Published : 05 Aug 2015 10:02 AM
Last Updated : 05 Aug 2015 10:02 AM

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டம்: விக்கெட் இழப்பின்றி வென்றது நியூஸி.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில், டாம் லேத்தம் ஆகியோர் சதமடித்தனர்.

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா 0, கிரேக் இர்வின் 12, சகாப்வா 2, கேப்டன் சிகும்பரா 5, சிபாபா 42 ரன்களில் ஆட்டமிழக்க, 17.4 ஓவர்களில் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சீன் வில்லியம்ஸ்-சிகும்பரா ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. சீன் வில்லியம்ஸ் 26 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கிரெமர் 5 ரன்களிலும், உட்சேயா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் 146 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே.

சிக்கந்தர் சதம்

இதன்பிறகு பன்யங்காரா களமிறங்க, மறுமுனையில் ஜிம்பாப்வேயை சரிவிலிருந்து மீட்பதற்காக அதிரடியாக ரன் சேர்த்தார் சிக்கந்தர் ராஸா. தொடர்ந்து வேகமாக ஆடிய அவர் 95 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 3-வது சதமாகும்.

ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பன்யங்காரா 33 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. சிக்கந்தர் ராஸா 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிக்கந்தர்-பன்யங்காரா ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஐஸ் சோதி 3 விக்கெட்டுகளையும், கிராண்ட் எல்லியட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

நியூஸி. பதிலடி

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில்-டாம் லேத்தம் ஜோடி ஜிம்பாப்வே பவுலர்களை மிக எளிதாக எதிர்கொண்டது. இதனால் கப்டில் 70 பந்துகளிலும், டாம் லேத்தம் 60 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். இதனால் 28.5 ஓவர்களில் 150 ரன்களைக் கடந்தது நியூஸிலாந்து.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய கப்டில் 116 பந்துகளில் சதமடித்தார். அவரைத் தொடர்ந்து டாம் லேத்தம் 106 பந்துகளில் சதமடித்தார். இறுதியில் 42.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 236 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நியூஸிலாந்து. மார்ட்டின் கப்டில் 138 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 116, டாம் லேத்தம் 116 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x