

புதுடெல்லி
இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி நவம்பர் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு
அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்துவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலிக்கு கடிதம் எழுதியிருந்தனர். டெல்லியில் நிலவி வரும் மோசமான
காற்று சூழ்நிலை 4 மணி நேரம் அணியில் விளையாடுவது வீரர்களை மோசமாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
இதனால், திட்டமிட்டபடி டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று சவுரவ் கங்குலி கூறியதாவது:
முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.