Published : 07 Nov 2019 04:08 PM
Last Updated : 07 Nov 2019 04:08 PM

ஷிகர் தவணுக்கு என்ன ஆச்சு? மாற்றுங்கள்: ஸ்ரீகாந்த் காட்டம்

ஷிகர் தவண் : கோப்புப்படம்

புதுடெல்லி,

ஷிகர் தவணுக்கு என்ன ஆச்சு? அவரின் பேட்டிங் குழப்பத்துடன் இருப்பதால், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் கடந்த சில போட்டிகளாக மந்தமாக விளையாடி வருகிறார். உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு சதம் அடித்த நிலையில், கையில் காயம் காரணமாகத் தொடரில் இருந்து விலகினார். அதன்பின் மேற்கிந்தியத்தீவுகள் தொடர், தென் ஆப்பிரிக்கத்தொடரிலும் தவணின் ஆட்டம் சிறப்பாக இல்லை.

இந்த ஆண்டில் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவண் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதுவரை 222 ரன்கள் சேர்த்துள்ள தவணின் அதிகபட்சம் 41 ரன்கள் தான். வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் மந்தமாக ஆடிய தவண் 42 பந்துகள் சந்தித்து 41 ரன்கள் சேர்த்தார்.

வழக்கமாக ஆடும் பேட்டிற்குப் பதிலாக கூக்கபுரா பேட்டை பயன்படுத்தி முதல்டி20 போட்டியில் பேட் செய்த தவண் ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார். இதுநாள் வரையில் கூக்கபுரா பேட்டை இந்தியாவின் எந்த முன்னணி வீரர்களும் பயன்படுத்தாத நிலையில் ஷகர் தவண் பயன்படுத்தி சிரமப்பட்டார்.

தொடக்க வீரராக களமிறங்கும் தவணின் சிறப்பு அம்சமே தொடக்கத்திலேயே எதிரணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்வதுதான். ஆனால், அந்த தாக்குதல் ஆட்டம் கடந்த பலபோட்டிகளாக அவரிடம் காணவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நாளேடு ஒன்றில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

டி20 போட்டிகளில் இதற்கு முன் நடந்த பல ஆட்டங்களில் இந்திய அணி பவர்ப்ளேயில் சரியாக விளையாடவில்லை, ரன் சேர்க்கவும் தவறி இருக்கிறது. ரோஹித் சர்மா மட்டுமே ஓரளவுக்கு ரன் சேர்த்து வருகிறார். ஆனால், ஷிகர் தவண் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டார், அணிக்கு தேவைப்படும்போது, தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை.

தவன் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.. என்ன ஆச்சு தவணுக்கு என்று குழப்பமாக இருக்கிறது. அவரின் இயலாமை காரணமாக அணியில் மூத்த வீரராக இருந்தபோதிலும்கூட அவரால் இயல்பான அதிரடி ஆடத்துக்கு வரமுடியவில்லை.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில் தவணுக்கு பதிலாக கே.எல்.ராகுலை தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் களமிறக்கலாம். இரு அதிரடியான ஆட்டக்காரர்கள் பவர்ப்ளேயில் களமிறங்கும்போது ரன்களை குவிக்க முடியும்.

விராட் கோலி ஒன்டவுனில் களமிறங்குகிறார். ரிஷப் பந்த்தை 4-வது இடத்தில் களமிறங்கச் செய்ய வேண்டும். இந்த 4 வீரர்களும் சேர்ந்து டி20 ஆட்டங்களில் திருப்புமுனையை ஏற்படுத்த முடியும். ஒரு பேட்ஸ்மேன் தன்னுடைய இடம் அறிந்து சிறப்பாக பேட் செய்யப் பழகிவிட்டால், உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.

தோனி ஓய்வு பெறும் எண்ணத்தில் இருப்பது போன்று தெரிகிறது. ஆதலால், ரிஷப் பந்துக்கு நீண்ட வாய்ப்புகளை அணி நிர்வாகம் அளிக்க வேண்டும். அதற்கு ரோஹித் சர்மாவும், கோலியும் ரிஷப் பந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தோனியோடு ரிஷப்பந்தை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். இளம் வீரர் ரிஷப் பந்த் அனுபவ வீரர் தோனி போன்று இப்போதே விளையாடுவார், கீப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கக் கூடாது.

நான் விளையாடிய காலத்தில், கபில்தேவ், கவாஸ்கர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எந்தவிதமான கவலையும் இன்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள், அணியில் விளையாடும் 11 வீரர்களில் எனக்கு வாய்ப்பளித்தார்கள். எனக்கு கிடைத்த சிறிய வாய்ப்புகளில் கூட என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்தேன். அதற்குக் காரணம், எனக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கைதான்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x