Last Updated : 08 Nov, 2019 04:08 PM

 

Published : 08 Nov 2019 04:08 PM
Last Updated : 08 Nov 2019 04:08 PM

மலான் மின்னல் சதம்; மிரட்டல் மோர்கன்: நியூஸி.யை கசக்கி எறிந்த இங்கிலாந்து

நேப்பியர்

டேவிட் மலானின் மின்னல் வேக சதம், எய்ன் மோர்கனின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால் நேப்பியரில் இன்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் 51 பந்துகளில் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் (6 சிக்ஸர், 9 பவுண்டரி) இருந்தார். மோர்கன் 41 பந்துகளில் 91 ரன்களில் (7 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரின் அதிரடியும் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. ஆட்ட நாயகன் விருதை டேவிட் மலான் பெற்றார்.

இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 182 ரன்கள் சேர்த்தனர். டி20 கிரிக்கெட் போட்டியில் 3-வது விக்கெட்டுக்கு எந்த அணியும் சேர்த்திராத அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

குறிப்பாக இஷ் சோதி வீசிய 17-வது ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் விளாசினார் மலான். இவருக்குப் போட்டியாக மறுபுறம் பேட் செய்த மோர்கன், மிட்ஷெல் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உள்பட 25 ரன்களை விளாசினார்.

இருவரின் அதிரடியால் நேப்பியர் மைதானத்தில் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்தது. பந்துவீச்சிலும் அசத்திய இங்கிலாந்து வீரர்கள் பார்க்கின்ஸன் 4 விக்கெட்டுகளையும், ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்ற சமநிலையில் இருக்கின்றன.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 16.5 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்து 76 ரன்களில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு மும்பையில் தென் ஆப்பிரிக்தாவுக்கு எதிராக 230 ரன்கள் சேர்த்ததே டி20 போட்டியில் அதிகபட்சமாக இருந்து வந்தது. அதை இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை டேவிட் மலான், மோர்கனின் ஆட்டம் நியூஸிலாந்து அணியை மிரள வைத்திருக்கும். மோர்கன் 41 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து டி20 போட்டியில் தனது சிறந்த ஸ்கோரைப் பதிவு செய்தார்.

டேவிட் மலான் பற்றி குறிப்பிட்டே தீர வேண்டும். இந்தப் போட்டிக்கு முன்பாகவே டி20 போட்டிகளில் அருமையான சாதனைகளை மலான் படைத்துள்ளார். இதுவரை 8 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ள மலான் அதில் 5 அரை சதங்கள் அடித்து மிரள வைத்துள்ளார். அடுத்ததாக ஜேஸன் ராய், பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு அடுத்தார்போல் அடுத்த அதிரடி வீரர் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்துள்ளார்.

சிக்ஸராகவும், பவுண்டரிகளாகவும் வெளுத்து வாங்கிய மலான், 31 பந்துகளில் அரை சதம் அடித்தார், அடுத்த 17 பந்துகளில் சதம் 50 ரன்கள் எடுத்து 48 பந்துகளில் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி சார்பில் டி20 போட்டியில் சதம் அடித்த 2-வது வீரர் டேவிட் மலான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அலெக்ஸ் ஹேல்ஸ் 2014-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.

மோர்கனுக்கு இரு முறை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை நியூஸிலாந்து வீரர்கள் தவறவிட்டதற்கு, தகுந்த தண்டனையை அனுபவித்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் சோதி 3 ஓவர்கள் வீசி 49 ரன்களும், டிக்னர் 4 ஓவர்கள் வீசி 50 ரன்களும், சவுதி 4 ஓவர்கள் வீசி 47 ரன்களும் வாரி வழங்கினர். சான்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. மிகப்பெரிய இலக்கை நினைத்தவுடன் மனரீதியாகச் சோர்ந்து போன நியூஸிலாந்து அணியில் சவூதி அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார்.

தொடக்க வீரர்கள் கப்தில் 27 ரன்களிலும், முன்ரோ 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற முன்னணி வீரர்களான ஷீபர்ட் 3, கிராண்ட்ஹோம் 7, டெய்லர் 14, மிட்ஷெல் 2, சான்ட்னர் 10 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இங்கிலாந்து தரப்பில் பார்கின்ஸன் 4 விக்கெட்டுகளையும், ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x