Last Updated : 11 Nov, 2019 06:32 AM

 

Published : 11 Nov 2019 06:32 AM
Last Updated : 11 Nov 2019 06:32 AM

2019-ம் ஆண்டின் முதல் டி20 தொடரை வென்றது இந்தியா:‘ஹாட்ரிக்’குடன் சாஹர் வரலாற்று சாதனை;கடைசி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த வங்கம்

நாக்பூர்

தீபக் சாஹரின் 'ஹாட்ரிக்' விக்கெட், ஸ்ரேயாஸ் அய்யர், ராகுலின் அரைசதம் ஆகியவற்றால் நாக்பூரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.

2019-ம் ஆண்டில் இந்திய அணி உள்நாட்டில் வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவிடம் டி20 தொடரை இழந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவுங்கெல்லாம் இல்லை..

கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்குமார், ஹர்திக் பாண்டியா என டி20 போட்டிக்கே உரித்தான வீரர்கள் இல்லாத நிலையில் அனுபவம் குறைந்த இளம் வீரர்களை வைத்து ரோஹித் சர்மா கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

ஹாட்ரிக் விக்கெட்டுடன் 7 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்திய சாஹர், 3 விக்கெட் வீழ்த்திய துபே, ராகுல்52(35), அய்யர்62(33) ஆகியோரின் பங்களிப்பு இந்திய அணிக்கு முத்தாய்ப்பானது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்களில் தோல்வி அடைந்தது.

சாதனை நாயகன் சாஹர்

இந்த ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் பந்துவீச்சு ஆகச்சிறந்ததாக அமைந்தது. 3.2 ஓவர்கள் வீசிய சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் எனும் சாதனைையும் சாஹர் படைத்தார். குறிப்பாக டி20 வரலாற்றிலேயே சாஹரின் பந்துவீச்சுதான் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன் 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை வீரர் மெண்டிஸ் 4 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்ததுதான் சிறந்தபந்துவீச்சாக இருந்து வந்தது. அதை சாஹர் முறியடித்து 7 ரன்களுக்கு 6 விக்கெட் என்று உலகின் சிறந்த பந்துவீச்சாக வரலாற்றை திருத்தி பதிவு செய்துள்ளார்.

அதேபோல டி20 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் சாஹர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இதற்கு முன் மெண்டிஸ், யஜுவேந்திர சாஹல் மட்டும் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள், தற்போது சாஹலும் அந்த வரிசையில் இணைந்தார்.

அதிலும் இந்த ஆட்டத்தில் சாஹர் தனது 3-வது ஓவரிலேயே லிட்டன் தாஸ், சர்க்காரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச்செய்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் 18 ஓவரின் கடைசிப்பந்தில் சைபிபுல் இஸ்லாம், 20-வது ஓவரில் முஸ்தபிசுர், அமினுஸ் இஸ்லாமை வெளியேற்றி ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.

சூப்பர் யார்க்கர்

தீபக் சாஹருக்கு ஒத்துழைத்து ஷிவம் துபேயும் நேற்று அருமையாகப் பந்துவீசினார். நீண்டநேரமாக களத்தில் இருந்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த முகமது நைம் விக்கெட்டை ‘சூப்பர் யார்க்கர்’ மூலம் வெளியேற்றினார். அடுத்த பந்தில் ஆசிப் ஹூசைனையும் வீழ்த்தி தன்னை சிறந்த பந்துவீச்சாளாராக உயர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ராகுல் நேர்த்தி, அய்யர் அதிரடி

பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் ஆட்டம் நேற்று மிகச்சிறப்பாக அமைந்தது. கடந்த 2 போட்டிகளிலும் பிராகாசிக்காத இருவரும் அருமையாக பேட் செய்தனர்.

குறிப்பாக கே.எல்.ாாகுல் மிகவும் பொறுமையாக பேட் செய்தார். ராகுலின் 'ஷாட்'கள் ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தியாகவும், 'டைமிங்கிலும்' இருந்தன. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பந்தின் போக்கிலேயே நேர்த்தியாக விளையாடினார். அதிலும் 'பேக்-புட்' அடித்து சில 'ஷாட்'களை ராகுல் ஆடிய விதம் அழகு. கடந்த இரு போட்டிகளாக சரியாக விளையாடவில்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அதற்கு ராகுல் பதில் அளித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் அய்யர் களத்தில் நின்றுவிட்டால், எதிரணிக்கு சேதாரத்தை தரக்கூடிய வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மெதுவாக தொடங்கிய அய்யர், அதன்பின் தனது வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பி துவம்சம் செய்துவிட்டார். ஸ்ரேயாஸ் அய்யர் அடித்த 5 சிக்ஸர்களுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

தவண் எதுக்கு

ஷிகர் தவண் அணிக்கு ஒரு வேஸ்ட் லக்கேஜ்ஜாக மாறியுள்ளார். தனது பேட்டிங் ஃபார்மை மெருக்கேற்றிக்கொள்ள உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருவதே சிறந்தது.(போங்க பாஸ்...கவுண்டியில் ஏதாவது விளையாடுங்க..) இல்லாவிட்டால், களத்தில் வாய்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்ஸனுக்கு வாய்புளிக்கலாம். இந்த முறையாவது அவருக்கு வாய்ப்பு கிைடக்கும் என எதிர்பார்த்து கிடைக்கவில்லை. மணிஷ் பாண்டேவுக்கு கொடுத்த வாய்ப்பை சாம்ஸனுக்கு வழங்கி இருக்கலாம்.

