

சச்சின் டெண்டுல்கரால் உத்வேகம் பெற்ற இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பை போட்டிகளுக்கு இன்று புறப்படுகிறது
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தனது முழு கிரிக்கெட் அனுபவத்தையும் தொகுத்து இந்திய ஹாக்கி வீரர்களிடம் பேசியுள்ளது, உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்குச் செல்லும் இந்திய ஹாக்கி அணிக்கு பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலந்தில் உள்ள ஹேகில் ஆடவர் உலகக் கோப்பை போட்டிகள் வரும் 31ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 18 வீரர்கள் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி இன்று புறப்பட்டுச் செல்கிறது.
இந்த நிலையில் நேற்று தலைநகர் டெல்லியில் ஹாக்கி வீரர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சச்சின் டெண்டுல்கர் திடீர் பிரவேசம் மேற்கொண்டார். வீரர்களுக்கு தனது கிரிக்கெட் அனுபவங்களை சுருக்கமாகத் தொகுத்தளித்து உற்சாகமூட்டினார்.
சச்சின் டெண்டுல்கரை அழைத்தது ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் உலகக் கோப்பை ஹாக்கித் தொடருக்கான தயாரிப்புகள் திருப்திகரமாக இருப்பதாகவும் இந்தத் தொடரில் இந்தியா சில அதிசயங்களை நிகழ்த்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இந்திய ஹாக்கி அணியின் உயர் ஆட்டத்திறன் இயக்குனர் ரூலண்ட் ஆல்ட்மான்ஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியா தரநிலையில் 8வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் சில அதிசயங்களை நிகழ்த்தி தரநிலையை மேலும் உயர்த்த வீர்ர்கள் நிச்சயம் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கேப்டன் சர்தார் சிங் அணி பற்றி கூறுகையில்:
அனைவரும் உடல் தகுதியுடன் உள்ளனர். திறமை மிக்க வீரர்கள் இவர்கள் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்குத் தயாராகவே உள்ளனர்.
என்னுடைய இலக்கு 5 அல்லது 6வது நிலைக்கு முன்னேறுவது அதை விடவும் சிறப்பான இடம் கிடைத்தால் அது நிச்சயம் திருப்தி அளிக்கும்.
எது எப்படியிருப்பினும் எங்களது முழு கவனமும் தற்போது முதல் போட்டியான பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியின் மீதே உள்ளது. என்றார் சர்தார் சிங்.
இந்தியா கடினமான பிரிவில் இடம்பெற்றுள்ளது. பிரிவு ஏ-யில் உலக சாம்பியன் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகள் உள்ளன.
பிரிவு பி-யில், ஹாலந்து, ஜெர்மனி, நியூசீலாந்து, கொரியா, அர்ஜெண்டீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
உலகக் கோப்பை போட்டிகள் துவங்கும் நாளில் இந்தியா, பெல்ஜியத்தை முதல் போட்டியில் சந்திக்கிறது.
முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் அர்ஜெண்டீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை எதிர்த்து விளையாடுகிறது.