Published : 11 Nov 2019 13:00 pm

Updated : 11 Nov 2019 13:00 pm

 

Published : 11 Nov 2019 01:00 PM
Last Updated : 11 Nov 2019 01:00 PM

சிஎஸ்கே அணிதான் எனக்கு கற்றுக்கொடுத்தது: ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர் நெகிழ்ச்சி

playing-for-csk-has-taught-me-to-counter-dew-and-sweat-factor-chahar
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர் : படம் உதவி ட்விட்டர்

நாக்பூர்

கிரிக்கெட் போட்டிகளின்போது இரவு நேரத்தில் பனிப்பொழிவை எவ்வாறு சமாளித்து பந்து வீசுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் தோனியும்தான் என்று ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்திய அணி வீரர் தீபக் சாஹர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் வங்கதேசம் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த ஆண்டில் உள்நாட்டில் முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுவது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதுதான். 3.2 ஓவர்கள் வீசிய சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் எனும் சாதனையையும் சாஹர் படைத்தார். குறிப்பாக டி20 வரலாற்றிலேயே சாஹரின் பந்துவீச்சுதான் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன் 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை வீரர் மெண்டிஸ் 4 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்ததுதான் சிறந்த பந்துவீச்சாக இருந்து வந்தது. அதை சாஹர் முறியடித்து 7 ரன்களுக்கு 6 விக்கெட் என்று உலகின் சிறந்த பந்துவீச்சாக வரலாற்றைத் திருத்தி பதிவு செய்துள்ளார்.

அதேபோல டி20 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் சாஹர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இதற்கு முன் மெண்டிஸ், யஜுவேந்திர சாஹல் மட்டும் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள். தற்போது சாஹலும் அந்த வரிசையில் இணைந்தார்.

இரவு நேரத்தில் பனிப்பொழிவில் பந்து வீசுவது என்பது மிகக்கடினமாக இருந்தும், 6 விக்கெட்டுகளை தீபக் சாஹர் வீழ்த்தியுள்ளார். பந்தை இறுக்கமாகப் பிடித்து வீசுவதில் பல்வேறு சிரமங்களைப் பந்துவீச்சாளர்கள் எதிர்கொண்டபோது சாஹர் அதை திறமையாகக் கையாண்டு, ஸ்விங் செய்தார்.

இதுகுறித்து தீபக் சாஹரிடம் போட்டி முடிந்தபின் சகவீரர் சாஹல் கலகலப்பான கேள்வியாகக் கேட்டபோது அவர் கூறியதாவது:

''இரவு நேரத்தில் பனிப்பொழிவில் பந்து வீச எனக்குக் கற்றுக் கொடுத்தது ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது பனிப்பொழிவையும், வியர்வையையும் எவ்வாறு எதிர்கொண்டு விளையாடுவது என்பதைக் கற்றுக்கொண்டேன். எப்போதும் என்னுடைய கைகளைச் சுத்தமாக வைத்திருப்பேன். இதற்காக காய்ந்த மண்ணை அடிக்கடி கைகளில் தேய்துக் கொண்டுதான் பந்து வீசுவேன். இதனால் பந்து என் கைகளை விட்டு நழுவாமல், இறுக்கமாகப் பிடித்து வீச முடியும்.

நாக்பூர் மைதானத்தில் பேட்ஸ்மேன்களின் லெக்ஸைட், மற்றும் ஆப்-சைட் திசை மிகவும் தொலைவானது. ஆனால், ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி அடிப்பது குறுகிய தொலைவாக இருந்தது.

ஆதலால், பந்தை லெக் திசையிலும், ஆஃப் திசையிலும் பேட்ஸமேன்கள் அடிக்கும் வகையில் மாறி, மாறி வீச முடிவு செய்தேன். அதற்கு ஏற்றார்போல் பந்தின் வேகத்தையும் குறைத்து, ஸ்விங் செய்தேன். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதே எனக்குத் தெரியாது. போட்டி முடிந்த பின் தான் எனக்குத் தெரியவந்தது. ஏனென்றால், கடைசி ஓவரில் இரு விக்கெட்டுகளையும், அதற்கு முன் வீசிய ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தேன். அப்போதுதான் எனக்கு ஹாட்ரிக் என்பது தெரியவந்தது.

வீட்டில் அமர்ந்து கனவு கண்டிருந்தால்கூட 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்துவது சாத்தியமில்லாதது. இதற்காக நான் சிறுவயதிலிருந்தே பயிற்சி மேற்கொண்டேன்.

என்னை மட்டுமல்லாமல் மற்ற பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக என்னை நடுப்பகுதி ஓவர்களில் பந்து வீசச் செய்தார்.

நான் கடினமாக உழைத்திருக்கிறேன் என்பதால்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இன்று புதிய பந்தில் பந்து வீசப் போகிறோம் எனும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய நிர்வாகத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்''.

இவ்வாறு தீபக் சாஹர் தெரிவித்தார்.

பிடிஐ

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

CSKChaharDew and sweatBangladeshT20 InternationalDeepak Chaharதீபக் சாஹர்இந்திய அணிடி20 தொடர்ஹாட்ரிக் விக்கெட் சாஹர்இந்தியா டி20 வெற்றி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author