

டோக்கியோ
ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் சோதனை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷிவ தாபா, பூஜா ராணி ஆகியோர் தங்கம் வென்றனர்.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஆடவர் 63 கிலோ பிரிவில் ஷிவ தாபா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் வீரர் சனதாலி டோல்தயேவை வென்றார். மகளிர் 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலியாவின் கேய்ட்லின் பார்க்கரைச் சாய்த்தார். இதன்மூலம் பூஜா ராணிக்கு தங்கம் கிடைத்தது. ஆடவர் 69 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஆசிஷ், ஜப்பானின் செவோன் ஒகாஜவாவிடம் வீழ்ந்தார். இதனால் அவர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது. இந்தியாவின் நிகத் ஜரீன், சிம்ரன்ஜித் கவுர், சுமித் சங்வான், வாஹ்லிபுனியா ஆகியோர் அரை இறுதி வரை முன்னேறி தோல்வி கண்டனர். அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. - பிடிஐ