Published : 07 Nov 2019 10:24 AM
Last Updated : 07 Nov 2019 10:24 AM

ராஜ்கோட்டில் இன்று 2-வது டி 20 ஆட்டம் வெற்றி: நெருக்கடியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும்

ராஜ்கோட்

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றிருந்தது. இதன்மூலம் சர்வதேச டி 20-ல் இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது வங்கதேச அணி. மேலும் இந்த வெற்றியின் மூலம்3 ஆட்டங்கள் கொண்ட டி 20தொடரில் 1-0 என முன்னிலையையும் பெற்றது.

இந்நிலையில் 2-வது டி 20 ஆட்டம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. நட்சத்திர வீரர்களான ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் இல்லாமலேயே இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தி அனைவரது பார்வையையும் தன் மீது குவியச் செய்துள்ளது வங்கதேச அணி.

சவுமியா சர்க்கார், நயிம் ஷெய்க் ஜோடியின் சிறப்பான தொடக்கம் முஸ்பிகுர் ரகிமின் அனுபவ ஆட்டம் ஆகியவை டெல்லி போட்டியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தது. மேலும் பந்து வீச்சில் அந்த அணியின் கேப்டன் மஹ்மதுல்லா ரியாத், 8 வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி இந்திய அணிபேட்ஸ்மேன்களை பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவிடாமல் கட்டுக்குள் வைத்ததும் சற்று வியக்க வைத்தது. முக்கியமாக நடுவரிசை ஓவர்களில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு கடும் சவால் அளித்தது.

அதேவேளையில் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடி வரும் இந்திய அணியில் போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். முதல் ஆட்டத்தில் அனைத்து துறையிலும் இந்திய அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியது. பேட்டிங்கில் 148 ரன்களை மட்டுமே சேர்த்தநிலையில் பீல்டிங்கில் பல தவறுகளை இழைத்தது இந்திய அணி.

யுவேந்திர சாஹல் வீசிய ஒரேஓவரில் 3 முறை டிஆர்எஸ் முறையை சரியாக கையாளத் தவறியது இந்திய அணி. மேலும் வாஷிங்டன் சுந்தர், கிருணல் பாண்டியா ஆகியோரது பந்து வீச்சு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது 19-வது ஓவரில் தாரைவார்த்த 4 பவுண்டரிகள்தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர், 37 ரன்களை வாரி வழங்கியிருந்தார். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்படக்கூடும். அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் இடம் பெற வாய்ப்புகள் உள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் ஷிகர் தவண், கே.எல்.ராகுல் பார்ம் மிகுந்த கவலை அடையச் செய்துள்ளது. இதில் ஷிகர் தவண்பந்துகளுக்கு நிகராகவே ரன்கள்சேர்ப்பது அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. முதல் ஆட்டத்தில் 42 பந்துகளை சந்தித்த ஷிகர் தவண் 41 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மேலும் டி 20 வடிவத்துக்கு தகுந்தபடியிலான புதுமையான ஷாட்களும், உத்வேகமும் அவரிடம் இல்லாதது பலவீனத்தை அதிகரிப்பதாக உள்ளது.

இதுஒருபுறம் இருக்க ஏற்கெனவே ஒருநாள் போட்டி, டெஸ்ட் வடிவில் தனது இடத்தை இழந்துள்ள கே.எல்.ராகுல் தற்போது டி 20 அணியில் தனது இடத்தை வேரூன்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக ஷிவம் துபே நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அல்லது மணீஷ் பாண்டே சேர்க்கப்படக்கூடும்.

ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா ஆகியோரும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம். முதல் ஆட்டத்தில் சோபிக்கத் தவறிய ரோஹித் சர்மா, சிறிது நேரம் அதிரடி காட்டி 13 பந்தில் 22 ரன்கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரிடம் இருந்து மேம்பட்ட திறன் வெளிப்படும் பட்சத்தில் வங்கதேச அணிக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கலாம்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறத் தவறும் பட்சத்தில் தொடரை இழக்க நேரிடும். இதனால் இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும் என கருதப்படுகிறது. அதேவேளையில் டி 20 ஆட்டத்தில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து மகிழ்ச்சியில் உள்ளவங்கதேச அணி மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்க ஆயத்தமாகி உள்ளது.

2-வது ஆட்டத்தில் அந்த அணிவெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் முதன்முறையாக இந்திய மண்ணில் டி 20 தொடரை வென்று வரலாற்று சாதனையை படைக்கும்.

ரோஹித் சர்மா 100

ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ள போட்டி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 100-வது சர்வதேச டி 20 ஆட்டமாகும். இதன் மூலம் 100-வது டி 20 ஆட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் சர்மா.

இதுவரை 99 சர்வதேச டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா 136.67 ஸ்டிரைக் ரேட்டுடன் 2,452 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள், 17 அரை சதங்கள் அடங்கும்.

மழை வருமா?

‘மஹா’ புயல் மிரட்டலுக்கு இடையேதான் ராஜ்கோட்டில் இன்று 2-வது டி 20 ஆட்டம் நடைபெறுகிறது. புயல் காரணமாக ராஜ்கோட்டில் நேற்று மாலை கடுமையான மழைப் பொழிவு இருந்தது. இன்று பெரும்பாலும் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் மாலையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. போட்டி இரவு 7 மணிக்கே தொடங்குகிறது என்பதால் மழை இடையூறு இருக்காது என சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நேரம்: இரவு 7

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x