Published : 06 Nov 2019 07:33 PM
Last Updated : 06 Nov 2019 07:33 PM

டி20-யில் ஏன் 5வது இடம்? - முக்கிய வீரர்கள் இதில் ஈடுபடுவதில்லை- ரோஹித் சர்மா பதில்

ராஜ்கோட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா நம்பர் 1, ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இது ஏனென்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்ப அவர் அதற்குப் பதில் அளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடர் சமன் ஆனது, வங்கதேசம் அன்று டெல்லியில் முதல் போட்டியில் வென்றது, வியாழனன்று நாளை, ராஜ்கோட்டில் 2-ம் போட்டியில் புயல் அச்சுறுத்தல்களுக்கு இடையே இந்திய அணி 2ம் போட்டியை வென்றாக வேண்டும், இந்த ஆட்டம் நடைபெற முடியவில்லை எனில் இந்தத் தொடரும் ட்ரா ஆகவே வாய்ப்பு.

2018ற்குப் பிறகு இந்திய அணி இரண்டேயிரண்டு டி20 தொடர்களில்தான் வென்றுள்ளது. இரண்டு தொடர் வெற்றிகளுமே தரநிலையில் 10ம் இடத்தில் உள்ள மே.இ.தீவுகளுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக உதை வாங்கிய பிறகு ஆஸ்திரேலியாவிடமும் தொடரை இழந்தது இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் ட்ரா செய்தது.

இந்நிலையில் இந்த டி20யில் மட்டும் ஏன் இந்த நிலை என்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்ட போது, “ஆம், இந்த வடிவத்தில் புதிய வீரர்கள் நிறைய பேரை களமிறக்கி வருகிறோம்.

முக்கியமான வீரர்கள் இதில் ஆடுவதில்லை, அதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறோம். அதுவும் பெஞ்ச் வலுவை பரிசோதிக்கிறோம்.

உள்ளபடியே இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். மற்ற வடிவங்களில் ஒட்டுமொத்த அணியும் விளையாடுகிறது. அப்போது அணியிடமிருந்து என்ன பெற வேண்டுமோ அது பெறப்பட்டு விடுகிறது. இந்த ஒரு வடிவத்தில்தான் பிற வீரர்களை இறக்கிப் பார்க்க முடியும், இதில் தீங்கு ஒன்றுமில்லை.

இந்த வடிவத்தில் தான் புதிய வீரர்கள் தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியும் இதிலிருந்து அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கூட தயாராகலாம். பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தை நன்றாக வைத்திருக்க விரும்புகிறோம்.

அதற்காக போட்டிகளில் வெல்ல வேண்டாம் என்பதல்ல, வெற்றிக்குத்தான் முன்னுரிமை, ஆனால் இந்த புதிய வீரர்கள் இதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். நான் உட்பட இப்படித்தான் கற்றுக் கொண்டோம்” இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x