

ஆன்டிகுவா
இந்திய கிரிக்கெட் அணியின் ஷிகர் தவணுக்கு அடுத்தார்போல், ஒருநாள் போட்டியில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் குவித்த இந்தியர் என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
இதன் மூலம் வேகமாக 2 ஆயிரம் ரன்கள் குவித்த இந்தியர்களில் ஷிகர் தவணுக்கு அடுத்தார்போல் மந்தனா இடம் பெற்றுள்ளார். ஷிகர் தவண் 48 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டினார்.
தற்போது மந்தனா 51 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். உலக அளவில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனைகளில் பெலிண்டா கிளார்க் (41 இன்னிங்ஸ்), மெக் லானிங் (44 இன்னிங்ஸ்) ஆகியோருக்கு அடுத்தார்போல் ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
ஆன்டிகுவாவில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 42.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் முதல் விக்கெட்டுக்கு ரோட்ரிக்ஸ், மந்தனா ஜோடி 141 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ரோட்ரிக்ஸ் 69 ரன்களிலும், மந்தனா 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்
23 வயதாகும் மந்தனா 51 இன்னிங்ஸ்களில் 2,025 ரன்களை எட்டியுள்ளார். சராசரியாக 43.08 ரன்கள் வைத்துள்ளார். இதில் 4 சதங்களும், 17 அரை சதங்களும் அடங்கும்.
ஆடவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் எட்டிய வகையில், தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 40 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்