

எம்.எஸ்.கே. பிரசாத் தலைமை தேர்வுக்குழுவுக்கு அவ்வப்போது விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் பண்டிதர்களும் அடிகொடுத்து வருகிறார்கள், இதில் யுவராஜ் சிங்கும் தற்போது இணைந்துள்ளார்.
எம்.எஸ்.கே. பிரசாத் எந்தக் கட்டத்திலும் உள்ளது உள்ளபடியே கூற மாட்டார், மூடி மறைத்து, சுற்றி வளைத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது கூறி மழுப்புபவர் என்ற பெயரை எடுத்தவர். இவர் மீது தாக்குதல் தொடுக்காதவர்களே இல்லை எனும்போது ஏன் யுவராஜ் இருக்கிறாரே என்று யாராவது நினைத்தால் அது இப்போது இல்லை, யுவராஜ் சிங்கும் பிரசாத் அண்ட் கம்பெனியை விட்டு வாங்கிவிட்டார்:
“நிச்சயமாக இப்போது இருக்கும் தேர்வுக்குழுவைக் காட்டிலும் நல்ல தேர்வுக்குழு தேவை. தேர்வாளர்கள் பணி சுலபமல்ல. அவர்கள் எப்போதெல்லாம் 15 வீரர்களைத் தேற்வு செய்கிறார்களோ அப்போதெல்லாம் இன்னொரு 15 வீரர்கள் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்விகள் எழுந்தவண்ணமே இருக்கும். மிகவும் கடினமான வேலை. ஆனால் இன்றைய தின நவீன கிரிக்கெட் ஆட்டத்தை வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக இன்னும் சிறப்பான தேர்வுக்குழுவுக்கான முழுத்தேவை உள்ளது என்பதை மறுக்க முடியாது. அதாவது வீரர்களை நீண்ட காலத்துக்கு பாதுகாக்கும் தேர்வுக்குழு தேவை.
வீரர்களைப் பாதுகாத்து அவர்கள் பற்றி நேர்மறையான கருத்துகளை வெளியிடுபவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும். நாம் நம் வீரர்களை எதிர்மறையாகப் பேசுவது கூடாது. வீரர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். நிச்சயமாக இன்னும் சிறந்த தேர்வாளர்கள் தேவை.
நமக்கு உடனடித் தேவை அணி வரிசையில் 4ம் இடத்தில் இறங்கி பேட் செய்யக்கூடிய வீரர். அவரைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல அவரை மதிக்கவும் வேண்டும். ஒவ்வொரு நாளும் 4ம் நிலையில் இறங்குபவர்கள் பற்றி நாம் ஏதாவது மட்டம்தட்டுமாறு பேசி விடுகிறோம். எனக்குப் பிறகு அம்பதி ராயுடு அந்த இடத்துக்கு வந்தார், ஆண்டு முழுதும் ஆடினார். பிறகு கடைசி நிமிடத்தில் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். பிறகு ரிஷப் பந்த் இறங்கினார், அவர் தன்னை நிரூபிப்பதற்குள்ளாகவே அவரைப்பற்றி விமர்சனங்கள் கிளம்புகின்றன, அணி நிர்வாகத்திடமிருந்தே கிளம்புகின்றன. பின் எப்படி 4ம் இட வீரர் கிடைப்பார்? விமர்சனம் செய்தோ, அணியிலிருந்து நீக்கியோ நம்பர் 4 உங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே ரிஷபாக இருந்தாலும், ஷ்ரேயஸ் அய்யராக இருந்தாலும் ஆதரவளியுங்கள்.
ரிஷப் பந்த் ஒரு தொடக்க வீரர் என்பதே பலருக்கும் புரியவில்லை. தடாலடிதான் அவருடைய இயல்பு, 4, 5ம் நிலைகளில் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து பிறகு அடிக்கும் முயற்சியில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். தொடக்க வீரராக இறக்கிப் பாருங்கள் பெரிய அதிரடியைக் காட்டுவார். அவர் நேரடியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் இல்லை. தன் ஆட்டத்தை மாற்றி வருகிறார், எனவே கால அவகாசம் அளிக்காமல் ஆளாளுக்கு அவரை விமர்சித்தால் எப்படி?
அவர் 8-10 ஒருநாள் போட்டிகளில்தான் ஆடிஉள்ளார், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள் பிறகு மதிப்பீடு செய்யுங்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாதது மிகப்பெரிய தவறு. இந்தியாவுக்கு வெளியே 2 சதங்கள், மே.இ.தீவுகளில் இரண்டு 90கள். ஆனால் வாய்ப்பில்லை, இது எனக்கு புரியவில்லை. இளம் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார் யுவராஜ் சிங்.