Last Updated : 04 Nov, 2019 07:01 AM

 

Published : 04 Nov 2019 07:01 AM
Last Updated : 04 Nov 2019 07:01 AM

வெற்றியுடன் வரலாறு படைத்த வங்கதேசம்: முஷ்பிகுர் அபாரம்: இந்திய அணி ஒட்டுமொத்த சொதப்பல்

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி,

முஷ்பிகுர் ரஹ்மான், சவுமியா சர்க்கார் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் டெல்லியில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் முறையாக வென்று வங்கதேசம் வரலாறு படைத்தது.

திருப்புமுனை

முக்கியமான தருணத்தில் குர்னல் பாண்டியா கேட்ச்சை தவறவிட்டது, கலீல் அகமது 19-வது ஓவரில் 18 ரன்களை வாரி வழங்கியது போன்றவை வெற்றியை வங்கதேசத்திடம் தாரை வார்த்ததுபோல் அமைந்தது. கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருவரும் செய்த தவறு ஆட்டத்தையே திருப்பிப் போட்டுவிட்டது.

இதற்கு முன் சர்வதேச அளவில் இந்திய அணியுடன் 9 முறை மோதியுள்ள வங்கதேசம் அணி பெற்ற முதலாவது வெற்றி. அதிலும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய பெருமையை வங்கதேச வீரர்கள் பெற்றனர்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. 149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 3 பந்துகள் மீதம் இருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்கதேசம் அணி முன்னிலை வகிக்கிறது.

ஊக்கப்படுத்தும்

வங்கதேசம் அணியின் அனுபவ வீரர்கள் தமிம் இக்பால், ஷாகிப் அல்ஹசன் ஆகிய இரு வீரர்கள் இல்லாத சூழலில் வங்கதேச வீரர்கள் பெற்ற இந்த வெற்றி அவர்களுக்கு உரித்தான, தகுதியான வெற்றிதான், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு இருந்த பந்துவீச்சு, பிரிக்க முடியாத அளவுக்கு இருந்த வலுவான பேட்டிங் பார்ட்னர்ஷிப் போன்றவை வெற்றியை வங்கதேசத்துக்கு எளிதாக்கின.

குறிப்பாக அனுபவ வீரர் முஷிப்குர் ரஹிமின் அரைசதம் வங்கதேசத்தின் வெற்றிக்கு வித்திட்டது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இவர் கணக்கில் 8 பவுண்டரி, ஒருசிக்ஸர் அடங்கும். இந்திய அணிக்கு எதிராக முதலாவது டி20 அரை சதத்தையும் முஷ்பிகுர் அடித்தார். துணையாக ஆடிய சவுமியா சர்க்கார், அறிமுக வீரர் நயிம் ஆகியோரின் பங்களிப்பும் பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது.

பந்துவீச்சில் 8 வீரர்களை வங்கதேச கேப்டன் மகமதுல்லா பயன்படுத்தியது வியப்பாகப் பார்க்கப்பட்டாலும், பந்துவீச்சில் வித்தியாசத்தைக் காண்பித்து இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குத் தள்ளினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் ஆசிப் ஹூசைன் 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

நல்ல பாடம்

சர்வதேச அளவில் இந்திய அணி வலிமையாக இருந்தாலும், வங்கதேச அணியைக் குறைத்து மதிப்பிட்டதற்கான பலனை நேற்று பெற்றது. இன்னும் கத்துக்குட்டி அணி என்று நினைக்கக்கூடாது என்பதற்கான பாடத்தை இந்திய அணிக்கு வங்கதேச அணியினர் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை 148 ரன்கள் என்பது தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு, வெற்றி பெறும் ஸ்கோர் எனச் சொல்ல முடியாது. நல்ல தரமான ஆடுகளங்களில் இதுபோன்ற ஸ்கோர் செய்தால் ஆட்டம் 15 ஓவர்களில் முடிந்திருக்கும். டெல்லி ஆடுகளத்தின் நிலைமை வேறு.

