Last Updated : 08 Nov, 2019 06:29 AM

 

Published : 08 Nov 2019 06:29 AM
Last Updated : 08 Nov 2019 06:29 AM

‘ரோஹித் புயல்’ தாக்கியது;43 பந்துகளில் 85 ரன்கள்:வங்கத்தை பந்தாடியது இந்திய அணி; தோனியி்ல்லாத வெற்றிடம்

ராஜ்கோட்

ரோஹித் சர்மாவின் காட்டி தர்பார், ‘தனிஒருவரின்’ 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்த ஆகச்சிறந்த பேட்டிங்கால் ராஜ்கோட்டில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா என்ற ‘புயல்’ களத்தில் மையம் கொண்டால் எந்த மாதிரியான சேதத்தை எதிரணிக்கு ஏற்படுத்தும் என்பதை நேற்று தனது காட்டடியின் மூலம் வங்கதேச வீரர்களுக்கு உணர்த்திவிட்டார். 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அவர் ஒருவரே காரணமாகினார். ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம், இந்திய அணி தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்திய அணி கடந்த 2018-ம் ஆண்டில் 14 டி20 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியும், 7 போட்டிகளில் வெற்றியும் பெற்றிருந்தது.

ஆனால், இந்த ஆண்டில் இந்த ஆட்டத்தோடு 16 டி20 போட்டிகளில் விளையாடி 13-வது வெற்றியைப் பெற்றது. இதில் பெரும்பாலும் சேஸிங் செய்தே அதிகமான வெற்றிகளை இந்திய அணி ருசித்ததுள்ளது.

ரெய்னா சாதனை முறியடிப்பு

இந்திய அணியைப் பொறுத்தவரை வெற்றிக்கு உரித்தானவர் ரோஹித் சர்மா மட்டுமே. தனது 100-வது டி20 போட்டியில் பங்கேற்ற ரோஹித் சர்மாவுக்கு இந்த ஆட்டம் மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது. மிகக்குறைந்த பந்துகளில் 50-க்கும் மேற்பட்ட அதிக ரன்களை மூன்றாவது முறையாக ரோஹித் சர்மா சேர்த்துள்ளார். ேமலும் டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் அடித்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவை தோற்கடித்து 2-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறினார்.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 3 சதங்கள் அடித்து அசுரத்தனமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ரோஹி்த் சர்மாவுக்கு டி20 போட்டியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை வங்கதேச வீரர்கள் வாய்பிளந்து பார்த்தனர்.

காட்டடி ஆட்டம்

வீரர்கள் பீல்டிங் செய்யும் போது எந்த இடத்தில் இடைவெளி இருக்கறதோ அந்த இடத்தில் எல்லாம் பார்த்து, பார்த்து ரோஹித் சர்மா தனது ஷாட்களை ஆடினார். ‘புல் ஷாட்’, ‘கட்டிங்’, ‘கவர் டிரைவ்’ என ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் பல்வேறு விதங்களைக் காண முடிந்தது. அவரின் ரசிகர்களுக்கு அவரின் பேட்டிங் விருந்தாகவே அமைந்தது.

அதிலும் மொசாடக் ஹூசைனின் ஓவரில் ‘ஹாட்ரிக் சிக்ஸர்’ அடித்து வெளுத்து வாங்கிவிட்டார் ரோஹித் சர்மா. அதேபோல முஷ்தபிசுர் ரஹ்மான் ஓவரிலும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என ரோஹித் சர்மா பேட்டிங்கில் தனி ராஜ்ஜியம் நடத்தினார். 23 பந்துகளில் ரோஹித சர்மா அரைசதத்தை கடந்து பிரமிப்பு ஏற்படுத்தினார்.

அதேபோல இந்திய அணியும் 5.2 ஓவர்களில் 50ரன்களையும், 9.2 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது. பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களே இந்திய அணி சேர்த்தது என்றால் அது ரோஹித் சர்மாவால் மட்டுமே. முதல் விக்கெட்டுக்கு தவண்-சர்மா கூட்டணி 118 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரோஹித் 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து அமினுள் இஸ்லாம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

தவண் தேவையா?

உடன் பேட்டிங் செய்த ஷிகர் 27 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அமினுல் இஸ்லாம் பந்துவீச்சில் போல்டாகினார். ஷிகர் தவண் தனது அதிரடியை மறந்துவிட்டு ஆடுவதால், சிறிது காலத்துக்கு அவரை உள்நாட்டுப் போட்டிகளில் ‘பேட்டிங் பயிற்சி’ எடுத்துவிட்டு மீண்டும் அழைக்கலாம் அதுவரை சஞ்சு சாம்ஸன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்.

ஸ்ரேயாஸ் முத்திரை

ஸ்ரேயாஸ் அய்யர் களத்தில் குறைந்த ஓவர்களே இருந்தாலும் தனக்கென முத்திரை பதித்துவிட்டு சென்றார். ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி என 13 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அசத்தினார். ராகுல் வழக்கம்போல் மந்தமாக ஆடி 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்து அணிைய வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

தோனியில்லாத வெற்றிடம்

தோனி இல்லாத ‘வெற்றிடத்தை’ ரிஷப் பந்த் 2-வது முறையாக நேற்றும் தனதுதவறின் மூலம் நினைவு படுத்தினார். முதல் ஆட்டத்தில் தவறாக ‘ரிவியூ’ கேட்டு அனைவராலும் ‘ட்ரோல்’ செய்யப்பட்டார் ரிஷப்பந்த்.