ரோஹித் சர்மா மீண்டும் 2-வது முறையாக சைபிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகினார். ரோஹித் சர்மாவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம்வங்கதேச வீரர்கள் தப்பித்தார்கள். இல்லாவிட்டால் சேதராம் அதிகமாக இருந்திருக்கும்.

பந்த்துக்கு என்னாச்சு

இளம் வீரர் ரிஷப் பந்த் நேற்று ஆட்டமிழந்த விதம் மிகவும் பரிதாபத்துக்குரியது. மிகவும் அழுத்தமான சூழலில் இருப்பது அவரின் பேட்டிங்கில் தெரிந்தது. லெக்ஸ்பின் பந்தை இறங்கி அடிக்கிறேன் என பந்தை பார்க்காமல் அடித்து பந்த் ஆட்டமிழந்தார்.
கடந்த 2 போட்டிகளாக சொதப்பிய கலீல் அகமது இந்தப் போட்டியிலும் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார் என்பது ஆறுதல்.

தவறவிட்ட வங்கதேசம்

வங்கதேச அணியைப் பொறுத்தவரை தொடக்கத்தில் ரோஹித் சர்மா, தவண் விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளித்த அதன் பந்துவீச்சாளர்கள் அதன்பின் நெருக்கடி அளிக்க தவறிவிட்டனர். குறிப்பாக ராகுலுக்கு அருமையான கேட்சை வங்கதேச வீரர் தவறவிட்டதற்கான பலனை அனுபவித்தனர்.

பேட்டிங்கில் இந்திய அணி ஈடுகொடுத்தே ரன்ரேட்ைட கொண்டு சென்றார்கள். பவர்ப்ளேயில் இந்திய அணி 2 விக்கெட்டுகளுக்கு 42 ரன்கள், வங்கதேசம் 2 விக்கெட்டுகளுக்கு 33ரன்கள் சேர்த்தது. 8-வது ஓவரில் இரு அணியும் 50 ரன்களை எட்டினர், இந்திய அணி 14-வது ஓவரில் 100 ரன்களை எட்டியநிலையில், வங்கதேசம் 12 ஓவரிலேயே எட்டியது.

34-க்கு 7 விக்கெட்

இந்திய அணிக்கு ஈடுகொடுத்தே ரன்ரேட்டை வங்கதேசம் அணி ெசன்றது. ஆனால், முகமது நைம் விக்கெட்டை வீழ்ந்தபின்தான் அணியின் சரிவு தொடங்கியது. 12 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், கடைசி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது பரிதாபம்.

ஒற்றைப்படை ரன்

175 ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கிய வங்கதேச அணியில் முகமது நைம் 48 பந்துகளுக்கு 81 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். இவரின் கணக்கில் 2 சிக்ஸர், 10 பவுண்டரி அடக்கும். துணையாக ஆடிய மிதுன் 27 ரன்கள் சேர்த்தார். இருவரும் 99 ரன்களை 3-வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். அதன்பின் வந்தவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். முடிவில் 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்களில் தோல்வி அடைந்தது.

முன்னதாக டாஸ்வென்ற வங்கதேச அணி பீல்டிங் செய்தது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். சபிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் 2 ரன்னில் ரோஹித் சர்மா போல்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்த சிறிதுநேரத்தில் சபிபுல் இஸ்லாம் வீசிய லென்த் பந்தில், டீப் மிட்விக்கெட்டில் தூக்கி அடித்து தவண் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் 3-வது விக்கெட்டுக்கு ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். ராகுல் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராகுல் 52 ரன்னில் அல்அமின் பந்துவீச்சில் மிட்-ஆப் திைசயில் லிட்டன் தாஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு விக்கெட்டை இழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தநர்.

ராகுல், அய்யர் அரைசதம்

அடுத்துவந்த ரிஷப்பந்த், அய்யருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய அய்யர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். பந்த் 6 ரன்னில் வெளியேறினார். அய்யர் 33 பந்துகளில் 62 ரன்கள்(5சிக்ஸர்,3 பவுண்டரி) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மணிஷ் பாண்டே 22 ரன்களிலும், துபே 9 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. வங்கதேசம் தர்ப்பில் சபிபுல் இஸ்லாம், சவுமியா சர்க்கால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

போத்திராஜ்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x