Published : 02 Nov 2019 04:14 PM
Last Updated : 02 Nov 2019 04:14 PM

22 வீரர்களுக்கு எதிராக  நான் ஆடினேன்: பாக். மேட்ச் பிக்சிங் விவகாரங்கள் குறித்து ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒருபுறம் அதன் ஊழல் நிரம்பிய, அதிகார வெறி பிடித்த அதிகாரவர்க்கம் சீரழிக்கிறது என்றால் இதன் காரணமாகவோ என்னவோ கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வீரர்கள் மறுபுறம் அதன் கிரிக்கெட்டை சிரழித்து வருகின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், தான் ஆடிய போது 22 பேர்களுக்கு எதிராக ஆடியதாகத் தெரிவித்தார்.

முகமது ஆமிர், சல்மான் பட், முகம்து ஆசிப் ஆகிய மூவர் கூட்டணி செய்த மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் ஊழல்களினால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது, இதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடங்கி அதிலும் பல வீரர்கள் சிக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழலிலிருந்து விடுபடுவது எப்போது என்பதே பெரும் கவலையாக மாறியுள்ளது.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஷோயப் அக்தர் கூறியதாவது:

நான் ஒரு போதும் பாகிஸ்தானை ஏமாற்றுவது என்பதை நினைத்துக் கூட பார்க்க மாட்டேன். மேட்ச் பிக்சிங் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் என்னைச் சுற்றி மேட்ச் பிக்சர்கள் இருந்தனர். நான் 22 பேர்களுக்கு எதிராக ஆடினேன். எதிரணி வீரர்கள் 11 பேர், எங்கள் அணி வீரர்கள் 10 பேர் ஆகியோருக்கு எதிராகவே நான் ஆடியதாகவே உணர்கிறேன்.

இதில் ஆட்டத்தை சூதாட்ட நிர்ணயம் செய்பவர் யார் என்பது எப்படித்தெரியும்? ஏகப்பட்ட சூதாட்டங்கள் நடந்துள்ளன. ஆசிப் எந்தெந்த மேட்ச்களை அவர்கள் பிக்ஸ் செய்தனர் என்பதை என்னிடம் கூறியிருக்கிறார்.

நான் ஆமிர், ஆசிபுக்கு புரிய வைக்க முயற்சித்தேன். திறமை இருந்து என்ன பயன், விரயமாகிவிட்டதே. இதைப்பற்றி கேள்விப்பட்டவுடன் நான் கடும் ஏமாற்றமடைந்தேன், சுவரைக் குத்தினேன். இரண்டு அருமையான வேகப்பந்து வீச்சாளர்கள் விரயம் செய்யப்பட்டு விட்டனர். பணத்துக்காக அவர்கள் தங்களை விற்று விட்டனர், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x