மிரட்டும் மழை: ராஜ்கோட்டில் இன்று 2-வது டி20 போட்டி நடக்குமா?

ராஜ்கோட் மைதானத்தில் நேற்று பெய்த மழை
ராஜ்கோட் மைதானத்தில் நேற்று பெய்த மழை
Updated on
2 min read

ராஜ்கோட்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ள இந்தியா-வங்கதேசம் இடையிலான 2-வது டி20 போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் அருகே கரை கடந்து செல்லும் மகா புயலால் கடற்கரை ஓரத்தில் உள்ள மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஜ்கோட் மாவட்டத்துக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

டெல்லியில் நடந்த முதலாவது டி20 போட்டியில் காற்று மாசு காரணமாக போட்டி நடக்குமா என்ற சந்தேகம் கடைசி நேரம் வரை இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் போட்டியை நடத்திக் காட்டினார்கள். ஆனால், போட்டியின் இடையே காற்று மாசால் வங்கதேச வீரர்கள் இருவர்கள் புகையைச் சமாளிக்க முடியாமல் மைதானத்தில் வாந்தி எடுத்ததைக் காண முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு எதிராக முதல் டி20 வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்தது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்கதேச அணி தற்போது முன்னிலை வகிக்கிறது. இதில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே அடுத்து வரும் 3-வது போட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஒருவேளை இன்று போட்டி நடக்காத பட்சத்தில் 3-வது தொடரில் இந்திய அணி வென்றாலும் டி20 தொடர் சமனில்தான் முடியும்.

ஏற்கெனவே இந்தியாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துவிட்டுச் சென்றது. அடுத்ததாக வங்கதேசத்துடனும் இந்திய அணி தொடரைச் சமன் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

ராஜ்கோட் நகரில் இன்று சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் 2-வது போட்டி மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், நேற்று முதல் ராஜ்கோட் நகரில் கனமழை பெய்து வருகிறது. மைதானத்தில் எங்கும் நீர் சூழ்ந்து காணப்படுவதாக மைதான நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதனால் நீரை வெளியேற்றும் பணியில் மைதான பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இன்றும் மழைக்கான வாய்ப்புகள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக குஜராத் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலை 2 மணி முதல் 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுளளது.

ஒருவேளை போட்டி தொடங்குவதற்கு ஒருமணிநேரத்துக்கு முன்பாக மழை நின்றுவிட்டால் போட்டியை நடத்திவிடலாம். ஆனால், அதன் பின்பும் தொடர்ந்தால்தான் மைதானத்தில் உள்ள நீரை வெளியேற்றி போட்டியை நடத்துவதில் சிரமம் ஏற்படும் என்று மைதான பராமரிப்பு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதான அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "இன்று மழை பெய்யாது என்று கூறிவிட முடியாது. அதேசமயம், காலையிலிருந்து மேகமூட்டமாக இருப்பதால், இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 50 சதவீதத்துக்கும் மேலாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எப்போது வரை மழை பெய்யும் என்பதைப் பொறுத்து போட்டி தொடங்குவது குறித்துத் தெரிவிக்க இயலும். போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மைதானத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. ஆனால், மழை அச்சுறுத்தல்தான் உறுதியற்ற சூழலை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in