Published : 02 Nov 2019 09:11 PM
Last Updated : 02 Nov 2019 09:11 PM

இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி

புவனேஷ்வர், பிடிஐ

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

எஃப்.ஐ.எச் போட்டிகள் புவனேஷ்வரில் நடைபெற்றது, இதில் யு.எஸ்.ஏ. அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி மொத்தமாக 6-5 என்ற கோல்களில் முன்னிலை பெற்றதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல்கள் கணக்கில் யு.எஸ்.ஏ. அணியை நொறுக்கியது, ஆனால் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் 1-4 என்று தோற்றது. இருந்தாலும் அந்த ஒரு கோல் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இடைவேளையின் போதே அமெரிக்க அணி 4-0 என்று முன்னிலை வகித்து இந்திய வாய்ப்பை சிக்கலுக்குள்ளாக்கத் தயாராக இருந்தது.
ஆனால் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் அடித்த அபார கோலினால் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 6 கோல்கள் என்று முன்னிலை பெற முடிந்தது.

அமெரிக்க அணியில் அமந்தா மகதன் 5, 28 நிமிடங்களில் 2 கோல்களை அடிக்க, கேப்டன் கேத்தலின் ஷார்க்கி 14வது நிமிடத்தில் ஒரு கோலையும் அலைசா பார்க்கர் 20வது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர். ராணி ராம்பால் இந்தியாவுக்காக அடித்த அந்த முக்கிய கோல் பல காலம் பேசும். ஏனெனில் அந்த கோல்தான் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறச் செய்துள்ளது.

இந்திய மகளிர் அணி இதற்கு முன்னால் 1980-ல் மாஸ்கோ ஒலிம்பிக்கிலும் பிறகு பிரேசில் ரியோ ஒலிம்பிக்கிற்கு 36 ஆண்டுகள் கழித்து 2016-லும் தகுதி பெற்றது. இந்நிலையில் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x