

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்கள வீராங்கனையான ராணி ராம்பால், இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) உதவிப் பயிற்சியாளராகிறார். இந்திய ஹாக்கிக்கு அவர் அளித்து வரும் சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருக்கு இந்த பதவியை வழங்க முடிவு செய்துள்ளது சாய்.
ஹரியாணாவைச் சேர்ந்தவ ரான ராணி ராம்பால், 2010 உலகக் கோப்பையில் விளையாடிய போது வெளிச்சத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 15. அதற்கு முன்னதாக சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். அந்தப் போட்டியின் சிறந்த இளம் வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய அசத்தலான ஆட்டத்தால் 2013-ல் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதுள்ள தலைசிறந்த ஹாக்கி வீராங்கனைகளில் ராணி ராம்பாலும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சமீபத்தில் முடிந்த உலக ஹாக்கி லீக் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார்.
ராணி ராம்பாலின் சாதனைகளை கருத்தில் கொண்டும், வளர்ந்து இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் விதிமுறைகளை தளர்த்தி அவருக்கு உதவிப் பயிற்சியாளர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.