Published : 05 Nov 2019 06:36 PM
Last Updated : 05 Nov 2019 06:36 PM

என்னிடம் முடியுமா? பாகிஸ்தானைக் கேட்ட ஸ்மித்தின் அபார இன்னிங்ஸ்: ஆஸி. பிரமாத வெற்றி

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதல் டி20 போட்டி மழையினால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று கான்பராவில் 2வது போட்டியில் ஆடி ஸ்மித்தின் அபார பேட்டிங்கின் முன் செய்வதறியாது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் விராட் கோலி போல் அங்கு பாபர் ஆஸம் பல வேளைகளில் தனிநபராகப் போராடுகிறார், இந்தப் போட்டியிலும் 38 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொதப்ப கடைசியில் இப்திகார் அகமடின் அரக்க அடிதடி இன்னிங்சில் (62 ரன், 34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்ஸ்) பாகிஸ்தான் 20 ஓவர்களில் 150/6 என்ற ஸ்கோரை எட்டியது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 151/3 என்று எந்த ஒரு சிரமமும் பாகிஸ்தான் பந்து வீச்சின் எந்த ஒரு சவாலும் இன்றி வெற்றி பெற்றது.

நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 80 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடக்கத்தில் வார்னர் (20), பிஞ்ச் (17) அதிரடியுடன் தொடங்கி பளார் பளார் என்று இருவரும் 7 பவுண்டரிகளை விளாச ப்ளே என்றவுடன் தொடங்கிய அடி 3 ஓவர்களில் 30 என்பதில் வந்து வார்னர் விக்கெட்டுடன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முகமது ஆமிர் பந்தில் வார்னர் பவுல்டு ஆனார்.

2வது ஓவரிலேயே ஸ்பின் பவுலர் இமாத் வாசிமை கேப்டன் பாபர் ஆசம் கொண்டு வர வார்னர் ஆஹா... என்று 4 பவுண்டரிகளை விளாசினார். இமாத் வாசிம் முதல் ஸ்பெல்லில் 2 ஓவர்களில் 24 ரன்கள் என்று சாத்தப்பட்டார்.

ஸ்மித் இறங்கினார், முகமது ஆமிர் பந்தை பிளிக், ஹைபிளிக் ஷாட்டில் டீப் ஸ்கொயர்லெக்கில் சிக்சருடன் தொடங்கினார். 6வது ஓவரில் பிஞ்ச் 17 ரன்களில் 7 அடி உயர பவுலர் முகமது இர்பானிடம் வீழ்ந்தார். சதாப் கான் வந்தவுடன் பவுண்டரி அடித்தார் ஸ்மித், பிறகு முகமது இர்பான் வீசிய ஒரு எழுச்சிப் பந்தில் ஸ்மித் மட்டையைக் கடக்கச் செய்ய அடுத்த பந்தே அதே போன்ற பந்தை இம்முறை இன்னும் கொஞ்சம் வெயிட் செய்து தேர்ட்மேனில் பவுண்டரி அடித்தார். அதே ஓவரில் 7 அடி உயர பவுலரின் பந்து பாயிண்ட் தலைக்கு மேல் பவுண்டரிக்குப் பறந்தது.

வஹாப் ரியாஸ் தன் முதல் ஓவரை படுசொதப்பலாக வீசி ஓவரை முடிப்பாரா அல்லது வீசிக்கொண்டே இருப்பாரா என்ற ஐயம் எழுந்தது நோ-பாலாக வீசிக் கொண்டிருந்தார், படுமோசமான அந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது. வஹாப் ரியாஸின் 2வது ஓவரிலும் பென் மெக்டர்மட், ஸ்மித் சேர்ந்து 10 ரன்கள் விளாச ரியாஸ் 2 ஒவர் 21ரன் என்று சொதப்பினார். இந்நிலையில்தான் 22 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த பென் மெக்டர்மட், இமாத் வாசிமின் முன்னேற்றம் கண்ட பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா 13 ஓவர்களில் 106/3 என்று இருந்தது, ஸ்டீவ் ஸ்மித் 33 பந்துகளில் 45 ரன்களில் இருந்தார். மெக்டர்மட் ஆட்டமிழந்தவுடன் ஆஷ்டன் டர்னர் களமிறங்கினார். 15வது ஓவரில் முகமது இர்பான் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த முழு லெந்த் பந்தை ஸ்மித் நகர்ந்து சென்று லெக் திசையில் பிளிக் செய்து அற்புதமாக பவுண்டரி அடித்து 36 பந்துகளில் அரைசதம் கண்டார்.

