

லாசான்
2023-ம் ஆண்டு ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் நிர்வாக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
அதேவேளையில் மகளிருக்கான உலகக் கோப்பை தொடரை 2022-ம் ஆண்டு ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் நகரங்களை தொடரை நடத்தும் நாடுகள் பின்னர் அறிவிக்கும் எனவும் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடரை இந்தியா நடத்த உள்ளது இது 4-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை உலகக் கோப்பை தொடரை நடத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. இந்த வகையில் அதிகபட்சமாக நெதர்லாந்து 3 முறை உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் 1982-ம் ஆண்டு மும்பையிலும், 2010-ம் ஆண்டு டெல்லியிலும், 2018-ம் ஆண்டு புவனேஷ்வரிலும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.
- பிடிஐ