Published : 08 Nov 2019 05:37 PM
Last Updated : 08 Nov 2019 05:37 PM

சிக்ஸர் எப்படி அடிக்கணும் தெரியுமா?- சாஹலுக்கு அறிவுரை கூறிய ரோஹித் சர்மா  

ராஜ்கோட்

சிக்ஸர் அடிக்க உடலில் வலு தேவையில்லை. சரியான டைமிங்கில் அடித்தாலே சிக்ஸர் பறந்துவிடும் என்று சாஹலுக்கு ரோஹித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

ராஜ்கோட்டியில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

100-வது டி20 போட்டியில் களமிறங்கி வெளுத்து வாங்கிய சிக்ஸர் ராஜா ரோஹித் சர்மா 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை விளாசினார்.

அதுமட்டுமல்லாமல், ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து சிக்ஸர் அடித்தவகையில் விராட்கோலி, தோனி ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை தோனி 62 இன்னிங்களில் 34 சிக்ஸர்களும், கோலி 26 இன்னிங்ஸ்களில் 26 சிக்ஸர்களும் அடித்திருந்தார்கள். ஆனால், ரோஹித் சர்மா 17 இன்னிங்ஸ்களில் 37 சிக்ஸர்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

2019-ம் ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று பிரிவுகளிலும் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். தற்போது 66 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா சர்வதேச அளவில் முதலிடம் பெறுகிறார். கடந்த 2017-ம் ஆண்டில் 65 சிக்ஸர்களும், 2018-ம் ஆண்டில் 74 சிக்ஸர்களும் அடித்திருந்தார்.

இந்தப் போட்டி முடிந்தபின் யஜூவேந்திர சாஹலுடன் கலகலப்பாக ரோஹித் சர்மா கலந்துரையாடினார். அப்போது நீங்கள் அடிக்கும் சிக்ஸர் போன்று என் உடம்புக்கு அடிக்க முடியுமா என்று சாஹல் கேள்வி கேட்டார்.

அதற்கு ரோஹித் சர்மா பதில் அளிக்கையில், "நான் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தபோது, அடுத்ததாகவும் 3 சிக்ஸர்கள் அடிக்க முயற்சித்தேன். ஆனால், 4-வது சிக்ஸரைத் தவறவிட்டதும் அடுத்ததாக சிங்கிள் ரன் எடுக்க முடிவு செய்தேன்.

மிகப்பெரிய சிக்ஸர் அடிப்பதற்கு கட்டுக்கோப்பான உடலும், வலிமையான சதைப்பிடிப்பும் தேவையில்லை. நீங்கள் கூட சிக்ஸர் அடிக்கலாம் சாஹல். சிக்ஸர் அடிக்க பவர் தேவையில்லை, சரியான டைமிங்கில் பந்தைத் தூக்கிவிடுவதுதான் முக்கியம். பேட்டின் நடுப்பகுதியில் பந்து பட வேண்டும், உங்களின் தலைக்குமேல் பேட் செல்ல வேண்டும், சரியான இடத்தில் இருந்து அடிக்க வேண்டும். இவை மூன்றும் சரியாக இருந்தால் சிக்ஸர் அடிக்க முடியும்

எப்போதும் தொடக்க வீரர் சிறப்பான தொடக்கத்தை அளிப்பது அவசியம். அது நிச்சயம் வெற்றிக்கு இட்டுச் செல்லும். நான் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. என்னுடைய விளையாட்டும், அணியின் செயல்பாடும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், நாங்கள் சிறிது அழுத்தத்தோடு இருந்தோம். இந்த வெற்றியின் மூலம் சிறிது விடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x