Last Updated : 03 Nov, 2019 11:53 AM

 

Published : 03 Nov 2019 11:53 AM
Last Updated : 03 Nov 2019 11:53 AM

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த நியூஸி: 4 கேட்சுகள் பிடித்த கிராண்ட்ஹோம்; கப்தில், நீசம் காட்டடி

வெலிங்டன்


கப்தில், நீசம் ஆகியோரின் காட்டி ஆட்டம், கிராண்ட்ஹோமின் அருமையான 4 கேட்சுகள் ஆகியவற்றால் வெலிங்டனில் இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது

உலகக் கோப்பைப் போட்டியில் அடைந்த தோல்விக்குப்பின் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி பெறும்முதல் வெற்றியாகும். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் இருக்கின்றன.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்து 21 ரன்களில் தோல்வி அடைந்தது.

முதல்டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியில் பிரகாசிக்காத கப்தில் இந்த ஆட்டத்தில் வெளுத்துவாங்கினார். அதிரடியாக ஆடிய கப்தில் 28 பந்துகளில் 41 ரன்கள்(2 சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். அதேபோல ஜேம்ஸ் நீஸம் 22 பந்துகளில் 42 ரன்கள்(4 சிக்ஸர்கள், 2பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.

பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் கலக்கிய கிராண்ட்ஹோம் 12 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பீல்டிங்கில் 4 முக்கியக் கேட்டுகளை எடுத்து இங்கிலாந்து அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
பந்துவீச்சில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். சோதி, சவுதி,பெர்குஷன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் டி20 போட்டியில் செய்த தவறுகளை பெரும்பாலும் திருத்திக்கொண்டு நியூஸிலாந்து அணி ஆடியது வெற்றியைக் கொடுத்தது. உலகக்கோப்பைப் போட்டியில் இருந்து பேட்டிங் ஃபார்ம் இன்றி தவித்து வரும் கப்தில் இன்று அதிரடியாக ஆடியது சிறப்பாகும்.

இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது, நியூஸிலாந்து அணியின் பீல்டிங் இன்றுமிக அற்புதமாக இருந்து. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்ஸ் இன்று 6 கேட்சுகளை தவறவிட்டது கொடுமை.

நியூஸிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் எடுத்த 4 கேட்சுகளும் ஆட்டத்தின் திருப்புமுனைக்கு உதவின. மோர்கன், பில்லிங்ஸ், சாம் கரண், கிரோகோரி ஆகியை பெவிலியனுக்கு அனுப்ப கிராண்ட்ஹோம் பிடித்த கேட்சுகள் உதவின.

10 ஓவர்களுக்கு 91 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்று ஸ்திரமான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி அடுத்த 10 ஓவர்களில் மீதமிருந்த விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்,, பீல்டிங் எனஅனைத்திலும் இன்று மிகமோசமாகச் செயல்பட்டது. மூத்த, அனுபவ வீரர்கள் இல்லாத குறை இன்றைய போட்டியில் அதிகம் தெரிந்தது. அதிலும் ஜேம்ஸ் வின்ஸ் ஒரே போட்டியில் 6 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதை என்னவென்று சொல்வது. பந்துவீச்சில் சாம்கரண், ஜோர்டன் மட்டுமே ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.
மற்ற வீரர்கள் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் பயிற்சிக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது, நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசவில்லை.

டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்துத. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணிக்கு கப்தில், முன்ரோவின் தொடக்கம் எதிர்பார்த்த அளவுக்குஇல்லை. முன்ரோ 7 ரன்னில் சாம்கரன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து வந்த சீபர்ட்டும் 16 ரன்னில் முகமூத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு கிராண்ட்ஹோம், கப்தில் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை துவம் செய்துவிட்டனர். யார் பந்துவீசினாலும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டு ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்து நியூஸிலாந்து அணி. 5.4 ஓவர்களில் 50 ரன்களை, 11.3 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது.

கப்தில் 41 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மிட்ஷெல் 5 ரன்கள், சான்ட்னர் டக்அவுட்டிலும் வெளியேறினர். ராஸ் டெய்லரும், நீசமும் சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். டெய்லர் பொறுமையாக விளையாட நீசம் அதிரடியில் இறங்கினார். டெய்லர் 28 ரன்னிலும், நீசம் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு நியூஸிலாந்து அணி 176 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. சவுதி வீசிய முதல் ஓவர் முதல்பந்திலேயே மி்ட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோ டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அதிரட ஆட்டக்காரர் பேர்ஸ்டோ வெளியேறியது மிகப்பெரிய இழப்பாக இங்கிலாந்துக்கு அமைந்தது.

அடுத்துவந்த வின்ஸ் ஒரு ரன்னில் பெர்குஷன் பந்தில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு மோர்கன், மலான் இருவரும் அதிரடியில் இறங்கி ரன்களைச் சேர்த்தார்.

3 சிக்ஸர்,3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்த மோர்கன், சான்ட்னர் பந்துவீச்சில் கிராண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளேயில் 49 ரன்களுக்கு இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்துவந்த பில்லிங்ஸ் 8 ரன்கள், சாம் கரண் 9 ரன்கள் என சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 39 ரன்களில் டேவிட் மலானை வெளியேறினார் சோதி.

அதன்பின் கிறிஸ் ஜோர்டன், கிரிகோரி 7-வது விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடியதால் ஓரளவுக்கு ஸ்கோர் உயர்ந்தது. ஜோர்டன் 36 ரன்களிலும், கிரிகோரி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 41 ரன்கள் சேர்த்தது. அதன்பின் கடைசி வரிசை வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி ஒரு பந்து மீதமிருக்க 155 ரன்களில் ஆட்டமிழந்தது. கடைசி 20 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x