Last Updated : 13 Nov, 2019 05:04 PM

 

Published : 13 Nov 2019 05:04 PM
Last Updated : 13 Nov 2019 05:04 PM

மறக்க முடியுமா அந்த நாளை: கிரிக்கெட் உலகைப் புரட்டிப்போட்ட ரோஹித் சர்மா சாதனை

சாதித்த மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா

2014ம் ஆண்டு நவம்பர் 13 ம் தேதி கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாத, கொண்டாடப்பட வேண்டிய நாள். கிரிக்கெட் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தார் 'ஹிட் மேன்'.

ஆம்.. இந்திய அணியின் ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்கச் செய்தார்.

173 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 9 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகளை விளாசினார். ஏறக்குறைய 132 ரன்களை பவுண்டரி மூலமாகவே சேர்த்தார் ஹிட்மேன். ஈடன்கார்டன் மைதானத்தின் நாலாபுறமும் ரோஹித் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். போட்டியின் தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களின் கரகோஷமும், ஆரவாரமும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

இன்றுவரை ரோஹித் சர்மாவின் இந்த சாதனையை ஒருநாள் போட்டியில் எந்த நாட்டு வீரராகளாலும் முறியடிக்க முடியவில்லை. அந்த போட்டி குறித்த சிறிய ரீகேப்...

2014-ம் ஆண்டு நவம்பர் 13-ம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையே 4-வது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ்வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. எட்டமுடியாத இலக்கை துரத்திய இலங்கை அணி 43.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்து 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரகானேயுடன் ரோஹித் சர்மா ஆட்டத்தை தொடங்கினார். ரோஹித் சர்மா 4 ரன் சேர்த்திருந்த போதே கேட்சில் ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஆனால், திசாரே பெரேரா ரோஹித்துக்கு நழுவவிட்ட கேட்சால் இலங்கை அணி மிகப்பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிவிட்டார் ரோஹித் சர்மா . எந்தப் பக்கம் வீசினாலும் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கம் பந்துகள் பறந்தன. சதம் அடித்த பின் ரோஹித் சர்மா பேட்டிங்கில் அனல் பறந்தது. இலங்கை வீரர்கள் 7 பேர் பந்துவீசி ஒவ்வொருவரும் சரசரியாக ஓவருக்கு 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்கள். ரோஹித் சர்மாவின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் நம்பிக்கை இழந்து பந்துவீசியது பரிதாபம். ஒவ்வொருவரின் பந்துவீச்சை ரோஹித் சர்மா இரக்கமின்றி துவம்சம் செய்தார்.

72 பந்துகளில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, ருத்ரதாண்டவம் ஆடி 100 பந்துகளில் சதம் அடித்தார். அதன்பின் ரோஹித் ஆட்டம் மதம்பிடித்த யானை போல் இருந்தது. அதாவது, அடுத்த 25 பந்துகளில் 50 ரன்களை அதாவது 150 ரன்களை ரோஹித் எட்டினார். 151 பந்துகளில் 200 ரன்களை ரோஹித் சர்மா அடைந்தார். அடுத்த 15 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அதாவது 250 ரன்களை எட்டி இலங்கை வீரர்களை கலங்க வைத்தார்.

அதாவது 100 பந்துகளில் சதம் அடித்த ரோஹித் சர்மா, அடுத்த 51 பந்துகளில் மற்றொரு சதத்தை தொட்டார்.

ரஹானே 28 ரன்னிலும், ராயுடு 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் கோலி இணைந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்தனர். கோலி 66 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சுரேஷ் ரெய்னா 12 ரன்னில் வெளியேறினார். ரோஹித் சர்மா அதிரடியால் கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 129 ரன்களைச் சேர்ந்தது.

ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகள் உள்பட 264 ரன்கள் சேர்த்து குலசேகரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஏற்கனவே இரு இரட்டை சதங்களை ஒருநாள் போட்டியில் அடித்திருந்த ரோஹித் சர்மாவுக்கு உலக சாதனையாக அமைந்தது. ஆட்டநாயகன் விருதும் ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

இன்றை நாள் குறித்து ஐசிசி ட்விட்டரில் கூறுகையில், " 2014, இந்த நாள், ரோஹித் சர்மா மிகப்பெரிய சாதனை படைத்தநாள். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதில் யாருக்கு பங்கு இருக்கு. 4 ரன்னில் ரோஹித் விக்கெட்டை தவறவிட்ட இலங்கைக்கு பங்கு உண்டு" எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x