சொதப்பல்

நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகிய 3 துறைகளிலும் இந்திய அணி வீரர்கள் சொதப்பினார்கள். பந்துவீச்சில் சாஹல், வாஷிங்டன் சுந்தர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால், வேறு ஒருவீரர் பந்துவீச வந்து ரன்களை வாரி வழங்கும் சூழல்தான் காணப்பட்டது.

பேட்டிங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா விரைவாக ஆட்டமிழந்தது பேரிழப்பு. அனுபவ ஷிகர் தவண், டி20 போட்டியில் தனது புதிய கூக்கபுரா பேட்டால் பயிற்சி எடுத்தாரே தவிர, டி20 போட்டிக்கு ஏற்றார்போல் விளையாடவில்லை. இன்னும் ஷிகர் தவண் போன்ற மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக, சஞ்சு சாம்ஸனுக்கு ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. கே.எல். ராகுல் மேட்ச் வின்னர், இக்கட்டான சூழலில் திறமையாக ஆடும் பேட்ஸ்மேன் என எப்போதுதான் நிரூபிக்கப் போகிறார்?

ரிஷப்பந்த் நிலை

அனுபவ வீரர் ஷிவம் துபே போன்றவர்களை நெருக்கடியான நேரத்தில் களமிறக்குவதற்குப் பதிலாக 3-வது வீரராக களமிறக்கி அடிக்க வைத்திருக்கலாம். ராகுலை சற்று பின்வரிசையில் இறக்கி இருக்கலாம். அறிமுக வீரர்கள் இதுபோன்ற தருணத்தில் சரியாக விளையாடவில்லையென்றால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

நெருக்கடியான சூழலில் தன்னால் சமாளித்து ஆட முடியாதவர் ரிஷப் பந்த் என்பதை அவரின் பேட்டிங் நேற்றும் காட்டிக்கொடுத்தது. 6 ஓவர்கள் இருக்கும்போது, அடித்து ஆடுவதற்குப் பதிலாக விக்கெட்டைத் தக்கவைத்துப் பொறுமையாக பேட் செய்ய ரிஷப்பந்த்துக்குத் தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராக இருந்துகொண்டு ரிவ்யூ எப்போது கேட்பது எனத் தெரியாமல் நேற்று முக்கியமான 3 கட்டங்களில் ரிவ்யூ கேட்காமல், தேவையில்லாமல் ரிவ்யூ கேட்டு வீணாக்கிவி்ட்டார். இந்த இடத்தில்தான் தோனி இல்லாத வெற்றிடம் தெரிகிறது.

கடைசிநேரத்தில் குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட் செய்யவில்லை என்றால் இந்திய அணியின் ஸ்கோர் மிகமோசமாக இருந்திருக்கும். இருவரால்தான் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி 30 ரன்கள் சேர்த்தது.

கோட்டைவிட்ட இருவர்

ஆனால் குர்னல் பாண்டியா கடைசி நேரத்தில் முஷ்பிகுர் ரஹ்மானுக்கு பவுண்டரி லைனில் கேட்ச்சை மட்டும் நழுவவிடவில்லை. இந்திய அணியின் வெற்றியையும் சேர்த்து நழுவவிட்டார். கலீல் அகமது தனது பங்கிற்கு, முஷ்பிகுர் ரஹ்மானுக்கு பேட்டிங் பயிற்சி அளிப்பதுபோல் பந்துவீசி தொடர்ந்து 4 பவுண்டரிகள் அடிக்கவிட்டதை என்ன சொல்வது.

கடைசி 2 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை. கட்டுக்கோப்பாக கலீல் அகமது பந்துவீசி இருந்தால்,நிச்சயம் நெருக்கடி அளித்து வெற்றியைத் தக்கவைத்திருக்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடிக்குமாறு பந்துவீசியபோதே இந்தியாவின் வெற்றி தாரைவார்க்கப்பட்டுவிட்டது.