17வது ஒவரை முகமது ஆமிர் வீச ஸ்டீவ் ஸ்மித் மிட் ஆஃப் திசையில் 2 பவுண்டரிகளையும் பாயிண்டிற்கு மேல் இன்னொரு பவுண்டரியையும் அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தன. 18வது ஓவரில் மீண்டும் வஹாப் ரியாஸ் சொதப்பலாக வீச 2 பவுண்டரிகளை விளாசினார் ஸ்மித், வஹாப் ரியாஸ் 3 ஓவர் 33 என்று தன் டி20 கரியருக்கு அவரே சாவுமணி அடித்துக் கொண்டார். ஸ்மித் 80 நாட் அவுட், டர்னர் 8 நாட் அவுட் ஆஸ்திரேலியா மிகச் சவுகரியமான வெற்றியைப் பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக பாகிஸ்தான் பேட் செய்த போது பாபர் ஆஸமின் ‘ஆஸம்’ கோலி பாணி ராஜகவர் டிரைவ் அவருக்கு மறுக்கப்பட்டது, மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், கமின்ஸ் ஆகியோர் லெந்தைக் குறைத்து அவரது சுதந்திர பேட்டிங்கிற்கு முட்டுக்கட்டை போட்டனர். மாறாக ஹாரிஸ் சோஹைலுக்கு லெந்த் பந்துகளை நேராக வீசி அவருக்கு ஷாட் ஆட இடம் கொடுக்காமல் நெருக்கினர். கடைசியில் அவர் 6 ரன்களில் வெறுப்பில் கொடியேற்றி காலியானார். முன்னதாக பகார் ஜமான் பேட்டிங் பரிதாபமாக அமைந்தது. கடைசியில் அவரை வீழ்த்திய கமின்ஸ் பகர் ஜமானுக்கு கிரீசிலிருந்து விடுதலை அளித்தார். ரிஸ்வான் (14), ஆஸிப் அலி (4) ஆகியோரை ஆஷ்டன் ஆகர் வீழ்த்த பாகிஸ்தான் 70/4 என்று ஆனது. 12வது ஓவர் நடந்து கொண்டிருந்தது. ஸாம்ப்பா, ஆகர் இருவரும் 8 ஓவர்களில் 54 ரன்களையே கொடுக்க மிடில் ஓவர்களில் பவுண்டரி வறண்டது. பாபர் ஆஸமின் அழுத்தம் எகிறிய போதுதான் இப்திகார் அகமட் இறங்கி அரக்கத்தனமான ஷாட்களை ஆடத் தொடங்கினார்.

பாபர் ஆஸம் 50 ரன்களில் 2வது ரன்னுக்கு ஓட முயன்று வார்னர் டீப் மிட்விக்கெட்டிலிருந்து அடித்த நேர் த்ரோ ஸ்டம்பைத் தாக்க ரன் அவுட் ஆனார். 16 ஓவர்களில் 106/5 என்ற நிலையில் இப்திகார் அகமெட் அடித்து ஆடினார் குறிப்பாக கேன் ரிச்சர்ட்சனின் கடைசி ஓவரில் 22 ரன்கள் வந்தது இப்திகார் 34 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாச பாகிஸ்தான் சற்றும் எதிர்பாரா 150 ரன்களை எட்டியது.

கடைசியில் ஸ்டீவ் ஸ்மித்தின் மாஸ்டர் கிளாசுக்கு சரணடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x