

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவில் டான் பிராட்மேனுக்குப் பிறகு சிறந்த பேட்ஸ்மென் என்று புள்ளி விவர ரீதியாகப் பேசப்பட்டு வரும் நிலையிலும் உலக பவுலர்களுக்கு தன்னுடைய பேட்டிங்கினால் பெரும் கஷ்டங்களை அளித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் ஷோயப் அக்தர் மட்டும் ஸ்மித்தைக் கண்டு வியந்து வேறு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள யூ டியூப் வீடியோவில், “ஸ்டீவ் ஸ்மித் இப்படி ஆடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித்திடம் டெக்னிக் இல்லை, ஸ்டைலும் இல்லை. ஆனாலும் அவர் சிறப்பாகத் திகழ்கிறார்.
அவர் எப்படி சிறப்பாக ஆட முடிகிறது என்பது எனக்குத் தெரியவில்லை. என் காலத்தில் அவர் ஆடியிருந்தால் நிச்சயம் என் பந்தில் காயமடைந்திருப்பார். அவரைக் காயப்படுத்த நான் முயற்சி செய்திருப்பேன்.
ஆனால் அவர் ஆடுவதைப் பார்த்தால் காயப்படுத்துவதும் முடியாத காரியம் என்று தெரிகிறது. மிக நன்றாக ஆடுகிறார், இப்படி ஆடுவதில் இவர் ஒரு தனி ரகம்” என்றார் ஷோயப் அக்தர்.
அன்று பாகிஸ்தானுக்கு எதிராக 80 ரன்களை விளாசிய இன்னிங்சில் ஸ்மித்தின் ஆட்டம் அபாரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.