓவரில் 2 பவுண்டரிகளையும், ஹெராத்தை அவரது டிரேட் மார்க் எக்ஸ்ட்ரா கவர் டிரைவையும் கோலி அடித்தார்.

இந்நிலையில் இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 164 ரன்களைச் சேர்த்த போது இலங்கைக்கு என்ன செய்வதென்று தெரியாத தருணத்தில் 107 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்த கோலி தனது விக்கெட்டை பரிசாக அளித்தார். ஹெராத் பந்து அவ்வளவாக ஷார்ட் பிட்ச் அல்ல. ஆனால் பின்னால் சென்று கட் செய்ய முயன்றார் கோலி, இவர் பின்னால் வருவதைப் பார்த்தவுடனேயே மேத்யூஸ் முதல் ஸ்லிப்பில் நகரத் தொடங்கினார், அதாவது கோலி எட்ஜ் செய்யப் போகிறார் என்பதை சரியாகவே கணித்தார் மேத்யூஸ்.

ரோஹித் தடுமாற்றத்துடன் தொடங்கி பிறகு ஆதிக்கம்:

கோலி ஆட்டமிழந்தவுடன் ரோஹித் சர்மா களமிறங்கினார், ஹெராத் அவரை படுத்தினார், சிலி பாயிண்ட் இருந்திருந்தால் 2-வது பந்தே காலியாகியிருப்பார்.

ஆனால் அதன் பிறகு தடுப்பாட்டம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தார் ரோஹித் சர்மா, ஏறிவந்து எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியையும் பிறகும் மேலேறி வந்து அதே ஓவரில் மிட் ஆஃபில் ஒரு கிளீன் சிக்சரையும் அடித்தார் ரோஹித் சர்மா.

தேநீர் இடைவேளையின் போது ராகுல் 98 ரன்களுடனும் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் இருந்தனர். இந்தியா 206/3 என்று இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ராகுல் ஒரு ரிஸ்கான 2 ரன்களுடன் 180வது பந்தில் சதம் கண்டார். இதில் 12 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடங்கும்.

ஆனால், அதன் பிறகு 108 ரன்களில் அவர் சமீராவின் வைடு பவுன்சரை ஹூக் செய்ய முயன்றார், மிகவும் மோசமான ஷாட், டாப் எட்ஜ் எடுத்து சண்டிமாலிடமே கேட்ச் ஆனது. இடையில் லாங் ஆன் பீல்டர் இருந்தும் ரோஹித் சர்மா தைரியமாக இன்னொரு சிக்சரை அடித்தார்.

ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கி, இந்த தரப்பு உயர்மட்ட கிரிக்கெட்டுக்கு தான் லாயக்கில்லை என்பதை நிரூபித்தார், சரியான தடுப்பாட்டமும் இல்லை, தன்னம்பிக்கையான அடித்து ஆடும் திறனும் இல்லை. கிரீஸில் அவரை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தனர் இலங்கை பவுலர்கள். ஏனெனில் அவரே அவுட் ஆகி விடுவார் என்று அவர்களுக்கு தெரிந்தது. கடைசியில் ஹெராத் பந்தை தப்பும் தவறுமாக ஆடி லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சஹா இறங்கி பாசிட்டிவாக 3 பவுண்டரிகளை விளாசினார். ரோஹித் சர்மா தனது அரைசதத்தை எடுத்து முடித்தார். 81-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட பிரசாத் வீசினார், ஷார்ட் பந்து ஒன்றை ரோஹித் அருமையாக புல் ஆடி சிக்ஸருக்கு விரட்டினார் இந்தியா 300 ரன்களை எட்டியது. மீண்டும் ஒரு சாதாரண பந்து அமைய அதனை பவுண்டரி அடித்தார் ரோஹித்.

பிரசாத்தின் அடுத்த ஓவரிலும் ரோஹித் 2 பவுண்டரிகளை அடித்தார். நன்றாக தன்னம்பிக்கையுடன் ஆடிய தருணத்தில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் மேத்யூஸின் சிம்பிள் உத்திக்கு எல்.பி. ஆகி வெளியேறினார், 2, 3 அவுட் ஸ்விங் பிறகு ஒரு இன்ஸ்விங் அவ்வளவுதான் ரோஹித் கதை 79 ரன்களில்முடிக்கப்பட்டது, முதல் நாள் ஆட்டமும் முடிந்தது. இந்தியா 319/6, சஹா 19 நாட் அவுட்.

இலங்கை அணியில் ஆஃப் ஸ்பின்னர் கவுஷால் 23 ஓவர்களில் 82 ரன்கள் கொடுத்து ஏமாற்றமளித்தார். ஹெராத் 21 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் சரிசம விகிதத்தில் சவாலாகத் திகழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x