Published : 06 Nov 2019 11:11 AM
Last Updated : 06 Nov 2019 11:11 AM

நீ, நீயாக இரு, கனவை நோக்கிச் செல்: சிக்குவுக்கு விராட் கோலி எழுதிய மடல்

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் தன்னுடைய இள வயது கோலிக்கு ட்விட்டர் வழியாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 15 வயது சிக்கு-வுக்கு (விராட் கோலியின் செல்லப் பெயர்) அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
முதலில் உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

உன் எதிர்காலம் குறித்து என்னிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன என எனக்குத் தெரியும். என்னை மன்னித்து விடு. பல கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் இருக்கும்போது ஒவ்வொரு சவாலில் இருந்தும் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், சேருமிடத்தை விடவும் பயணமே முக்கியம். மற்றும் அந்தப் பயணம் அபாரம்.

வாழ்க்கையில் உனக்கு அபார விஷயங்கள் காத்திருக்கின்றன. உன் வழியில் வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள நீ தயாராக இருக்கவேண்டும். உனக்குக் கிடைக்கும் எதையும் அலட்சியமாக எண்ணாதே. எல்லோரையும் போல நீயும் தோல்வியடைவாய். ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவேன் என உறுதிகொள். முதல் முறை முடியாமல் போனாலும் தொடர்ந்து முயற்சி செய்.

உன்னைப் பலர் விரும்புவார்கள், பலர் வெறுப்பார்கள். உன்னைப் பற்றித் தெரியாதவர்களும் வெறுப்பார்கள். அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதே. உன் மீது நம்பிக்கை வை. உன் பிறந்தநாளுக்குத் தந்தை பரிசளிக்காத ஷூவைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பாய் என எனக்குத் தெரியும். உன் உயரம் குறித்து அவர் அடித்த நகைச்சுவை, இன்று காலை உன்னைக் கட்டிப் பிடித்தது ஆகியவற்றுக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமில்லை. இதைக் கொண்டாடு. சில நேரங்களில் அவர் கண்டிப்பாக இருப்பார் என எனக்குத் தெரியும்.

ஏனெனில் அவர் உன்னிடமிருந்து சிறந்த செயல்களையே விரும்புகிறார். நம் பெற்றோர் நம்மைச் சில நேரங்களில் புரிந்து கொள்வதில்லை என நீ எண்ணுவாய். ஒன்றைப் புரிந்துகொள், நம் குடும்பத்தினர் மட்டுமே நம் மீது எல்லையில்லா அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களை நீயும் விரும்பு. மரியாதை கொடு. உன் நேரத்தை
அவர்களுடன் செலவிடு.

உன் தந்தையிடம் நீ அவரை விரும்புவதாகக் கூறு. இன்னும் அதிகமாக என்று. இன்று இதைச் சொல். நாளையும் சொல். அடிக்கடி சொல். கடைசியாக, உன் மனம் என்ன சொல்கிறதோ அதற்கேற்ற படி உன் கனவை நோக்கிச் செல். அன்பாக இரு. பெரிதாகக் கனவு காண்பது எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதை உலகுக்குத் தெரியப் படுத்து. நீ நீயாக இரு. இவ்வாறு விராட் கோலி கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x