Published : 07 Nov 2019 03:08 PM
Last Updated : 07 Nov 2019 03:08 PM

இக்ரம் அலிகில்லின் ‘விசித்திர’ ரன் அவுட் ஏற்படுத்திய திருப்பு முனை: முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற ஆப்கான் அணி

ஒருபுறம் இந்திய-வங்கதேச தொடர் இந்திய மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இன்னொரு புறம் இதே இந்தியாவில் மே.இ.தீவுகளும் ஆப்கான் அணியும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றன.

இதில் முதல் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கான் அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 197/3 என்று வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இதில் முதலில் ஆப்கான் அணி பேட் செய்த போது சஸாய், ஜாவேத் அகமதி ஆகியோர் ஸ்கோர் 15 இருக்கும் போதே பெவிலியனுக்கு நடையைக் கட்ட, ரஹ்மத் ஷா (61), இக்ரம் அலிகில் (58) ஆகியோர் மிகப்பிரமாதமாக ஆடி 20 ஒவர்களில் 111 ரன்கள் கூட்டணி அமைக்க ஸ்கோர் 126/2 என்று உயர்ந்தது.

அப்போதுதான் 62 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் ஆடிக்கொண்டிருந்த ஆப்கன் வீரர் இக்ரம் அலிகில் விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார் அல்லது அந்தத் தருணத்தில் ஏதோ நினைவில் எதையோ செய்ய ரன் அவுட் ஆகியுள்ளார். 17 பந்துகளில் 4 என்று மந்தமாகத் தொடங்கிய இக்ரம் 47 பந்துகளில் அரைசதம் கண்டார்.

ஆனால் ரஹ்மத் ஷா அரைசதம் அடித்த அந்தப் பந்தில்தான் இக்ரம் அலிகில் விசித்திரமாக ரன் அவுட் ஆனார். இக்ரம் முதலில் கிரீசிற்குள் தன் மட்டையை நன்றாக ஊன்றினார், ஆனால் உடனடியாக எடுத்து விட்டுத் திரும்பி ரஹ்மத் ஷா-வை அவரது அரைசதத்திற்காக வாழ்த்து தெரிவிக்க கிரீசை விட்டு வெளியே வந்தார், ஆனால் பந்து ’டெட்’ ஆகவில்லை ‘லைவ்’ ஆகத்தான் இருந்தது என்பது குறித்து அவருக்கு நினைவில் இல்லை. பந்தை ஸ்டம்பில் அடித்த மே.இ.தீவுகள் அப்பீல் செய்தனர். 2வது ரன்னும் எடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் அவர் பெவிலியன் திரும்பித்தான் ஆகவேண்டும். விதிப்படி மே.இ.தீவுகள் அப்பீல் சரிதான். இக்ரம் அலிகில்தான் தவறிழைத்தார்.

இந்த அசந்தர்ப்ப ரன் அவுட், மே.இ.தீவுகளுக்கு சாதகமாக திருப்பு முனை ஏற்படுத்தியது அதே ஓவரில் ஸத்ரான் டக் அவுட் ஆக ஆப்கான் அணி சரிவு கண்டு 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஷ்கர் ஆப்கன் மட்டுமே சரிவிலும் 35 ரன்கள் எடுத்தார். குல்பதின் நயீப் 17 ரன்களை எடுக்க கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கிலும் டக், பவுலிங்கிலும் விக்கெட் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 10 ஓவர்கள் 21 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார். ஷெப்பர்ட், சேஸ் ஆகியோரும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி முஜிப் உர் ரஹ்மானின் (10-1-33-2) பந்துவீச்சில் திணறியது, இவர் தொடக்கத்திலேயே எவின் லூயிஸை விரைவில் வீழ்த்த, ஹெட்மையரும் விரைவில் வெளியேற மே.இ.தீவுகள் 25/2 என்று தடுமாறியது. ரஷீத் கான் 10 ஓவர் 43 ரன்கள் விக்கெட் இல்லை. நபியும் 10 ஓவர்கள் 44 ரன்கள் விக்கெட் இல்லை. இரண்டு முக்கிய பவுலர்கள் விக்கெட் எடுக்க தவறியதால் மே.இ.தீவுகளின் ஷேய் ஹோப் 77 ரன்களையும், ராஸ்டன் சேஸ் 94 ரன்களையும் சேர்க்க மே.இ.தீவுகள் சுலபமாக 46.3 ஓவர்களில் 197/3 என்று வெற்றி பெற்றது. ராஸ்டன் சேஸின் விக்கெட்டை 94 ரன்களில் முஜிபுர் ரஹ்மான் வீழ்த்தினார்.

ஆட்ட நாயகனாக ராஸ்டன் சேஸ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x