Published : 12 Nov 2019 12:54 PM
Last Updated : 12 Nov 2019 12:54 PM

இந்திய அணி வேற 'லெவலுக்கு' போய்ட்டாங்க: ஷோயிப் அக்தர் புகழாரம்

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி உற்சாகத்தில் இந்திய வீரர்கள் : கோப்புப்படம்

லாகூர்

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்ற பின் அவர்களின் நிலை எங்கோ உயர்ந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த இரு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது. முக்கிய வீரர்கள் கோலி, தோனி, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் ஆகியோர் இல்லாத நிலையில் இந்தியா தொடரை வென்றது.

இந்திய அணியின் வெற்றி குறித்துப் பாராட்டி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"டி20 போட்டித் தொடரில் தலைவன் (பாஸ்) என்பதை இந்திய அணி நிரூபித்துவிட்டது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தபோதிலும், அடுத்த இரு போட்டிகளிலும் வென்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மாவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது.

2-வது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது அவர் சேர்த்த 85 ரன்களும், பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், துபே, சாஹர் என அனைவரும் சிறப்பாக விளையாடினர். 3-வது டி20 போட்டியைக் காண்பதற்கு உற்சாகமாக இருந்தது. அனுபவம் இல்லாத வீரர்களாக இருந்தபோதிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. அதேசமயம், வங்கதேசம் அணியினரும் உற்சாகத்தோடு விளையாடினார்கள்.

இப்போது இருக்கும் வங்கதேச அணியை சாதாரண அணியாக எடை போட முடியாது. எந்த அணியிடமும் வங்கப்புலிகள் அவ்வளவு எளிதாகத் தோல்வி அடைந்துவிடமாட்டார்கள். கடைசிப் பந்து வரை போராட்டக் குணத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் வேகமும், ஸ்விங்கும் கலந்து பந்து வீசி மெய்சிலிர்க்க வைத்தார். அவரின் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாகும்".

இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x