அனுபவமற்றவர், சூழலை அறிந்து பந்துவீச இன்னும் பழகவில்லை, பந்துவீச்சில் வேறுபாடு காட்டப்பழகவில்லை என்பதையே கலீல் அகமதுவின் பந்துவீச்சு காட்டுகிறது. அதிலும் கலீல் அகமதுவின் பந்துவீச்சில் பந்துகள் எந்தவிதமான ஸ்விங், மாறுதல், ஸ்லோபால் எதுவுமே இல்லாமல் தூக்கி எறிவதுபோலாகவே இருக்கிறது. அணிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் வைத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

நல்ல கூட்டணி

149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே சாஹர் பந்துவீச்சில் 7 ரன்களில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு சவுமியா சர்க்கார், முகமது நயிம் இருவரும் நல்ல கூட்டணி அமைத்தனர். 2-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். நயிம் 26 ரன்களில் சாஹலிடம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்துவந்த முஷ்பிகுர் ரஹ்மான், சர்க்கார் ஜோடிஆட்டத்தை வெற்றிவரை அழைத்துச் சென்றது. இவர்களைப் பிரிக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் அதிக மெனக்கெடலில் ஈடுபட்டனர். 39 ரன்கள் சேர்த்திருந்தபோது கலீல் அகமது பந்துவீச்சில் சர்க்கார் போல்டாகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து கேப்டன் மகதுல்லா, ரஹ்மான் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரஹ்மான் 41 பந்துகளில் தனது டி20 அரை சதத்தை நிறைவு செய்தார். கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து கேப்டன் மகமதுல்லா வெற்றியை உறுதி செய்தார். மகமதுல்லா 15 ரன்னிலும், ரஹ்மான் 60 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் சாஹல், கலீல், சாஹர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர். டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங் செய்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஷிவம் துபே, வங்கதேசம் தரப்பில் முகமது நைம் அறிமுக வீரராகக் களமிறங்கினர்.

பேரிழப்பு

ரோஹித் சர்மா,ஷிகர் தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். சைபுல் இஸ்லாம் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து அதே ஓவரில் கால் காப்பில் வாங்கி 9 ரன்னில் ரோஹித் ஆட்டமிழந்தார். முதல் ஓவரிலேயே இந்திய அணி முக்கிய விக்கெட்டைப் பறிகொடுத்தது. அடுத்துவந்த கே.எல்.ராகுல், தவணுடன் சேர்ந்தார். இருவரும் அடுத்த நிதானமாக ஆடுகிறேன் என்ற கணக்கில் பந்தை வீணாக்கினார்கள். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

தவண் மந்தம்

பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரை இஸ்லாம் வீசினார். அவுட்சைட் ஆப்ஸ்டெம்ப் சென்ற அந்தப் பந்தை தேவையில்லாமல் ராகுல் அடிக்க மகமதுல்லாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி தவணுடன் சேர்ந்தார். ஸ்ரேயாஸ் வந்த வேகத்தில் தான் சந்தித்த 3-வது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்திருந்தது.

அமினுள் இஸ்லாம் வீசிய 11-வது ஓவரில் அவுட் சைட் ஆப்சைடில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு நைமால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். 4-வது விக்கெட்டுக்கு வந்த ரிஷப்பந்த், தவணுடன் சேர்ந்தார். மகமதுல்லா வீசிய 15-வது ஓவரில் தவண் சிக்ஸர் அடித்து, அதே ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். தவண் 42 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

கடைசி நேர அதிரடி

அடுத்து ஷிவம் துேப ஹூசைன் வீசிய 16-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் வெளியேறினார். 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில் குர்னல் பாண்டியா களமிறங்கினார்.
அதன்பின் ரிஷப்பந்த் 17, 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து ஸ்கோரை விரட்டினார். ஆனால், 19-வது ஓவரில் வழக்கம் போல் அவசரப்பட்டு அடித்து 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், குர்னல் பாண்டியாவுடன் சேர்ந்தார். அந்த ஓவரில் பாண்டியா ஒரு பவுண்டரியும், சுந்தர் ஒரு சிக்ஸரும் அடிக்க ஸ்கோர் உயர்ந்தது. ஹூசைன் வீசிய கடைசி ஓவரில் சுந்தரும், பாண்டியாவும் தலா ஒரு சிக்ஸர் அடிக்க இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. குர்னல் பாண்டியா 15 ரன்னிலும், சுந்தர் 14 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேசம் தரப்பில் 8 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினார்கள். இதில் சைபுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x