Published : 07 Nov 2019 11:01 AM
Last Updated : 07 Nov 2019 11:01 AM

கர்நாடக ப்ரீமியர் லீக் கிரிக்கெட்: மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஐபிஎல் வீரர் உள்பட இருவர் கைது

பெங்களூரு

கர்நாடக ப்ரீமியர் லீக் கிரிக்கெட்(கேபிஎல்) போட்டியில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட இந்திய ஏ அணி வீரர்கள் சி.எம். கவுதம், அப்ரார் காஜி ஆகியோரை கர்நாடக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இதில் சி.எம்.கவுதம் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள கவுதம், அப்ரார் காஜி இருவரும் கர்நாடக ப்ரிமியர் லீக் போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்துக்காக விளையாடி வந்த கவுதம் தற்போது கோவா அணிக்காகவும், அதேபோல அப்ரார் காஜி தற்போது மிசோரம் அணிக்காகவும் விளையாடி வந்தனர்.

இரு வீரர்களும் கைது செய்யப்பட்டது குறித்து கர்நாடக குற்றப் பிரிவு போலீஸார் தரப்பில் கூறுகையில், " கவுதம், அப்ரார் காஜி ஆகிய இரு வீரர்களும் தாங்கள் சார்ந்துள்ள பெல்லாரி அணிக்காக விளையாடியபோது, மந்தமாக பேட்டிங் செய்வதற்காக ரூ.20 லட்சம் பணம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் பலரும் இதில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தனர்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய கவுதம், நாளை தொடங்க இருக்கும் சயத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் விளையாடும் கர்நாடக அணிக்குத் தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ரார் காஜி சார்ந்திருக்கும் மிசோரம் அணி தரப்பில் கூறுகையில், "அப்ரார் காஜி கைது செய்யப்பட்டது குறித்து எந்தத் தகவலும் இல்லை. போலீஸாரின் தகவலுக்காகக் காத்திருக்கிறோம். வந்தபின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆலோசிப்போம்" எனத் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நாகாலாந்து அணிக்காக விளையாடிய அப்ரார் காஜி, இந்த ஆண்டு மிசோரம் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் கேபிஎல் வீரர் நிஷாந்த் சிங் ஷெகாவத் என்ற வீரரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சூதாட்டத் தரகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தது, வீரர்களின் செல்போன் எண்களை வழங்கியது, பயிற்சியாளர்களின் எண்களை வழங்கியது போன்றவற்றுக்காகக் கைது செய்யப்பட்டனர். மேலும், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் வினு பிரசாத், பேட்ஸ்மேன் எம்.விஸ்வநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x