

2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து 3 முக்கிய வீரர்கள் கழற்றிவிடப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2020-ம் ஆண்டில் நடக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் அடுத்த மாதம் நடக்க உள்ளது. ஒவ்வொரு அணியில் இருந்தும் சிறப்பாகச் செயல்படாத வீரர்கள் குறித்த பட்டியலை எடுத்து அவர்களைக் கழற்றிவிட்டு வேறு வீரர்களைத் தேர்வு செய்யும் முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது.
வரும் 2021-ம் ஆண்டுதான் முழுமையான அளவில் வீரர்கள் ஏலம் நடக்கும் என்பதால், அடுத்த ஆண்டு நடக்கும் 2020-ம் ஆண்டு ஏலத்தில் வீரர்களில் சிறிய அளவில்தான் மாற்றம் இருக்கும்.
இதற்கு முன் மிகப்பெரிய அளவில் அதாவது ஒரு அணியில் 5 வீரர்கள் வரை மாற்றக்கூடிய ஏலம், புதிதாக எடுக்கக்கூடிய ஏலம் கடந்த 2018 ஜனவரி மாதம் நடந்தது.
அடுத்த ஆண்டு ஏலத்துக்கு ஒட்டுமொத்தாக ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கடந்த ஆண்டு இருக்கும் இருப்புத்தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.3 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகபட்சமாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.8.2 கோடியும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.7.15 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.6.05 கோடியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ.5.3 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.3.7 கோடியும் கையிருப்பு இருக்கிறது
இதுதவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.3.2 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.3.05 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ.1.8 கோடியும் இருப்பு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடக்கும் ஏலத்தில் அணிகள் எந்த வீரர்களை தக்கவைப்பது, ஏலத்துக்கு அனுப்பவது குறித்த பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவிக்க நாளை கடைசியாகும்.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், முரளி விஜய் ஆகியோரை கழற்றிவிட்டு அதற்கு மாற்றாக 3 வீரர்களைச் சேர்க்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதவிர பந்துவீச்சாளர்களில் சர்துல் தாக்கூர், கரன் சர்மா ஆகியோரும் நீக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு 16 போட்டிகளில் விளையாடி 602 ரன்கள் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து தொடருக்கான வாய்ப்பைப் பெற்றார். ஆனால் அதைத்தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றும் சரிவரச் செயல்படாததால் உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல கேதார் ஜாதவ் கடந்த 2 ஆண்டுகளாக உடற்தகுதிப் பிரச்சினையால் தவித்து வருகிறார். அவரை சிஎஸ்கே அணி ரூ.7.8 கோடிக்கு விலைக்கு வாங்கியும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இந்திய அணியிலும் இடம் பெற்ற ஜாதவ் உலகக் கோப்பைப் போட்டியில் பெரிதாக ஜொலிக்காததால் நீக்கப்பட்டார். மேலும் முரளி விஜயும் கடந்த இரு சீசன்களாக சிஎஸ்கே அணிக்காகச் சிறப்பாக விளையாடவில்லை. ஆதலால் 3 வீரர்களையும் நீக்கவிட சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அம்பதி ராயுடு, ஜதாவ் இருவரையும் கழற்றிவிட்டு, மீண்டும் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதவிர சர்துல் தாக்கூர் ரூ.2 கோடிக்கும், கரண் சர்மா ரூ.5 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆனால், இருவருமே கடந்த ஆண்டு சீசனில் ரன்களை வாரி வழங்கினார்கள், எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகப் பந்துவீசவில்லை. ஆதலால், இருவரையும் இந்த முறை கழற்றிவிட்டு வேறு இரு வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.