Published : 02 Nov 2019 05:19 PM
Last Updated : 02 Nov 2019 05:19 PM

அபாயகரமான காற்று மாசு சீரழிவு, முக்கியமான வீரர்கள் அற்ற வங்கதேச அணி: டி20-யில் இந்திய அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பெறுமா?

டெல்லியில் காற்று மாசு சீரழிவு அபாயகரமான நிலையில் இருப்பதாக அங்கு பள்ளிகள், அலுவலகங்கள், கல்லூரிகளுகு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையிலும், முக்கியமான வீரர்கள் இல்லாத வங்கதேச அணியின் ஒரு பின்னடைவான நிலையிலும் நாளை (ஞாயிறு, 3-11-19) அன்று முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆடுகிறது.

இந்திய அணியில் விராட் கோலி இல்லாவிட்டாலும் போதிய அனுபவமும் ஆக்ரோஷமும் இந்திய அணியில் உள்ள நிலையில், வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் தடையினால் ஆட முடியாது போக, தமிம் இக்பால் விலக, மஷ்ரபே மோர்டசா ஓய்வு பெற்று விட, வளரும் வீரர் முகமது சைபுதினும் முதுகுவலியால் விலக பலவீனமான வங்கதேச அணி மஹமுதுல்லா தலைமையில் இந்திய அணியை எதிர்கொள்வதோடு கடும் நச்சுக்காற்றையும் சுவாசிக்க வேண்டிய நிலை வங்கதேச அணிக்கு ஏற்பட்டுள்ளது.

வேறு அணிகளாக இருந்திருந்தால் அதாவது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவாக இருந்தால் முதலில் டெல்லி போட்டியை மாற்றுங்கள், டெல்லியில் ஆட மாட்டோம் என்று கூறியிருப்பார்கள், ஆனால் ஏழை கிரிக்கெட் வாரியங்கள் பணம் கொழிக்கும் பிசிசிஐ-யிடம் இப்படியெல்லாம் கூறி விடத்தான் முடியுமா? அப்படியே கூறிவிட்டாலும் அதன் பிறகு சந்திக்க வேண்டிய விளைவுகளைத்தான் எதிர்கொள்ள முடியுமா?

வங்கதேச அணியில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ள அராபத் சன்னி, அல் -அமின் ஹுசைன் போன்ற வீரர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பாக சர்வதேச போட்டியில் ஆடியவர்கள்.

மஹமுதுல்லா, முஸ்தபிசுர் ரஹ்மான், முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோரை நம்பி அந்த அணி உள்ளது. லிட்டன் தாஸிடம் நிறைய ஷாட்கள் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி படை புதிய டி20 உத்தியைக் கடைபிடித்தது, உலகக்கோப்பைக்காக டாஸ் வென்றால் முதலில் பேட் செய்து அடித்து ஆடுவது என்பதுதான் அந்தப் புதிய உத்தி, ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இது கைகொடுக்கவில்லை.

இம்முறை குருணால் பாண்டியா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இங்கிலாந்தில் சாத்து வாங்கிய பிறகு சாஹல் அணிக்குத் திரும்பியுள்ளார். இதில் ஷிவம் துபே ஒரு பவர் ஹிட்டர் என்பதால் அவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சஞ்சு சாம்சன் இருக்கிறார். இந்திய வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர் நல்ல ஸ்விங் பவுலர் ஷர்துல் தாக்குர், கலீல் அகமெட் என்ன செய்கின்றனர் என்று பார்க்க வேண்டும், ஸ்பின்னில் ராகுல் சாஹர், சாஹல், சுந்தர் ஆகியோர் வலுவாக இருப்பார்கள்.

ராகுல் இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு குறைவுதான், ஷிவம் துபே நிச்சயம் ஆல்ரவுண்டர் என்ற ஹோதாவில் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி, இந்திய பிட்ச், ரசிகர்களின் ஏகோபித்த ஆரவாரம் இவை அனைத்தும் இந்திய அணிக்குச் சாதகமாகவே அமையும். காற்று மாசு, இந்திய அணியின் ஆக்ரோஷம் இரண்டையும் வங்கதேசம் எதிர்கொள்ள வேண்டி வரும்.

புள்ளி விவரங்கள்:

இது வரை இந்தியா-வங்கதேச அணிகள் 8 டி20 போட்டிகளில் மோதியுள்ளன, இதில் இந்தியா 8-லும் வென்றுள்ளது, வங்கதேசம் வென்றால் அது முதல் வெற்றியாக இருக்கும். வங்கதேச அணிக்கு எதிராக இருதரப்பு டி20 தொடர் இந்தியாவில் நடந்ததில்லை. 2016-ல் இந்தியாவில் நடந்த உலக டி20 போட்டித் தொடரில் வங்கதேசம் இந்திய அணியை எதிர்கொண்ட போட்டியில் 1 ரன்னில் இந்திய அணி வென்றது, இரு அணிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டி என்றால் இதுதான். கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை ஆனால் 3 விக்கெட்டுகளை இழந்து 1 ரன்னில் தோல்வி தழுவியது.

ஆட்டம் இந்திய நேரம் மாலை 7.00 மணிக்குத் தொடங்கும்.

இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், ராகுல்/சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், ஷிவம் துபே, குருணால் பாண்டியா, சுந்தர், சாஹல்/ராகுல் சாஹர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் / கலீல் அகமெட்.

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம், மஹமுதுல்லா (கேப்டன்), மொசாடக் ஹுசைன், ஆபிப் ஹுசைன், அராபத் சன்னி, முஸ்தபிசுர் ரஹ்மான், அல் ஹமின் ஹுசைன், தைஜுல் இஸ்லாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x