Published : 10 Nov 2019 10:51 AM
Last Updated : 10 Nov 2019 10:51 AM

ரிஷப் பந்த் பற்றி சிறிது காலத்துக்குப் பேசாதீர்கள்: ரோஹித் சர்மா வெளிப்படை

புதுடெல்லி

இந்திய அணியில் இருக்கும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தைக் குறைகூறாமல் இருங்கள், அவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு செயல்பட விடுங்கள் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பிங்கிற்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம்.எஸ்.தோனி, உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் விளையாடாமல் இருந்து வருகிறார். தோனி ஒருவேளை ஓய்வு அறிவித்தால், பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சிறந்து விளங்கும் வீரரைத் தயார் செய்யும் முனைப்பில் இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு தேர்வுக்குழு அதிகமான வாய்ப்பு வழங்கி வருகிறது.

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த் அதன்பின் பெரிய அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும், தோனிக்கு அடுத்தார்போல் சிறந்த விக்கெட் கீப்பரை உருவாக்கும் முனைப்பில் ரிஷப் பந்த்துக்கு தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் மூத்த வீரர் விருதிமான் சாஹா இருந்தபோதிலும்கூட ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் ரிஷப் பந்த் சரியாக விளையாடவில்லை, வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. களத்தில் இறங்கி விளையாடும் ரிஷப் பந்த் நின்று விளையாடத் தவறுகிறார். இதனால், பேட்டிங் திறமை இருந்தும் 25 ரன்களுக்குள் ஆட்டமிழந்து செல்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங்கிலும் பல தவறுகளைச் செய்தார். இதை ஏராளமான முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் அதிகமான அளவு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ரிஷப் பந்த்துக்கு ஆதரவாக கேப்டன் ரோஹித் சர்மா கருத்துக் கூறியுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"களத்தில் செய்த தவறுகளை வைத்து ரிஷப் பந்த்தை யாரும் முடிவு செய்ய வேண்டாம், கணிக்கவும் வேண்டாம். அவரின் விருப்பத்துக்கு பேட்டிங் செய்யவும், கீப்பிங் செய்யவும் அனுமதியுங்கள். அவர் மீது அதிகமான கவனத்தைக் குவிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ரிஷப் பந்த் பற்றி பேச்சு அதிகரித்து வருகிறது. நிச்சயம் இதுபோன்ற கவனக் குவிப்பு அவரின் வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும்.

களத்தில் ரிஷப் பந்த் என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச்செய்ய அவரை அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். களத்தில் இந்திய அணி விளையாடும்போது, ரிஷப் பந்த் என்ன செய்கிறார் என்று ஒவ்வொருவரும் அவரையே உற்று நோக்குவதை சிறிது காலத்துக்குத் தவிர்த்துவிடுங்கள்.

அச்சமில்லாத இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். அதனால்தான் அவருக்கு அணி நிர்வாகம் அதிகமான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. அவர் சுதந்திரமாக இருக்க வேண்டும். ரிஷப் பந்த் மீதான கவனத்தை நாம் குறைத்துவிட்டால், அவரின் செயல்பாடுகளை உற்றுநோக்குவதைச் சிறிது காலத்துக்குத் தவிர்த்தால், நிச்சயம் அவரின் பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப் பந்த் இளம் வீரர், சர்வதேச கிரிக்கெட் சூழலுக்குத் தன்னை உட்படுத்த பழகிக்கொண்டிருக்கிறார். ஆனால், ரிஷப் பந்த் களத்தில் என்ன செய்தாலும் அனைவரும் அவரைப் பற்றியே பேசுகிறார்கள். இது நியாயமில்லை.

அவரைப் பற்றி சிறிது காலத்துக்குப் பேசாதீர்கள். ரிஷ்ப் பந்த் விருப்பத்துக்கு ஏற்றவாறு சிறிதுகாலம் விளையாடட்டும். ரிஷப் பந்த் கற்றுக்கொண்டு வருகிறார். நிச்சயமாக அணி நிர்வாகம் கேட்கும் வகையில் அவர் சிறப்பான வீரராக மாறுவார்".

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x