இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்பதை நன்கு அறிவோம்: ஆஞ்சேலோ மேத்யூஸ்

இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்பதை நன்கு அறிவோம்: ஆஞ்சேலோ மேத்யூஸ்
Updated on
1 min read

முதல் இன்னிங்ஸ் பேட்டிங் சொதப்பியதால் தோல்வியுற்றோம் என்று இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “நாங்கள் சரியாக பேட்டிங் ஆடவில்லை. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் பிட்ச் இன்னும் கொஞ்சம் பொறுமையான பேட்டிங்கை கோருவது. அஸ்வின் பிரமாதமாக வீசினார், அவர் ஒரு முனையில் கடும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மறுமுனையில் மற்ற பவுலர்களும் எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இறுதி நாளில் சாதிக்கக் கூடிய இலக்கு அல்ல இது. ஆனால் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் ஆடியிருக்கலாம். நாங்கள் சரியான டெஸ்ட் போட்டியை ஆடவில்லை, முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் சோடை போனோம், அதுதான் டெஸ்ட் தோல்விக்குக் காரணமானது. இந்திய அணிக்கு ஆரோக்கியமான முன்னிலை கொடுத்தோம், இதனால் அவர்கள் 2-வது இன்னிங்ஸில் பயனடைந்தனர்.

இந்திய அணியினர் ஆக்ரோஷமாக ஆடினர், 400 ரன்கள் இலக்கை அவர்கள் நிர்ணயித்த பிறகே கடினம்தான். ஆனாலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடியிருக்கலாம் ஆனால் 2-வது இன்னிங்ஸிலும் எங்கள் பேட்ஸ்மென்கள் சொதப்பிவிட்டனர்.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் எழுச்சிபெறுவார்கள் என்பதை அறிந்திருந்தோம். நாங்கள் அவ்வாறே எதிர்பார்த்தோம், அவர்களும் அதையே செய்து காட்டினர். எங்களை விட சிறப்பாகவே ஆடினர். பிட்சில் பந்துகள் கொஞ்சம் திரும்பின பயமுறுத்தும் அளவுக்கு அதில் எதுவும் இல்லை.

அஸ்வின் அடிப்படைகளைத் துல்லியமாகச் செய்தார். பந்துகளை அசவுகரியமான லெந்தில் திருப்பினார். இந்தியாவுக்கு அவர் பிரமாதமான பவுலராக சில காலமாக திகழ்ந்து வருகிறார், இங்கும் அதனைத் தொடர்ந்துள்ளார். அவரை அடித்து ஆடுவதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சும்மா நின்று அவரை ஆட முடியாது, ஏனெனில் திடீரென ஒரு விக்கெட் பந்தை அவர் வீசிவிடுவார், எனவே அந்தப் பந்து விழாதவாறு அவரை அடித்து ஆடும் வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கு எதிராக ரன்களை எடுக்க ஆட வேண்டும்” என்றார் மேத்யூஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in