ஆனால், இந்த முறை, சாஹல் வீசிய 6-வது ஓவரில் லிட்டன் தாஸை ‘ஸ்டெம்பிங்’ செய்கிறேன் எனக்கூறி ஸ்டெம்புக்கு முன்பே கைகளைக் கொண்டு பந்தைப்பிடித்து ஸ்டெம்பிங் செய்தார். ஆனால், ரீப்ளேயில் ஸ்டெம்புக்கு முன்பே ரிஷப்பந்த் கையைக் கொண்டு சென்றது விதிமுறை மீறல் என்பதால், ‘நோ-பால்’(ப்ரீஹிட்) வழங்கினார் நடுவர். அந்த “ப்ரீஹிட்டில்” தேவையில்லாமல் ஒரு பவுண்டரியும் சென்றது. இதுபோன்ற நேரங்களில் அனுபவ வீரர் தோனியின் மின்னல் வேக ‘ஸ்டெம்பிங்’ அனைவருக்கும் நினைவுபடுத்தியது. இன்னும் ரிஷப்பந்த் கத்துக்குட்டிதான், தோனி இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது.

கலீல் கவலை

இந்திய அணியில் ‘கவலை’க்குரிய பந்துவீ்ச்சாளர் கலீல் அகமது. கடந்த முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு 50 சதவீதத்துக்கும் முக்கியக் காரணமாக இருந்த கலீல் அகமது. இந்த முறையும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களில் 44 ரன்களை வாரிவழங்கினார்.

இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதற்காக கலீல் அகமதுவை வேண்டா வெறுப்பாக வைத்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. பந்துவீச்சில் எந்த விதமான மாறுதலும் செய்யாமல் ‘ஷாட் பிட்ச்’சாக, பேட்ஸ்மேனுக்கு பேட்டிங் பயிற்சி அளிப்பதுபோலவே கலீல் பந்துவீசினார் .

இசாந்த் சர்மா தொடக்கத்தில் இதேபோன்று பந்துவீச்சில் வேறுபாடு காட்டாமல் அதாவது ஸ்விங் செய்யாமல் பந்துவீசிதான் அவரின் எதிர்காலம் காணமல் போனது. அதேநிலைதான் கலீல்அகமதுவுக்கும் நேரப் போகிறது. “வேரியேஷன்” இல்லாத பந்துவீச்சால் விக்கெட் வீழ்த்துவதும், எதிரணி பேட்ஸ்மேன்களின் ரன்களைக் கட்டுப்படுத்துவதும் கடினம். களத்தில் இருந்து இதுபோன்ற பந்துவீச்சாளர்கள் மிகவிரைவாக காணாமல் போவார்கள்.

சாஹல், சுந்தர் சிறப்பு

சாஹல், வாஷிங்டன் சுந்தர் இருவரால் மட்டுமே வங்கதேசத்தின் ஸ்கோர் ஓரளவுக்கு மட்டுப்பட்டது. இருவரும் தங்களுக்கு உரிய பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார்கள். இருவரும் தங்கள் பந்துவீச்சில் ‘கூக்ளி’, ‘லென்த் வேரியேஷனை’ வெளிப்படுத்தி வங்கதேச வீரர்களை எரிச்சலூட்டினார்.

இருவரின் பந்துவீச்சிலும் நேர்த்தியும், புத்திசாலித்தனமும் தெரி்ந்தது. பேட்ஸ்மேனை பந்துவீச்சில் எரிச்சலடைய வைத்தாலே விக்கெட் வீழ்ந்துவிடும் என்பதை அறிந்து பந்துவீசினார்கள். சாஹல் 2 விக்கெட்டுகளையும், சுந்தர் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடக்கம் அருமை

வங்கதேச அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ்(29), சவுமியா சர்க்கார்(30), முகமது நயிம்(36) ஆகியோரின் ஆட்டம் உண்ைமயில் சிறப்பாக இருந்தது. வங்கதேச அணிக்கு அறிமுக வீரர் நயிம் சிறந்த தொடக்கவீரராக வரும்காலத்தில் ஒளிரக்கூடும். கேப்டன் மகமதுல்லா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

83 ரன்களுக்கு 2 –வது விக்கெட்டை இழந்த வங்கதேச அணி,அடுத்த 20 ரன்களைச் சேர்ப்பதற்குள் அடுத்த 2 விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக சாஹல் வீசிய 13-வது ஓவரில் சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழந்தது பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்கத்தில் ரன் சேர்க்க வேகம் காட்டிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் பிற்பகுதியில் ரன் சேர்க்க சிரமப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் 103 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து வலுவான நிலையில் இருந்த வங்கதேசம் அணி, கடைசி 7 ஓவர்களில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கோட் போன்ற பேட்டிங் ஆடுகளத்தில் இன்னும் 20 ரன்களை கூடுதலாக வங்கதேசம் அணி சேர்த்திருந்தால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.

ராஜ்கோட் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி, குறிப்பாக 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதால்தான் இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மாவுக்கு பந்துவீச அனைவரும் சிரமப்பட்டனர், ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசிய அனைவருக்கும் சமமான சேதாரமும் ஏற்பட்டது.

போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x