Published : 11 Nov 2019 03:06 PM
Last Updated : 11 Nov 2019 03:06 PM

கோலி பயிற்சியாளர்களின் தலைவலி... ஸ்மித் பவுலர்களின் சிம்ம சொப்பனம்: இயன் சாப்பல் ஒப்பீடு

இன்றைய டெஸ்ட், ஒருநாள் பேட்டிங்கில் பெரிய அளவில் பேசப்படும் 4 வீரர்களில் ஸ்மித், கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், இதில் ஸ்மித், கோலி என்ற டாப் 2 வீரர்களுக்கு இடையே ஒப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்டின் மிக சுவாரஸ்யமான விஷயமே ஒப்பீடுதான், ஒரு காலத்தில் கபில் தேவா, போத்தமா?, இம்ரானா கபிலா? கவாஸ்கரா பேரி ரிச்சர்ட்ஸா, சச்சினா, லாராவா?, டெரிக் அண்டர்வுட்டா பிஷன் பேடியா, முரளிதரனா, ஷேன் வார்னா? என்று கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வாக்குவாதங்கள் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கலாம்.

இன்றைய கிரிக்கெட்டில் கோலியா, ஸ்மித்தா என்பதுதான் ஹாட் டாபிக்.

இதில் இயன் சாப்பல் யாருக்குச் சார்பாக பேசுகிறார் என்பதை அவர் கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதிய பத்தி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதிலிருந்து சில வரிகள் இதோ:

விராட் கோலி மரபான கிரிக்கெட் உத்தி மூலம் மலைமலையாக ரன்களைக் குவிக்கிறார். ஒருநாள் மற்றும் டி20-யில் ஆடும் மரபு மீறல் ஷாட்கள் தன் டெஸ்ட் ஆட்டத்திற்குள் ஊடுருவாமல் கோலி பார்த்துக் கொள்கிறார். சர்வதேச அளவில் வெற்றி பெற வேண்டுமெனில் ஒரு இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதில் விராட் கோலி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார்.

இன்றைய பயிற்சியாளர்கள் பலர் கோலியின் டெஸ்ட் பேட்டிங் உத்தியை ‘பழைய கால கிரிக்கெட்’ என்று கூறி அவரை மாற்றி விட முடியாது, இந்த விதத்தில் அவர் பயிற்சியாளர்களுகு ஒரு தலைவலி.

ஸ்மித்தும் கோலியும் தங்களுக்குப் பொருந்தி வரக்கூடிய பேட்டிங் பாணியை வளர்த்துக் கொண்டுள்ளனர். அதாவது பேட்டிங் என்பது தனிப்பட்ட விஷயம் என்பதை இருவரும் நிரூபித்துள்ளனர்.

இங்குதான் ஸ்மித்தின் வெற்றியும் அடங்கியுள்ளது. தனக்கேயுரிய ஒரு முறையை அவர் பழக்கிக் கொண்டுள்ளார். அவரது பேட்டிங் ஸ்டைலை மாற்ற நினைக்கும் அனைவரையும் அவர் தன் மனோபலத்தினால் எதிர்கொண்டார். பந்து வீசுவதற்கு முன்பாகவே லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு நகர்வதும் அவரது அங்க அசைவுகளும் அதீதமாக இருந்தாலும் ஷாட் ஆடும்போது சரியான நிலையிலேயே இருக்கிறார்.

அன்று பவுலிங் வீசுவதற்கு முன்பாக ஏன் இவ்வளவு நகர்வுகள், இத்தனை செயல்பாடுகள், பவுலர்களை பித்துப் பிடிக்கச் செய்யவா? என்று ஒருவர் கேட்டதற்கு ஸ்டீவ் ஸ்மித், ‘பேட்டிங் என்பதே அதுதானே’ என்றார் சிரித்தபடி.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உண்மையில் ஸ்மித்தை வீழ்த்துவது எப்படி என்று தெரியாமல் விழிபிதுங்கினார். பவுன்சரில் வீழ்த்திய பிறகும் ஸ்மித் மீண்டும் வந்து இங்கிலாந்தை எரிச்சல்படுத்தினார்.

ஸ்மித் பேட் செய்யும் போது மட்டையை தரையில் அடிக்கும் டொக் டொக் சப்தம் சக வீரர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் என்பதோடு எதிரணி பவுலர்களுக்கும் ஸ்மித் பேட்டின் சப்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கும், என்று அந்தப் பத்தியில் இயன் சாப்பல் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x