Published : 12 Nov 2019 03:45 PM
Last Updated : 12 Nov 2019 03:45 PM

சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் தனித்துவ சாதனை

புள்ளி விவரங்கள் இல்லையேல் கிரிக்கெட் இல்லை. ஏனெனில் புள்ளி விவரங்கள் என்பது எண்ணிக்கை, மக்களுக்கு எப்போதும், எக்காலத்திலும் எண்ணிக்கைகள் மீது தீரா மோகம் உண்டு. தேர்தல் முடிவுகளில் வாக்கு வித்தியாசம், ஒரு கட்சி கைப்பற்றும் இடங்களுக்கும் இன்னொரு கட்சி கைப்பற்றும் இடங்களுக்குமான வித்தியாசம் என்று அரசியலில் ஆர்வம் ஏற்படுத்தும் புள்ளி விவரங்கள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட ஆட்டத்திறன்களையும் மீறி ஒரு வீரரை பெரிய வீரராகவோ, சோப்ளாங்கியாகவோ காட்டக்கூடியது.

அந்த வகையில் கிரிக்கெட்டில் உண்மையில் மேலதிக புள்ளி விவரங்கள் ஆட்சிச் செலுத்துகின்றன. இதில் உண்மையில் சில புள்ளி விவரத் தகவல்கள் கடும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடியவை, சச்சினின் இந்த புள்ளிவிவரம் விசித்திர சுவாரஸ்யத்தைக் கிளப்பக் கூடியது இல்லையென்றாலும் இதிலும் ஒரு விஷயம் உள்ளது.

உதாரணமாக ஆஷஸ் தொடர்களில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் எடுக்கும் வீரர்களில் முதன்மை வகிப்பவர் மார்க் டெய்லர். இவர் 1989, 1993, 1997 ஆகிய ஆஷஸ் தொடர்களின் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார்.

இவர் மட்டுமல்ல, ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் வாஹ் ஆகியோரும் ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியையே தங்கள் சதத்துடன் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் டான் பிராட்மேனை எடுத்துக் கொண்டால் ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் 1930, 1938, 1946-47, 1948 ஆகிய தொடர்களை முதல் டெஸ்ட் சதத்துடன் தொடங்கியுள்ளார். அதாவது 4 முறை முதல் டெஸ்ட்டிலேயே சதம் எடுத்துள்ளார், மார்க் டெய்லர் 3 முறைதான்.

டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடிக்கும் எண்ணிக்கையில் நம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முன்னணி வகிக்கிறார், தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவர் 19 முறை சதம் கண்டுள்ளார். மகேலா ஜெயவர்தனே, ஜாக் காலிஸ் தலா 18 முறையும் சங்கக்காரா 15 முறையும், ஆம்லா 14 முறையும் குக் திராவிட், யூனிஸ் கான் ஆகியோர் 13 முறையும் தொடரை சதத்துடன் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x