Published : 04 Nov 2019 08:27 PM
Last Updated : 04 Nov 2019 08:27 PM

முன்பு வீரர்கள் குறைகள் கேட்கப்படாது, இப்போது கங்குலி இருக்கிறார், வீரர்கள் சங்கம் தேவை: யுவராஜ் சிங் அழைப்பு

மும்பை, தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்

சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் என்றவுடன் பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகள் பிறந்துள்ளன. ஆனால் இவருக்குப் பின்னால் அமித் ஷா மகன் ஜெய் ஷா, பாஜகவின் அனுராக் தாக்கூரின் சகோதரர் ஆகியோர் இருக்கிறார்கள், இந்நிலையில் கங்குலியினால் பெரிய அளவில் என்ன செய்து விட முடியும் என்பது பற்றியே கேள்விகள் இருக்கும் நிலையில் கங்குலி வந்து விட்டார் வீரர்கள் சங்கம் தொடங்குவோம் என்று யுவராஜ் சிங் முழங்கியுள்ளார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:

நிர்வாகத்தின் பார்வையில் கிரிக்கெட், வீரர்களின் பார்வையில் கிரிக்கெட், இந்த இரண்டும் வேறுபட்டவை. கிரிக்கெட்டில் கேப்டனாக வெற்றிகரமாக இருந்த ஒருவர் நிர்வாகத்தை நடத்தும் போது கிரிக்கெட் வீரர்களின் கவலைகளும் கேட்கப்படும். இது முன்பாக நடைபெற்றதில்லை.

முன்பெல்லாம் வீரர்கள் பற்றிய கவலையில்லாமல் முடிவுகளை எடுப்பார்கள். இப்போது வீரர்களின் தேவையை கங்குலி கணக்கில் எடுத்துக் கொள்வார்.

இந்நிலையில் வீரர்கள் சங்கம் ஒன்று உருவாக்கப்படுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். வீரர்களின் குரல்கள் முன்பு கேட்கப்பட மாட்டாது. மற்ற நாடுகளிலும் வீரர்கள் சங்கம் உள்ளது, அதே போல் நாமும் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தொடங்க வேண்டும்.

பல சமயங்களில் நாங்கள் விரும்பாத போதும் கிரிக்கெட் ஆடக் கட்டாயப்படுத்தப்படுவோம். நாம் அழுத்தத்துடனேயே ஆட வேண்டும். விளையாடவில்லை என்றால் தூக்கி எறியப்படுவோம். எனவே வீரர்கள் களைப்படைந்தாலோ, அயர்ச்சி ஏற்பட்டாலோ, காயமடைந்தாலோ விளையாடியே ஆக வேண்டுமென்ற நெருக்கடி இருக்கக் கூடாது. வீரர்களுக்கு இந்த ஆதரவை நாம் வழங்க வேண்டும்.

கிளென் மேக்ஸ்வெலை எடுத்துக் கொள்ளுங்கள் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டார். நம் வீரர்கள் இதனைச் செய்ய முடியாது காரணம் நம் இடம் பறிபோய் விடும் என்று அச்சப்படுவார்கள். எனவேதான் வீரர்கள் அமைப்புத் தேவை என்று.

அதுவும் இப்போதைய வீரர்களுக்கு சங்கம் அவசியம். யாராவது ஒருவராவது எழுந்து நின்று கோரிக்கை வைக்க வேண்டும். யார் செய்வார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இது நடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கேப்டன், துணைக் கேப்டன், மூத்த வீரர்கள் என்றல்லாது அனைத்து வீரர்களின் குறைகளும் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீரரிடமும் கருத்து கேட்கப்பட வேண்டும்.

என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x