Published : 13 Nov 2019 07:03 PM
Last Updated : 13 Nov 2019 07:03 PM

26 உள்நாட்டு டெஸ்ட் வெற்றிகள் கண்ட வலுவான இந்திய அணியுடன் பலவீனமான வங்கதேசம்: வியாழனன்று இந்தூரில் முதல் டெஸ்ட்

இந்தியாவில் இந்திய அணி கடந்த 2013ம் ஆண்டு முதல் 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 போட்டிகளில் வென்று 5-ல் ட்ரா செய்து ஒன்றில் தோற்றுள்ளது. இத்தகைய வலுவான ஈவு இரக்கமற்ற டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடிவரும் இந்திய அணியை தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் இல்லாத வங்கதேச அணி மொமினுல் ஹக் தலைமையில் இந்தூரில் முதல் டெஸ்ட்டில் எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரைப் பற்றி என்னத்தைச் சொல்வது? ஆனானப்பட்ட தென் ஆப்பிரிக்காவையே உதையோ உதை ஒன்று உதைத்து ஒயிட் வாஷ் கொடுத்தது இந்திய அணி, இதில் இவர்கள் இந்திய அணியை ஆல் அவுட் செய்வது மிகமிகக் கடினம் என்றே தெரிகிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் 20 இந்திய விக்கெட்டுகளை அவர்கள் கைப்பற்றுவது துர்லபம் என்றால் 2 டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து 20 இந்திய விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதே அவர்களது பெரும் சாதனையாக அமையும், ஆனால் அதுவும் கைகூடுமா என்பது சந்தேகமே.

மாறாக ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ், அஸ்வின், ஜடேஜா ஆகியோரிடம் நிச்சயம் வங்கதேச அணி மடிவதைத் தவிர வேறு வழியில்லை, ஆனால் இவ்வகைத் தொடர்கள் அந்த அணியின் இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியையும், அனுபவத்தையும் கொடுக்கும். அனுபவமே சிறந்த பாடம், அதை எதிர்நோக்கி டீசண்டான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி கொஞ்சம் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி இந்தியா, வங்கதேச விக்கெட்டுகளைக் கைப்பற்ற சற்றே போராட வைத்து வெறுப்பேற்றினாலே வங்கதேசம் நன்றாக ஆடுகிறது என்று கூறிவிடலாம், இதை நோக்கித்தான் அந்த அணி பயணிக்க வேண்டும். இந்திய வெற்றியைக் கொஞ்சம் ஒத்திப்போடச் செய்யலாம். விராட் கோலி போன்றோரை 50 ரன்களுக்குள் வீழ்த்தி சற்றே அதிர்ச்சியளிக்கலாம், ரோஹித் சர்மாவை பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் செய்யலாம், இவையெல்லாம் செய்ய முடிந்தாலே வங்கதேசம் தன்னிறைவு கொண்ட அணியாகக் கருதப்பட இடமுண்டு. மற்றபடி... இன்னொரு இந்திய வெற்றி தொடர்தான் இதுவும்.

தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு குழி பிட்ச் என்றால் வங்கதேசத்துக்கு வேகப்பிட்ச் என்று எதிர்பார்க்கலாம், அதுதான் பிட்ச் அறிக்கையும் கூறுகிறது, அதாவது கொஞ்சம் பிட்சில் புற்கள் உள்ளன. வேகப்பந்து வீச்சுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் உதவ வாய்ப்புள்ளது, மற்றபடி பேட்டிங் சாதகம் பிறகு ஸ்பின் வந்து விடும். வங்கதேசத்தில் மெஹதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் புறக்கணிக்கக் கூடிய பவுலர்கள் இல்லையென்றாலும் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் நின்று விட்டால் கொஞ்சம் இவர்கள் பாடும் திண்டாட்டம்தான்.

நாளை டெஸ்ட் நடக்கும் இந்த ஹோல்கர் மைதானத்தில் இதற்கு முன்பாக ஒரேயொரு டெஸ்ட் போட்டி 2016-ல் நடந்தது, இதில் நியூஸிலாந்து அணி இந்தியாவிடம் 321 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அஸ்வின் இந்த மைதானத்தில் இந்தப் போட்டியில் எடுத்த 13 விக்கெட்டுகளே அவரது ஆகச்சிறந்த டெஸ்ட் போட்டி பவுலிங் ஆகும்.

அஜிங்கிய ரஹானே இன்னும் 25 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மைல்கல்லை எட்டுவார், அதே போல் விருத்திமான் சஹா இன்னும் 3 பேரை அவுட்டாக்கினால் 100 என்ற மைல்கல்லை எட்டுவார்.

வங்கதேச (உத்தேச) அணி: ஷத்மன் இஸ்லாம், சயீஃப் ஹசன் / இம்ருல் கயேஸ், மொமினுல் ஹக் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மஹமுதுல்லா, மொகமது மிதுன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹதி ஹசன், தைஜுல் இஸ்லாம், அபு ஜயேத், எபாதத் ஹுசைன் / முஸ்தபிசுர் ரஹ்மான்.

ஆட்டம் காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x