Published : 01 Nov 2019 03:24 PM
Last Updated : 01 Nov 2019 03:24 PM

கிளென் மேக்ஸ்வெல் குறித்த செய்தி ‘முதுகுத் தண்டை சில்லிடச் செய்கிறது’- கிறிஸ் லின் நடுக்கம்

மெல்போர்ன்

மனச்சோர்வு, மன அழுத்தம், சொல்லொணா மனக் கஷ்டம் காரணமாக ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மெக்ஸ்வெல் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற ஓய்வு பெற்றதையடுத்து, இந்தச் செய்தியைக் கேட்டவுடன் தன் முதுகுத் தண்டு சில்லிட்டுப் போனதாக இன்னொரு ஆஸி. வீரர் கிறிஸ் லின் பதற்றமாகத் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆஸ்திரேலிய கோடையில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட்டிற்கும் கிளென் மேக்ஸ்வெல் திரும்ப வழியில்லை என்று தெரிகிறது. எனவே அவருக்குப் பதிலாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா டியார்க்கி ஷார்ட் என்ற வீரரைத் தேர்வு செய்துள்ளது.

கிளென் மேக்ஸ்வெலின் புன்னகை ஒரு முகமூடியே, முகமூடிக்குள் அவர் படும் வேதனைகள் தெரிகிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தார். ஆனால் உண்மையில் அவரது பிரச்சினை என்னவென்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒதுக்கப்படுவது குறித்து அவர் நீண்டகாலமாக ஒரு விதமான மனத்துயரத்தில் இருந்தார் என்று தெரிகிறது.

இந்நிலையில் சக வீரர் கிறிஸ் லின் மேக்ஸ்வெல் முடிவு பற்றி கூறியதாவது:

“கிளென் மேக்ஸ்வெல் செய்தி என் முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்கிறது. அவர் எனது நெருங்கிய நண்பர். ஒருவர் இது போன்று கிரிக்கெட்டிலிருந்து விலகுவது ஒட்டுமொத்த அணியையுமே உணர்ச்சிவயப்பட்ட நிலைக்குத் தள்ளுகிறது. ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவும் வருந்துகிறது. மிக தைரியமாக தன் பிரச்சினையை வெளிப்படையாக கிளென் மேக்ஸ்வெல் கூறியது எனக்கு உண்மையில் பெருமையாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை அவர் உணர வேண்டும். நாங்கள் அனைவரும் அவருக்கு உதவ இருக்கிறோம், என் உதவி தேவைப்பாட்டலும் நானும் தயாராகவே இருக்கிறேன்.

கிரிக்கெட்டிலிருந்து விலகியிருப்பது அவருக்கு ஒரு பெரிய அடிதான் ஆனாலும் அவர் அவசரம் அவசரமாகத் திரும்புதல் கூடாது.

தொழில்பூர்வ கிரிக்கெட்டை ஆடுவது என்பது எளிதானதல்ல, ஒவ்வொன்றுக்கும் பின்னால் கடின உழைப்பு உள்ளது. நிறைய வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவும் அந்தப் பனிமலையின் ஒரு சிறு முகடுதான்”, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x